

தங்களைச் செதுக்கிக்கொள்ளவும், உலகத்தைப் புரிந்துகொள்ளவும் விரும்புபவர்களுக்குப் புத்தகங்களைவிடப் பெரும் துணை இல்லை. திரைப்படப் பணிகளில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தாலும், வாசிப்புக்காக நேரம் ஒதுக்குகிறவர்களில் நானும் ஒருவன். பல விஷயங்கள்குறித்த தேடுதலுடன், சந்தேகங்களைச் சரிபார்க்கவும் புத்தகங்களைப் புரட்டும் பழக்கமும் என்னிடம் உண்டு. சமீபத்தில் ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன்.
அறம் பற்றிய விழுமியங்களை உள்ளடக்கிய அற்புதமான கதைகள் கொண்ட புத்தகம் அது. சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ வாசித்தபோது, மதுரையில் நாயக்கர் ஆட்சிக்காலம் மற்றும் கள்ளர்களின் வாழ்க்கைப் பின்னணியை அறிய முடிந்தது. சமீபத்தில் சர்ச்சைக் குள்ளான பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’, அவரது மற்றொரு படைப்பான ‘கங்கணம்’ போன்ற புத்தகங்களை வாசித்தேன். எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ எனும் 7 தொகுதிகள் கொண்ட புத்தகத்தையும், சிவனடியானின் ‘இந்திய சரித்திரக் களஞ்சிய'த்தையும் நேரம் கிடைக்கும்போது வாசிக் கிறேன்.
இந்தத் தகவல்களைத் திரட்ட அவர்களுக்கு எத்தனை உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்பதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்துகள் எனக்குப் பிடித்தமானவை. அவரது ‘உயிர்நிலம்' நாவல் மறக்க முடியாத படைப்பு. எனது அடுத்த படமான ‘கிட்னா’, சு. தமிழ்ச்செல்வியின் ‘கீதாரி’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. இலக்கியப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்க வேண்டும் எனும் எனது ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறுகிறது!