

சென்னையில் உள்ள பிரபல மான பள்ளி ஒன்றுக்குச் சென் றிருந்தபோது, ‘வேப்பம்பூ எப்படியிருக்கும் ’ என மாணவர்களிடம் கேட்டேன். எல்லோரும், ‘வேப்பம் பூவைக் கண்டதே இல்லை’ என்றார்கள். ‘உங்கள் பள்ளி வளாகத்தின் முன் பாகவே வேம்பு இருக்கிறதே’ எனக் கேட்டேன்.
‘அந்த மரங்கள் புழுதி படிந்து அழுக்காக இருப்பதால் அதைத் தொடக்கூடாது என ஆசிரியர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே, அருகிலே போக மாட்டோம்’ என மாணவர்கள் பதில் அளித்தார்கள். அதைவிட வும், ‘ஏன் இவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும்’ என்று வேறு கேள்வி கேட்டார்கள்.
நான் பள்ளியில் படித்த நாட்களில் ‘இயற்கைச் சுற்றுலா’ என அழைத்துப் போய் காட்டில் உள்ள மரங்கள், பூக்கள், செடிகள் பற்றி மாணவர்களுக்கு நேரடி அறிமுகம் செய்துவைப்பார்கள். அத்துடன் மாணவர்களே குழுவாக ஒன்றுசேர்ந்து விதவிதமான பூக்களையும் விதைகளையும் சேகரம் செய்து ஒப்படைக்க வேண்டும். நகரங்களில் படிக்கும் எத்தனை மாணவர்கள் இது போன்று வனஉலா போயிருப்பார்கள் என்று தெரியவில்லை.
வேப்பம்பூ அறியாத, புளியம்பழம் அறியாத, ஆலும் அரசும், கடம்பும் அறியாத இந்தப் பிள்ளைகளுக்கு ‘மரம்’ என்பது வெறும்பெயர் மட்டுமே. கல்விப்புலம் இப்படி பிள்ளைகளை உருவாக்கி வருவது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கமோ மரம் நடுவதையும் வளர்ப்பதையும் தனது வாழ் வாகக் கொண்டிருக்கும் மனிதர்களும் நம்மோடுதான் இருக்கிறார்கள்.
ஈரோடு அருகே உள்ள காஞ்சிக் கோவிலில் நெசவுத் தொழில் செய்துவருபவர் நாகராஜன். இவர் தனது 17-வது வயதில் இருந்து கடந்த 40 வருடங் களுக்கும் மேலாக, மரம் நடுவதையும், அதைப் பேணி வளர்ப்பதையுமே தனது அன்றாடப் பணியாக செய்துவருகிறார். அவரைக் காண்பதற்காக ஒருமுறை நண்பர்களுடன் சென்றிருந்தேன். எளிய ஓட்டு வீடு. இன்முகத்துடன் வரவேற்று தான் நட்டு வைத்த செடிகள் எல்லாம் இன்று எவ்வளவு பெரிய மரங்களாக வளர்ந்து நிற்கின்றன என்பதைச் சுற்றிக் காட்டினார்.
நாகராஜனின் சிறப்பு, தானே விதைகளைத் தேர்வுசெய்து முளைக்க வைத்து, அந்தச் சிறு செடிகளைப் பள்ளி மாணவர்களின் துணையோடு இடம் தேடி நட்டு வைத்து, செடிகள் கிளைத்து வளரும்வரை தானே நீர் ஊற்றி, அதைச் சுற்றிலும் வேலி அமைத்து சீர்பட வளர்த்தெடுப்பதுதான். இப்படி அவர் வைத்து, வளர்த்துள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் இன்று மலைக்கோவிலைச் சுற்றி தோப்பாக வளர்ந்து நிற்கின்றன.
ஆல், அரசு, புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையான மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். ஏழ்மையான நிலையிலும் எவரது உதவியையும் எதிர்பாராமல் இவர் தொடர்ந்து மரங்களை நட்டு பராமரித்து வருவதோடு, இது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இவரைப் போலவே சத்தியமங்கலம் அருகில் உள்ள வேட்டுவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் அய்யா சாமி, தனி ஆளாக 3 ஆயிரம் மரங் களுக்கும் மேல் நட்டு, பராமரித்து வளர்த்திருக்கிறார்.
இப்படி மரங்களை நேசிக்கும் மனிதர்கள் சத்தமின்றிச் செயலாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். தண்ணீர், காற்று, நிலம் என எல்லாவற்றையும் சுய லாபங்களுக்காக மாசுபடுத்தி வருகிற நம் காலத்தில், மரங்களைக் காக்கவும் வளர்க்கவும், அதுகுறித்து அறிந்துகொள்ள வேண்டி யது நம் அனைவரின் கடமையாகும்.
