

வாசிப்பு இல்லையென்றால் வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டவனாவேன் என்றுதான் சொல்வேன். எனது கல்வியெல்லாம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் கிடைத்ததுதான். சமூகம்குறித்த எனது பார்வையை விசாலப்படுத்திய புத்தகங்களில் முக்கியமானது காரல் மார்க்ஸ் எழுதிய ‘கூலி, விலை, லாபம்’ எனும் சிறிய புத்தகம். அதேபோல், ஏங்கல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ மிகவும் முக்கியமானது. ஏ.கே. வில்வம், அடியார், மு. கருணாநிதி போன்றோர் எழுதிய கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். பாரதியாரின் கவிதைகளைவிடக் கட்டுரைகளுக்கு மாபெரும் ரசிகன் நான்.
தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’, ஜெயகாந்தன் படைப்புகள் என்று முக்கியமான படைப்புகளை வாசித்திருக்கிறேன். சுஜாதா எழுதி ஜெயராஜ் ஓவியம் வரைந்த கதை என்றால், எப்படியாவது வாசித்துவிடுவேன். பரீஸ் வசீலியெவின் ‘அதிகாலையின் அமைதியில்’ நாவலின் தாக்கத்தில்தான் ‘பேராண்மை’ திரைப்படத்தை எடுத்தேன். ‘இயற்கை’ படத்துக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ நாவலில் இருந்த காதல் தாக்கம் தந்தது.
மாக்ஸிம் கார்க்கி எழுதிய, பரவலாக யாரும் அறிந்திராத, ‘பிரம்மச்சாரியின் டயரி’ எனும் குறுநாவல் தன்னிடம் இருப்பதாக, ஈழத் தமிழர்களின் படுகொலையைக் கண்டித்துத் தீக்குளித்த முத்துக்குமார் ஒருமுறை சொன்னார். எனக்குப் பரிசளிப்பதற்காக அந்தப் புத்தகத்தை வாங்கி வைத்திருந்த அந்த இளைஞர், அந்தப் புத்தகத்தை அவரிடமிருந்து நான் வாங்குவதற்கு முன்பே உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது நினைவாக அவரது சகோதரியிடமிருந்து அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டேன். அந்த வகையில் ஒரு மாபெரும் துக்க நிகழ்வின் சாட்சியமாக என்னிடம் தங்கிவிட்டது அந்தப் புத்தகம்.