

மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் அவர்கள் ஐந்து பேரையும் பார்த்தேன். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, ஒரு மகள். ஐந்து பேரும் ஆளுக்கு ஒரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டுவந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்பமே ரயிலில் புத்தகம் படித்துக் கொண்டுவருவதைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.
ஜப்பானில் ரயில் பயணம் செய்தபோது ஏதோ ஓடும் நூலகம் ஒன்றினுள் உட்கார்ந்திருப்பது போலவே இருந்தது. அத்தனை பேர் கையிலும் புத்தகங்கள். சிலர் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு இசை கேட்டபடியே படித்தார்கள்.
ரயில் பயணத்தில் படிப்பது ஒரு சுகம். அதுவும் பகல்நேர ரயில் பயணத்தில் படிப்பது மகிழ்வூட்டும் அனுபவம். இரவில் படிப்பது விழித்தபடியே கனவு காணும் அனுபவம். இரண்டையும் நிறைய அனுபவித்திருக்கிறேன்.
இன்றைய ரயில் பயணங்களில் மாத, வார இதழ்கள், நாளிதழ்கள் படிப்பவர் களே அதிகம் இருக்கிறார்கள். பெரும் பான்மையினர் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்பது, செல்போன் பேசிக்கொண்டே வருவது, வீடியோ கேம் ஆடுவது, அல்லது உறங்கிவிடுவது என நேரத்தை கொல் கிறார்கள். இந்தச் சூழலில் குடும்பமே புத்தகத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டது உற்சாகமாக இருந்தது.
என்ன புத்தகம் படிக்கிறார்கள் எனக் கூர்ந்து கவனித்தேன். தாத்தா படித்துக் கொண்டிருந்த புத்தகம் ‘ராபர்ட் கனிகல்’ எழுதிய ‘அனந்தத்தை அறிந்தவன்’ என்ற கணிதமேதை ராமானுஜன் பற்றிய புத்தகம். பாட்டி படித்துக் கொண்டிருந்த புத்தகம் பைண்டிங் செய்யப்பட்டிருந்தது. அதனால், என்ன புத்தகம் எனத் தெரியவில்லை.
அப்பா படித்துக் கொண்டிருந்தது ‘அமிஷ் திரிபாதி’ எழுதிய ‘மெலுஹா’. அம்மா படித்துக் கொண்டிருந்த புத்தகம் ‘வாழ்விலே ஒரு முறை’ என்ற அசோகமித்திரன் சிறுகதைகள். ஐந்து பேரில் கல்லூரி மாணவி போன்ற தோற்றத்தில் இருந்த மகளின் கையில் இருந்த ஆங்கிலப் புத்தகம் ‘பால்சாக்ஸ் ஆம்லேட்’.
ரயில் நிலையங்களில் தரமான புத்தகக் கடைகள் அரிதாக உள்ளன. பெரும்பான்மை புத்தகக் கடைகளில் வார, மாத இதழ்கள், பொழுதுபோக்குப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்கள் கிடைப்பதில்லை. பயணத்தில் படிப்பதற்கு எளிதாக ‘கிண்டில் பேப்பர் வொயிட்’ போன்ற மின் புத்தகப் படிப்பான்கள் வந்துவிட்டன. ஆனால், அதைப் பலரும் அறிந்திருக்கவில்லை.
‘பால்சாக்ஸ் ஆம்லேட்’ புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன். ஆழ்வார்பேட்டை சங்கரா ஹாலில் நடைபெற்ற மலிவு விலை புத்தகக் காட்சியில் கிடைத்த சுவாரஸ்யமான புத்தகம் அது.
புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ‘பால்சாக்’ தனது படைப்புகளில் என்ன உணவு வகைகளைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்? அன்று இருந்த புகழ்பெற்ற உணவகங்கள் எவை? இலக்கியவாதிகளின் உணவுப் பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தன என்பதைப் பற்றிச் சுவைபட எழுதியிருக்கிறார் ஆன்கா.
நீங்கள் என்ன விரும்பி சாப்பிடுகிறீர் கள்? எங்கே போய்ச் சாப்பிடுகிறீர்கள்? எந்த நேரம் சாப்பிடுகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள், நீங்கள் யார் என்பதைச் சொல்லிவிடுவேன் என்கிறார் ஆன்கா. அப்படித்தான் பால்சாக்கையும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.
இரண்டு விதங்களில் இந்தப் புத்தகம் முக்கியமானது. ஒன்று, பால்சாக்கின் கதாபாத்திரங்கள் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? ஏன் சாப்பிடுகிறார்கள்? இதன் ஊடாக அவர்களின் வசதி அல்லது வறுமை எப்படிச் சுட்டிக் காட்டப்படுகிறது என்பதை நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இப்படி ஆய்வு செய்வது எளிதான விஷயமில்லை. பால்சாக்கின் அத்தனை படைப்புகளையும் எழுத்து எண்ணிப் படித்திருந்தால் மட்டுமே, இது சாத்தியம்.
இரண்டாவது பால்சாக் காலத்தில் பாரீஸின் இலக்கியச் சூழல் எப்படி யிருந்தது? எங்கே விருந்துகள் நடை பெற்றன? பால்சாக்கின் அன்றாட உணவுப் பழக்கம் எப்படியிருந்தது என அறியப்படாத, சுவையான தகவல் கள், நிகழ்வுகளை வெளிப்படுத்தியிருக் கிறார்.
