

சிறு வயதிலிருந்தே புத்தகங்களுடனான சிநேகிதம் தொடங்கி விட்டது. பட வேலைகளில் மூழ்கும் சமயங்களில் மட்டும் வாசிப்புக்குச் சற்று இடைவெளி விட வேண்டிவரும். சமீபத்தில் என்னைக் கலங்கடித்த புத்தகம் பாலகுமாரன் எழுதிய ‘உடையார்’ நாவல். படித்துப் பிரமித்துப்போன நான், பாலகுமாரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது அழுதேவிட்டேன்.
உலக அளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டிய புத்தகம் அது. எனக்கு இருக்கும் பல கோபங்களில் இதுவும் ஒன்று. அந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருடன் சேர்ந்து வேலை பார்த்தவன் நான். ஆராய்ச்சி, கல்வெட்டுச் சான்றுகள் என்று கடும் உழைப்பைக் கோரிய புத்தகம். அந்தப் புத்தகம் என் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளவிட முடியாதது.
வாழ்க்கை என்பது எது? அமைதி என்பது என்ன? இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லும் பதிவு இது. வெறுமே ராஜராஜசோழன் கோயில் கட்டின கதையாக மட்டுமே இல்லாமல், வார்த்தைகளில் கோத்து வடிக்க முடியாத உணர்வுகள் எல்லாம் புதைந்து கிடக்கும் பொக்கிஷம் அது. இப்படி ஒரு பெரிய படைப்பு வெளியாகும்போது, அதை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. எதைத்தான் நாம் பாராட்டப்போகிறோம்?
- ம. மோகன்