

பெருந்தேவியின் ‘அழுக்கு சாக்ஸ்’ (விருட்சம் வெளியீடு) எனும் கவிதைத் தொகுப்பைச் சமீபத்தில் படித்தேன். அயல் நாடுகளில் வசிக்கும் ஒரு இந்தியர் எதிர்கொள்ளும் நகரமயமாக்கலும் அதன் தனிமையும் அபத்தங்களும் இத்தொகுப்பின் பேசுபொருட்கள். பேஸ்புக் பாணியில் ஹேஷ்டேக்குகளுடனும் கவிதை இந்தத் தொகுப்பில் உண்டு.
சமீபமாக எனக்குப் புது வடிவங்களில் எழுதிப்பார்க்க ஆசை. உதாரணமாக ஒரு மொபைல் விளையாட்டின் வடிவில் ஒரு புராணக் கதையை எழுதினால்? இப்படி பல பரீட்சார்த்தத் திட்டங்கள் வைத்திருக்கிறேன். ஒரு நல்ல கதைக்குள் ஒரு தீராத மர்மம் இருக்க வேண்டும். அப்படி ஒரு முடிச்சு அமைந்துவிட்டால் உடனே அமர்ந்து எழுத ஆரம்பித்துவிடுவேன். அதுவரை நான் நீரைப் பார்த்திருக்கும் கொக்கு!