

புத்தக வாசிப்பை 5-வது படிக்கும் போதே தொடங்கிவிட்டேன். அப் போது தான், மார்க் ட்வைன் எழுதிய ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஹக்கில்பெரி ஃபின்’ எனும் சாகச நாவல் படித்தேன். சிறுவன் ஹக்கில்பெரியும் அவனது நண்பனும் அடிமையுமான கருப்பினச் சிறுவன் ஜிம் ஆகியோரின் சாகசப் பயணத்தில் நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அந்த வயதில் சாகச உலகம் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பைச் சொல்ல வேண்டுமா? பதின்ம வயதுகளில் டி.எச். லாரன்ஸ் எழுதிய நாவல்களை வாசிக்கத் தொடங்கினேன். நாவலின் நடுவே ஆங்காங்கே தென்படும் பாலியல் சார்ந்த விஷயங்கள் அந்த வயதுக்குத் தேவையாக இருந்தன.
இப்படி ஆங்கில நாவல்களை வாசித்துக்கொண்டிருந்த நான், ஒரு கட்டத்தில் தமிழ்ப் படைப்புகளை வாசிக்கத் தொடங்கியபோது, ‘இவன் என்ன பாடப் புத்தகங்களை விட்டுவிட்டுக் கதைப் புத்தகம் படிக்கிறானே’ என்று என் அம்மாவுக்குக் கவலை வந்துவிட்டது.
தமிழில் சுஜாதா தொடங்கி ஜெயகாந்தன், ஜி. நாகராஜன் என்று தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அருந்ததி ராயின் ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவலும், சமூகம் தொடர்பான அவரது கட்டுரைகளும் என்னைக் கவர்ந்தவை. பாவ்லோ கொஹெலோவின் ‘அல்கெமிஸ்ட்’ நாவலில், புதையலைத் தேடிச் செல்லும் சாண்டியாகோ கடைசியில் புதையல் என்பது தனது பயணத்தில் கிடைத்த அனுபவங்கள்தான் என்று உணர்வான்.
எனது ‘மூடர்கூடம்’ படத்தில் வரும் பொம்மையை யாரும் பொருட்படுத்தவே மாட்டார்கள். உண்மையில் அதற்குள்தான் வைரம் இருக்கும். எல்லோரும் அதை எங்கெங்கோ தேடுவார்கள். இது ‘அல்கெமிஸ்ட்’ நாவல் தந்த பாதிப்புதான்!