Last Updated : 04 Mar, 2017 10:22 AM

 

Published : 04 Mar 2017 10:22 AM
Last Updated : 04 Mar 2017 10:22 AM

ஸ்டாலினுக்காக வாங்கினேன், ஆனா நான் படிக்கப்போறேன்!

தன் பிறந்த நாளுக்கு சால்வைகள் வேண்டாம், அதற்குப் பதில் புத்தகங்களைப் பரிசாகக் கொடுங்கள் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு, பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் மட்டுமல்ல தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

“இந்த உலகில் பயனற்ற ஒரு துணி உண்டென்றால் அது சால்வைதான். தலை துவட்டவும் உதவாது, கட்டிக் குளிக்கவும் பயன்படாது. விரித்துப் படுத்தாலும் முள்ளாகக் குத்தும். இதன் ஒரே பயன் ‘அணிவித்து’ மகிழ்வதுதான். இனிமேல், இந்தத் தொந்தரவெல்லாம் இல்லை. எங்களுக்கும் புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தால், மேடையில் புதிய விஷயங்களைப் பேச உதவும்” என்று சொன்னார் தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர்களில் ஒருவரான வி.பி.ஆர். இளம்பரிதி.

“பொதுவாக சால்வை, மலர்க்கொத்தோடு வருபவர்கள் தாங்களே ஸ்டாலினிடம் அதைக் கொடுத்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பு வார்கள். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கிக் கசங்கிப் போன சட்டையோடு நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் பலர், ‘அண்ணே இந்தப் புத்தகத்தை தளபதியிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர் கையில் போய்ச்சேர்ந் தால் போதும்’ என்று முன்னே நின்றவர்களிடம் கொடுத் தனுப்பினார்கள். அந்தப் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள் அதைப் பார்த்திருந்தால், நெகிழ்ந்து போயிருப்பார்கள்” என்கிறார் திமுகவின் சட்டத்துறை செயலாளர் ஐ.பரந்தாமன்.

மாவட்டச் செயலாளர்கள், இலக்கிய அணி நிர்வாகிகளிலேயே சிலர் புத்தக வாசனையின்றி இருக்கிற சூழலில், ஸ்டாலினின் அறிவிப்பால் சிலர் புதிதாக புத்தகங்களை வாசிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

“ஸ்டாலின் பிறந்த நாளுக்காக மெட்ராஸ் போனவுடனே, ஹிக்கின்பாதாம்ஸ் கடையில, நெஞ்சுக்கு நீதி மூணு பாகம் வாங்குனேன். ‘அது தலைவரோட சுயசரிதை மாதிரி, தமிழ்நாட்டு வரலாற்றையும் தெரிஞ்சக் கலாம்’னு முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு அண்ணாச்சி சொன்னாங்க. அதனால, மூணாவது பாகத்தை மட்டும் பரிசளிச்சிட்டு, மிச்ச ரெண்டையும் எனக்குன்னு கொண்டுவந்திட்டேன். ரயில்ல வரும்போதே கொஞ்சம் படிச்சேன். தலைவர் எழுதுன எல்லாப் புத்தகத்தையும் வாங்கிப் படிக்கணும்னு ஆர்வம் வந்திருச்சி” என்கிறார் ராதாபுரம் கிளைச் செயலாளர் கோவிந்தன்.

அறிவாலயத்துக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது பாரதி புத்தகாலயம். கல்யாண மண்டப வாசலில் இருக்கும் பெட்டிக் கடையில் மொய்கவர் வாங்கக் குவிவது போல, இங்கே புத்தகம் வாங்கக் கரை வேட்டிகள் குவிந்திருக்கின்றன. “ஸ்டாலின் அறிவிப்பால் நாங்களும் புத்தக விற்பனைக்குத் தயாராக இருந்தோம். மார்ச் 1-ம் தேதி காலை 7.30-க்கே விற்பனையைத் தொடங்கிவிட்டோம். மார்ச் 1-ஐ முன்னிட்டு எங்கள் கடையில் சுமார் 12 ஆயிரத்துக்குப் புத்தகங்கள் விற்பனையாகின. எங்களது சராசரி தினசரி விற்பனை 3 ஆயிரம் என்பதோடு இதை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்” என்றார் மேலாளர் நாகராஜன்.

