

சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது! 2017-ம் ஆண்டை இதைவிடப் பெரிய கொண்டாட்டத் துடன் வரவேற்க முடியாதல்லவா! தமிழகத்தின் பல பகுதிகளில் புத்தகக் காட்சிகள் நடந்தாலும் சென்னை புத்தகக் காட்சிக்குக் கூடுதல் விசேஷம் இருக்கவே செய்கிறது. 2015, 2016 ஆகிய ஆண்டுகளின் வடுக்கள் நெஞ்சில் இருந்தாலும் அவற்றையும் மீறிய உற்சாகத்துடன் சென்னைப் புத்தக காட்சி தொடங்கியிருக்கிறது.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 40-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, இந்த முறை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) நடத்தப்படுகிறது. நேற்று (ஜன-6) தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி ஜன-19 வரை நடக்கிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக வேட்டையாடலாம்!
2015 டிசம்பரில் சென்னை மழை வெள்ளத்தைத் தொடர்ந்து 2016 ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடத்த முடியாததால், ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டோ வழக்கம்போல் ஜனவரி மாதமே புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. சுமார் 700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகள், 1 கோடிப் புத்தகங்கள் என்று பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தப் புத்தகக் காட்சியில், சுமார் ரூ.20 கோடிக்கும் மேல் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சிகள்
நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்துத் தலைமை உரையாற்றினார் தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி செட்டி, திரைப்பட இயக்குநர் வஸந்த் எஸ்.சாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பபாசி டைரக்டரியின் முதல் பிரதியைக் கல்வி அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் வெளியிட, தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். பபாசி செயலாளர் க.சு. புகழேந்தி நன்றியுரை வழங்கினார்.
விருதுகள்
தொடக்க நிகழ்ச்சியில், சிறந்த தமிழறிஞருக்கான 'பாரி செல்லப்பனார் விருது' கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான 'ஆர்.கே. நாராயண் விருது' பேராசிரியர் எஸ்.ஏ.சங்கர நாராயணனுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான 'நெல்லை சு. முத்து விருது' டாக்டர் எஸ்.நரேந்திரனுக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான 'குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது' ப்ரியா பாலுவுக்கும், சிறந்த பதிப்பாளருக்கான 'பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது' அல்லயன்ஸ் பதிப்பகத்துக்கும், சிறந்த விற்பனையாளருக்கான 'பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது' மெட்ராஸ் புக் ஹவுஸுக்கும், 'சிறந்த நூலகர் விருது' கு. தாமோதரனுக்கும் வழங்கப்பட்டன.
புத்தகக் கலாச்சாரம் செழுமைப்படுவதற்கு புத்தகக் காட்சிகள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வெற்றியை உறுதிப்படுத்தும் விதம் முதல் நாளிலேயே வாசகர்கள் திரண்டு வந்தது ஊக்கமூட்டும் காட்சி! வாருங்கள் வாசகர்களே பெரு வெற்றியடையச் செய்வோம் இந்தப் புத்தகக் காட்சியை!
*
'தி இந்து' அரங்கு: 43 & 44
இந்தப் புத்தகக் காட்சியில் 'தி இந்து' அரங்கு (எண்:43 & 44) வாசகர்களை பெருமகிழ் வுடன் வரவேற்கிறது. 'ஆங்கிலம் அறிவோம்', 'பெண் எனும் பகடைக்காய்', 'தொழில் ரகசியம்', 'வீடில்லா புத்தகம்', 'வேலையை காதலி', 'கடல்', 'மெல்லத் தமிழன் இனி', 'காற்றில் கலந்த இசை' போன்ற நூல்களுடன் புதிய புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல் கலாமின் இறுதி நூலான 'என் வாழ்வில் திருக்குறள்', அசோகமித்திரனின் 'மவுனத்தின் புன்னகை', கருந்தேள் ராஜேஷின் 'சினிமா ரசனை', ஆயிஷா நடராஜனின் 'என்னைச் செதுக்கிய மாணவர்கள்' போன்ற புதிய வெளியீடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 'தி இந்து'வின் ஆங்கில நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.