

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே’முன்தோன்றியதாக நாம் சொல்லிக்கொள்ளும் நம் தமிழ்க் குடியின் தாய்மொழியான தமிழின் பெருமையை, வெறும் வாய்ப் பேச்சினால் மட்டும் வரலாற்றில் நிலைத்திருக்கச் செய்வது இயலாத காரியம். தொன்மையான மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழியின் சிறப்பைப் பழந்தமிழ் இலக்கிய நூல்களின் வழியாக நிறுவும் பணியைச் செம்மையாக செய்தவர் மா. இராசமாணிக்கனார். மதுரை மாவட்ட ஆசிரியர்களிடம் நூலாசிரியர் ஆற்றிய அரிய சொற்பொழிவுகளின் சுருக்கப்பட்ட எழுத்து வடிவமே இந்நூல். மொழியின் தோற்றம் வளர்ச்சி இலக்கியம் - இலக்கியத் தோற்றம் ஆகியவை குறித்த வரலாற்றுத் தரவுகள் முக்கியமானவை. தொல்காப்பியம் தொடங்கி, திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளை விவரித்துள்ள விதம் நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு புது அர்த்தம் சேர்ப்பதாய் உள்ளது.
-மு. முருகேஷ்