இயற்கை ஆர்வலரான மேனகா காந்தி மரங்களின் சிறப்புகள் பற்றி எழுதிய ‘பிரம்மாஸ் ஹேர்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை, புதுச்சேரியின் ‘சண்டே பஜார்’ பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதுவை - நேரு வீதியில் இந்தச் சாலையோரப் புத்தகக் கடைகள் போடப்படு கின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு என பல்வேறு மொழிகளின் புத்தகங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. மலிவு விலையில் அரிய புத்தகங்களை இங்கே வாங்க முடியும். இதற்காகவே சில ஞாயிற்றுக்கிழமை களில் புதுச்சேரி போயிருக்கிறேன்.
‘பிரம்மாவின் தலைமுடிக் கற்றை கள்தான் பூமியில் மரங்களாக உருக் கொண்டுள்ளன’ என்றொரு ஐதீகம் உண்டு. அதையே மேனகா காந்தி தனது புத்தகத்துக்குத் தலைப்பாகக் கொடுத்திருக்கிறார். பாரிஜாதம்… இரவில் பூக்கும் மலர். இதன் பூக்களைக் கொண்டு சாயம் தயாரித்து, புத்தத் துறவிகள் ஆரஞ்சு வண்ண உடைகளைப் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள். பாரிஜாதம் ஏன் இரவில் மலர்கிறது என்பதற்கு ஒரு கதையே இருக்கிறது. இது விஷ்ணு புராணத்தில் சொல் லப்பட்ட கதை.
பாரிஜாதா என்றோர் அழகான இளவரசி இருந்தாள். அவள் சூரியன் மீது காதல் கொண்டாள். ‘பூமியை விட்டு என்னோடு வந்து விடு’ என சூரியன் அழைத்த காரணத்தால், அவள் சூரியனைப் பின்தொடர்ந்து போக ஆரம்பித்தாள். ஆனால், சூரியனைப் பின்தொடர முடியவில்லை. சூரியன் அவளைக் கைவிட்டு வானில் மறைந்துவிட்டது. பாரிஜாதா இந்த வேதனையைத் தாங்க முடியாமல் இறந்து போனாள். அவளது சாம்பலில் இருந்து உருவா னதே பாரிஜாதம். ஆகவே, அது சூரியனைக் காண விரும்பாமல் இரவில் பூக்கிறது. சூரியனின் முதல் கிரணம் வந்தவுடன் பூ உதிர்ந்துவிடுகிறதாம்.
இப்படி மரங்களைப் பற்றிய புராண, தொன்ம கதைகளை எளிய மொழியில் இந்தப் புத்தகத்தில் எடுத்துச் சொல்கிறார் மேனகா காந்தி. இவை அறிவியல்பூர்வமானவை இல்லை என்றபோதும், கற்பனையைத் தூண்டும் கதைகள் என்பதில் சந்தேகமில்லை.
புளிய மரத்தைப் பற்றி விவரிக்கும் போது, அதன் அடியில் யாரும் படுத்து உறங்கக் கூடாது எனக் கூறுவதோடு, அக்பரின் சபையில் இருந்த பிரபல இசைக் கலைஞர் தான்சேனுடைய கல்லறை அருகில் உள்ள புளியமரத்தின் இலைகளைப் பறித்துத் தின்றால், நல்ல குரல்வளம் கிடைக்கும் என சங்கீதம் படிப்பவர்கள் நம்புகிறார்கள் என்ற சுவாரஸ்யமான விஷயத்தையும் சுட்டிக் காட்டுகிறார்.
புளிய மரத்தின் இலைகள் ஏன் இவ்வளவு சிறியதாக உள்ளன என்பதற்கு ஒரு கதை சொல்கிறார். முன்னொரு காலத்தில் சிவனுக்கும் பதுமாசூரனுக் கும் சண்டை நடந்தது. அப்போது அசுரன் புளிய மரத்தில் ஏறி ஒளிந்துகொண்டு விட்டான். அடர்ந்த இலைகளுக்குள் எங்கே ஒளிந்திருக்கிறான் என சிவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, அவர் தனது முக்கண்ணைத் திறந்து காட்டி, மரத்தின் இலைகளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்தார். பதுமாசூரன் பிடிப்பட்டு இறந்துபோனான். அதன் பிறகே புளிய மரத்தின் இலைகள் சிறியதாக மாறின எனக் கூறுகிறார் மேனகா காந்தி.
இப்படி ஆலமரம், வில்வம், தேக்கு, வாழை, அரசு, நாவல் என 30 வகையான மரங்கள் குறித்தும், பல்வகை மலர்ச் செடிகள் பற்றியுமான செய்திகள், கதைகள், சித்திரங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் மரங்களின் அறிவியல் பெயருடன், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வழங்கும் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மரங்கள் குறித்து மாணவர்களும் இளைய தலைமுறையினரும் அக்கறை செலுத்த இதுபோன்ற புத்தகங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. ‘மரம் வைப்பவனுக்குக் கூலி கிடையாது. அதை வெட்டுபவனுக்கும் விற்பவனுக்கும் மட்டுமே பணம் கிடைக்கிறது’ என்றொரு வாசகத்தை இணையத்தில் படித்தேன். இதுதான் சமூகநிலை என்பது வருத்தமாகவே இருக்கிறது.
- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com