

மெல்ல மெல்ல வாசிப்பு தனி நபர்களின் அடையாளம் என்று நாம் உணர ஆரம்பித்திருக்கிறோம். புத்தகங்களைப் பரிசளிப்பதில் தொடங்கி, புத்தக விமர்சனக் கூட்டங்கள், இலக்கியக் கூடல்கள், சமூக வலைதளங்களில் பகிர்வுகள் என்று வாசிப்பு சார்ந்த விஷயங்கள் பரவலாகிவருகின்றன. ஆனால், கூர்ந்து கவனித்தால் இவை எல்லாமும் வீட்டுக்கு வெளியே பொது இடங்களில் மட்டுமே நடப்பதை உணர முடியும். நம்முடைய வீட்டுச் சூழல் என்ன? வீடுகளில் புத்தகங்களை முன்வைத்துப் பேசும் கலாச்சாரம் வளர்வது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் வாசிப்புக்கு ஏற்ற சூழல் இருக்கிறதா?
வீட்டுக்குள் நுழைந்ததும் முன்னறையின் முகப்பில் பரிசுப் பொருட்கள், பொம்மைகள், அழகுப் பொருட்கள் சூழ்ந்திருக்க.. நடுவில் தொலைக்காட்சிதான் பிரதானமாக இருக்கிறது. சில வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் உண்டு. அந்தஸ்தைச் சொல்ல, முன்னறையில் ஒன்று, படுக்கையறையில் ஒன்று, சிறுவர்கள் அறையில் ஒன்று! சரி, புத்தகங்களுக்கான இடம் எங்கே?
பல வீடுகளில் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திப் பாடப்புத்தகத்தைப் படிக்கவைக்கும் சமூகமும் நாம்தான். வீட்டில் நாளெல்லாம் ஓடும் தொலைக்காட்சியின் முன்னால் ஒரு குழந்தைக்குப் புத்தகங்கள் மேல் எப்படி ஆசை வரும்? மேலும் புத்தகங்களை வாசிப்பதற்கு என்று அமைதியையும் தனிமையையும் ஒரு நல்ல சூழலையும் உருவாக்கித் தர வேண்டாமா?
வீட்டில் வாசிக்க என்று ஒரு தனியறை அவசியம் இருக்க வேண்டும். குடும்பத்தினர் அங்கு அமர்ந்து வாசிக்கவும், புத்தகங்களை வைக்கவும் அலமாரிகள் வேண்டும். அலமாரிகளில் புத்தகங்களுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும்.
மேலைநாடுகளில் சிறுவர் இலக்கியம், பதின்பருவ இலக்கியம் என்கிற பிரிவுகளே உண்டு. குழந்தைகள் சிறுவர்களாக இருக் கும்போது கதைப் புத்தகம் வாங்கிக்கொடுக் கும் நாம், பதின்பருவத்தில் அப்போதைய அவர்களுடைய ஆர்வங்களுக்கேற்ற புத்தகங்களையும் வாங்கித் தர வேண்டும்.
அன்றாடம் அல்லது வாரத்துக்கு ஓரிரு நாட்களேனும் அவரவர் வாசித்தவை குறித்து குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் உரையாட வேண்டும். தனக்குப் பிடித்த புத்தகங்கள் குறித்து சிறுவர்களோடு பெரியவர்கள் பேசும்போது வாசிப்பு தொடர்பில் பரஸ்பரப் புரிதல்கள் மேம்படும்.
குழந்தைகளும் பெரியவர்களும் ஒருவருக்கொருவர் புத்தகங்களைப் பரிசாக பரிமாறிக்கொள்ளலாம். சிறுவர்கள்/சிறுமிகளின் பிறந்த நாளில் விலையுயர்ந்த பொருட்கள் வாங்கப்படுகின்றன. அவற்றில் புத்தகங்களுக்கும் இடமளிக்கலாம்.
பன்னிரண்டாம் வகுப்புவரை வேறு எதையும் படிக்காமல் வளர்ந்த ஒரு சமூகம், திடீரென வாசிப்பு தொடர்பில் பேசும்போது மலைத்துப்போவதுதான் நம்மூரில் பெரிதும் நடக்கிறது. சமூக மாற்றம் தொடர்பில் நாமெல்லாம் நிறையவே பேசுகிறோம். புத்தக வாசிப்பு அதற்கான நல்ல நுழைவாயில்!
- கே.ஜே.அசோக்குமார், எழுத்தாளர், தொடர்புக்கு: kuppa.ashok@gmail.com