

ஒரு சம்பவம், 1976-ம் ஆண்டில் நான் கடும் வறுமையில் இருந்த காலம். ஒரு நாள் நானும் தோழர் மூர்த்தியும் பசியுடன் ஒரு நண்பரிடம் சென்றோம். இரண்டு ரூபாய் பெற்றுக்கொண்டு ஒரு சிறிய உணவுக் கடைக்குச் சென்றுகொண்டிருந்தோம். வழியில் தரையில் பரப்பப்பட்ட பழைய புத்தகங்கள் விற்பனைக்காக இருந்தன. அவற்றில், நான் நீண்ட காலமாகத் தேடிய ஒரு புத்தகம் என் கண்ணில் பட்டுத் தொலைத்துவிட்டது! தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய ‘தி மகாத்மா அண்ட் தி இஸம்’. புத்தகம் என் கையில்! உணவு? அவ்வளவுதான்!
புத்தகத்துக்கும் எனக்குமான உறவு அப்படி! இப்போது பெரிதும் சிறிதுமாகச் சுமார் 2,000 புத்தகங்கள் என்னிடம் உள்ளன. இணையத்தில் வாசிப்பதும் சேர்ந்துகொண்டது.
பள்ளியில் பயின்ற காலத்தில் பாடப் புத்தகம் போக, ஒருபுறம் புராணக் கதைப் புத்தகங்களையும், மறுபுறம் அறிவியல் புத்தகங்களையும் விரும்பிப் படித்துவந்தேன் என்பதே ஒரு நகைமுரண்தான்! பிறகு 1966-ம் ஆண்டுவாக்கில் நான் கம்யூனிஸ்ட் ஆனேன். பளீரென்று எனது பார்வை தெளிவானது, விரிவானது, ஆழமானது ஒப்பீட்டளவில்!
ராகுல்ஜியில் தொடங்கி, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் என்று தொடர்ந்து, மற்ற மார்க்சிய ஆசான்கள், தலைவர்கள், ஆய்வாளர்கள் என நீண்டுகொண்டே சென்றது எனது வாசிப்பு. 1980-களில் சின்னக்குத்தூசியின் அறிமுகத்துக்குப் பிறகு பெரியார், அம்பேத்கர் என்று நீண்டுவருகிறது. இடையிடையே கொஞ்சம் கார்க்கி, செகாவ், இன்குலாப், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், சுஜாதா, ஜெயமோகன்…
வாசிப்பினூடே என் எழுத்துப் பணியும் தொடர்கிறது. நக்கீரன் இதழில் ‘மகளிர் தினம் : உண்மை வரலாறு’ எனும் தலைப்பில் எழுதிய குறுந்தொடரை விரிவுபடுத்தித் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட முனைந்துகொண்டிருக்கிறேன்.