பால்சாக்கை படித்தவர்களுக்குத் தெரியும், அவர் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் விதவிதமான உணவு வகைகளைச் சாப்பிடுவார்கள். அதை ரசித்து ரசித்துப் பால்சாக் எழுதியிருப்பார். படிக்கும்போதே நமக்கு நாக்கில் எச்சில் ஊறும்.
பால்சாக் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிக் குவித்தவர். ஒரு நாளில் 15 மணி நேரம் எழுதினார் என்கிறார்கள். இரவில் நெடுநேரம் எழுதக் கூடியவர் என்பதால், அவரது காலை உணவு எளிமையானது. ஒரு துண்டு மீனும், அவித்த முட்டையும், ரொட்டியும் மட் டுமே சாப்பிடுவார். அதிகம் பசியிருந்தால் கோழி இறைச் சியோ, ஆட்டு இறைச்சியோ உடன் சேர்த்துக்கொள்வது உண்டு.
மதிய உணவை அவர் 4 அல்லது 5 மணிக்குச் சாப்பிடுவார். அதன் பிறகு உறங்கிவிடுவார். நள்ளிரவில் எழுந்துகொண்டு மீண்டும் எழுத ஆரம்பிப்பார்.
கோப்பைக் கோப்பையாக, சூடான பிளாக் காபி குடித்தபடியே விடியும் வரை எழுதுவார். அதுவும் சக்கரை இல்லாத காபி.
வாரத்தில் சில நாட்கள் அவரது பசி அதிகமாகிவிடும். அது போன்ற நாட்களில் பிரபலமான உணவகத்துக்குச் சென்று விதவிதமாக சாப்பிடுவார். சாப்பாட்டுப் பிரியர் என்பதால் விதவிதமான உணவு வகைகளை ஆர்டர் செய்வார்.
அதாவது சூடான சூப், வேகவைத்து சுவையூட்டிய நூறு சிப்பிகள், வெங்காயம், தக்காளி போட்டு வெண்ணெயில் வதக்கிய மாட்டு நாக்கு, இரண்டு முழுக் கோழிகள், 12 ஆட்டு இறைச்சித் துண்டுகள். ஒரு முழு வாத்து. பொரித்த காடை. பொரித்த நாக்கு மீன். 10 ரொட்டித் துண்டுகள், உடன் இனிப்பு வகைகள், பழ வகைகள், நான்கு பாட்டில் ஒயிட் வொயின். இத்தனையும் ஒருவேளையில் சாப்பிட்டு முடித்துவிடுவார்.
பால்சாக் சாப்பிடும் அழகு, வயிறு எனும் பெரிய குகையில் கொண்டுபோய் உணவுகளை ஒளித்து வைப்பது போலி ருக்கும். ஒரு கையில் கத்தி, மறு கையில் முள் கரண்டியுடன் போர்முனையில் சண்டையிடுவதைப் போல ஆவேசமாக உணவைக் கொத்திப் பிடுங்கி, வேக வேகமாகச் சாப்பிடுவார். வாயில் இருந்து ஆவி வருமளவு சூடாகச் சாப்பிடுவார். பழத் துண்டுகளில் ஒன்றை கூட மிச்சம் வைக்க மாட்டார். சாப்பாட்டின் சுவையை அனுபவிப்பது போல இடையிடையே தலையை ஆட்டி சிரித்துக்கொள்வார். வயிற்றில் இடமில்லாமல் போய்விடுமோ என அவ்வப் போது குலுக்கிக் கொள்வது நடனமாடுவது போலிருக்கும்,
சிறுவயதில் வறுமை யில் போதுமான உணவு கிடைக்காமல் அவதிப்பட்ட தற்குப் பழி தீர்த்துக்கொள் வதைப் போல, உணவை அள்ளி திணித்துக்கொள்வார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டுவிட வேண்டும் என்பதே அவரது கொள்கை. சாப்பிட்ட பில்லுக்குப் பதிப்பாளர்தான் பணம் தர வேண்டும். ஆகவே, பில்லை பதிப்பாளருக்கு அனுப்பி வைக்கச் சொல்லிவிடுவார்.
காபி பிரியரான பால்சாக் , இனிப்பு சேர்க்காத கறுப்பு காப்பியை விரும்பிக் குடிப்பார். தனது எழுத்துக்கான தூண்டுதலைத் தருவது காபியே எனக் கூறும் பால்சாக், ஒரு நாளைக்கு 30 முதல் 50 கோப்பை காபி குடித்திருக்கிறார்.
இப்படி பால்சாக் மற்றும் அவரது சமகால இலக்கியவாதிகளின் உணவுப் பழக்கங்களை பிரெஞ்சு தேசத்தின் உணவுப் பண்பாட்டு வரலாற்றுடன் ஒன்றுகலந்து எழுதியிருப்பது இந்தப் புத்தகத்தின் தனித்துவம்.
இலக்கியத்திலும், உணவிலும் ருசி கொண்ட யாராவது ஒருவர் ‘தமிழகத் தின் உணவுப் பண்பாடு எப்படி இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள் ளது’ என ஆராய்ந்து எழுதினால், நிச்சயம் இது போன்ற புத்தகம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைத் தெரிவிக்க: writerramki@gmail.com