

என்னை மிகவும் பாதித்த புத்தகம் ‘பகவத் கீதை’தான். தனது வாழ்வையே மாபெரும் செய்தியாக நம்மிடம் விட்டுச்சென்ற காந்தியின் கைகளில் எந்நேரமும் தவழ்ந்த அந்தப் புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற கேள்வியுடன்தான் அதை வாசிக்கத் தொடங்கினேன். சில விஷயங்கள் எனக்கு ஏற்புடையவை அல்ல என்றாலும், வாழ்க்கை குறித்த சரியான பார்வையை எனக்குத் தந்தது அந்தப் புத்தகம்.
ஆன்மிகம், வரலாறு, இலக்கியம் என்று பல வகையான புத்தகங்களை நான் வாசிப்பேன். கிரேக்கத்தின் பிளேட்டோ, இந்தியாவின் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை. ஓஷோ எழுதிய ‘கிருஷ்ணா’ புத்தகம், கிருஷ்ண அவதாரம் குறித்து ஆழமான பார்வையுடன், முற்றிலும் வேறு வகையான கோணத்தில் எழுதப்பட்டது.
ஓஷோ மூலம்தான் ஜென் தத்துவத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. தற்சமயம், ஒரு பக்கம் ஜென் புத்தகங்களும், மறுபக்கம் சூஃபியிஸம் தொடர்பான புத்தகங்களையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ‘பகவத் கீதை’ ஒரு தொடக்கம் என்றால், புத்தரின் புத்தகங்கள் நம் பார்வையை விசாலமடையச் செய்பவை. 8-ம் வகுப்பு மாணவனாக இருந்தபோது வாசித்த நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ தந்த பாதிப்பை மறக்கவே முடியாது. அறம் சார்ந்த வாழ்க்கையில் எனக்கு ஆழ்ந்த பற்றை ஏற்படுத்தியவை அவருடைய எழுத்துகள்.
தினமும் 10 மணி நேரம் நான் வாசிப்புக்கு ஒதுக்குகிறேன் என்பதைக் கொண்டே வாசிப்பென்பது எனக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.