அதே அண்ணா சாலையில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் கடை முதுநிலை மேலாளர் ஹேமலதா, “இந்த இரண்டு நாட்களையும் சிறப்பு விற்பனை நாட்கள் என்று சொல்லலாம். நிறைய வெளியூர் வாசகர்கள் வந்தார்கள். விலை உயர்ந்த, தரமான புத்தகங்களையே தேர்வு செய்தார்கள். மார்ச் 1-ம் தேதி காலை 8 மணிக்கெல்லாம், எப்போது கடை திறப்பீர்கள் என்று கேட்டு ஒரு கூட்டம் கடை வாசலிலேயே நின்றது. இதற்குக் காரணமான ஸ்டாலினுக்கு நன்றி!” என்றார்.

சென்னையில் மட்டுமல்ல வெளியூர்க் கடைகளிலும் புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள சர்வோதயா இலக்கியப் பண்ணையிலும், மல்லிகை புக் சென்டரிலும்கூட கரை வேட்டி கட்டிய பலர் புத்தகம் வாங்கிச் சென்றிருக் கிறார்கள். அதில் ஒருவர் தலைமைச் செயற்குழு மா. ஜெயராம், “புத்தகக் கடைக்குப் போனதும் நாம வித்தியாசமா மதுரையப் பத்துன புத்தகம் வாங்குவோம்பான்னு சொல்லி, சு. வெங்கடேசன் எழுதுன ‘காவல் கோட்டம்’ நாவலும், ‘மீனாட்சியம்மன் கோயில் வரலாறு’ம் வாங்கிட்டுப் போனேன். வழக்கமா ‘கோனார் கடையில கறிதோசை சாப்பிடுற இடத்துலதான் உங்களப் பார்ப்பேன்.

இன்னைக்குப் புத்தகத்தைப் புரட்டுறதப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு’ன்னு கடைக்காரர் சொன்னாரு. பெருமையா இருந்துச்சி. இனிமே அடிக்கடி வருவோம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அது மட்டுமா, சென்னைக்குப் போயிட்டு வர்ற செலவுல மேற்கொண்டு ஒரு புத்தகம் வாங்கிறலாம்னு சொல்லி நம்ம பயல்க பல பேரு புத்தகம் வாங்கி அறிவாலயத்துக்கு கொரியர் அனுப்பிட்டாங்க” என்று சொன்னார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரனும் ஸ்டாலினுக்குப் புத்தகங் களைப் பரிசளித்துவிட்டு வந்திருக்கிறார். அவரிடம் பேசியபோது, “லட்சக் கணக்கான தொண்டர்களைக் கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவரின் ஒரு சொல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கண் கூடாக காண முடிந்தது. மார்ச் 1 அன்று அண்ணா அறிவாலயமே ஒரு புத்தகக் கண்காட்சிபோல விழாக்கோலம் பூண்டிருந்தது. எல்லோர் கையிலும் கட்டுக்கட்டாகப் புத்தகங்கள். அன்று சென்னையில் எல்லா புத்தக் கடைகளிலும் சேர்த்துப் பல லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாயின. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் புத்தாண்டில் புத்தகப் பரிசுகளை வழங்குவதை ஒரு இயக்கமாக்கியது. தி.மு.க. இன்று புத்தகங்களை ஒரு பேரியக்கமாக ஆக்கிக்கொண்டிருக்கிறது” என்றார்.

சென்னை, வாலாஜா சாலையில் உள்ள ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகத்தில் உள்ள விற்பனையகத் தில் ‘தி இந்து’வின் தமிழ் நூல்களை வாங்குவதற்கும் திமுகவினர் நிறைய பேர் வந்தார்கள். இந்த ஆரோக்கிய மான புத்தகக் கலாச்சாரம் என்றும் தொடரட்டும்.

- கே.கே. மகேஷ்,
தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x