

எல்லோரையும் போல், காமிக்ஸ் புத்த கங்களிலிருந்துதான் எனது வாசிப்புலகம் தொடங்கியது. 7-ம் வகுப்பு படித்தபோது அப்பா, 20 காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக்கொடுத்தது நினைவிருக்கிறது. புத்தகம் என்றால், பேய் மாதிரி அலையத் தொடங்கிய என்னை, சிறு வயதிலேயே நூலகங்கள் ஈர்த்துவிட்டன.
ர.சு. நல்லபெருமாள் எழுதிய ‘கல்லுக்குள் ஈரம்’ நாவல் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பை மறக்கவே முடியாது. அகிம்சைக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் இடையில் நீளும் உரையாடல்கள்தான் அந்தப் புத்தகம். தனக்குத் தாக்கம் தந்த புத்தகங்களில் ஒன்றாக அதை வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார். ர.சு. நல்லபெருமாள் எழுதிய ‘போராட்டங்கள்’ நாவலும் அற்புதமான படைப்பு! ஒருமுறை எங்கள் பகுதிக்கு அவர் வந்திருப்பதாகத் தகவல் அறிந்து, அவரைச் சந்திக்க ஓடினேன். அப்போது அவரது கதாபாத்திரங்களும் என்னுடன் ஓடிவருவதாகவே உணர்ந்தேன்.
நடிகர், நடிகைகளிடமும் ‘ஆட்டோ கிராஃப்’வாங்காத நான், அவரிடம் மட்டும்தான் வாங்கியிருக்கிறேன். நுணுக்கமான நடையில், உள்ளார்ந்த மொழியில் தி. ஜானகிராமன் எழுதிய ‘மோகமுள்’, எங்கோ பார்த்த முகங்களை நினைவுக்குக் கொண்டுவந்த சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’, மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ஆப்பிரிக்க-அமெரிக்க முன்னோர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்த அலெக்ஸ் ஹேலியின் ‘தி ரூட்ஸ்’ என்று எனது பட்டியல் மிக நீளமானது.