Last Updated : 18 Mar, 2017 10:26 AM

 

Published : 18 Mar 2017 10:26 AM
Last Updated : 18 Mar 2017 10:26 AM

நூல் வெளி: புத்தகத் தேர்வு எனும் கலை

புத்தகத் தேர்வு ஒருவருக்கு உடனே நடந்துவிடுகிறது என்றால் அவர் அவ்வளவாக நல்ல வாசகர் இல்லை என்றும் சொல்லலாம். முன்பு பரவலான வாசிப்புப் பழக்கமும், புத்தகம் வாங்கும் பழக்கமும் இல்லாத சமயங்களில் ஒரு புத்தகத்தின் தேவை நமக்கு நன்கு தெரிந்துவிட்டிருக்கும். நேராகச் சென்று அதை மட்டும் வாங்கிக் கொண்டு வந்துவிடலாம். செவிவழிச் செய்திகளே நமக்குப் போதுமானதாக இருக்கும். அத்தோடு புத்தகங்களின் எண்ணிக்கைக் குறைவும் புத்தகத் தேர்வை எளிதாக்கிவிடும்.

ஆனால், இன்று அப்படி அல்ல. புத்தகங்கள் பன்மடங்கு பெருகிவிட்டன. புதிய புத்தகங்களின் வரவும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. அரிய புத்தகங்கள், மறுபதிப்பு காணாத புத்தகங்கள் மீண்டும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சில நேரங்களில் பதிப்பகங்கள் தேர்வுக்குப் பின்னே, ஆசிரியர்களின் தேர்வுக்குப் பின்னே, புத்தகங்களின் தலைப்பைக் கொண்டுதான் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. உண்மையில் அது நேர்மாறாகத்தான் இருக்க வேண்டும். இதனாலேயே புத்தகங்களின் தேர்வு அவசியமாகிறது.

கதையல்லாத இலக்கிய வகைப் புத்தகங்களை ஒப்பீட்டளவில் எளிதில் தேர்வு செய்துவிட முடியும். ஒரு நூலின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் துணைநூல்கள் பட்டியல் போதும். அதைக் கொண்டு நாம் மேலும் அந்தத் துறை நூல்களைப் படித்துவிடமுடியும். உதாரணமாக ராஜராஜனைப் பற்றி படிக்க நினைக்கிறீர்கள். அவரைப் பற்றி ஏதோ ஒரு புத்தகம் வாங்கினால் போதும்; அதில் உள்ள துணை நூற்பட்டியல் கொண்டு அதில் ஒன்றைத் தேர்வு செய்து அதிலிருந்து மேலும் படித்துக்கொண்டே செல்லலாம். ஓராண்டுக்குள் நமக்கு எவ்வளவு புத்தங்கள் வந்துள்ளன, அதில் முக்கியமானவை எவை என்கிற புரிதல் வந்துவிடும்.

புனைவு நூல்களை வாங்கிவிட அப்படி எதுவும் இல்லை. வாசிப்புப் பின்புலமும் மற்றவர்களின் பரிந்துரைகளும் மட்டுமே பயன்படும். துணை நூற்பட்டியல் எதுவும் அதில் இணைக்கப்பட்டிருக்காது. எவ்வளவுதான் பரந்துபட்ட வாசிப்பாக இருந்தாலும் விடுபடல்களும் தேடல்களின் குறையும் இருந்துகொண்டிருக்கும். நம் வாசிப்பு ஒருசார்பு உடையதாகவும் அமைந்துவிடும். அப்படியான சமயங்களில் பரிந்துரைகள் நமக்குப் பெரிதும் பயன்படும். ஒரே நேரத்தில் எல்லா நூல்களையும் வாசிப்பது சாத்தியமுமில்லை.

முன்பு, க.நா.சு., சி.சு. செல்லப்பா போன்றவர்களின் பரிந்துரைகள் இருந்தன. இன்று சி. மோகன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களின் கணிப்புகள் பெரும்பாலும் சரியாகப் பொருந்திவருகின்றன. வேறு சிலரும் பரிந்துரைகள் செய்திருக்கிறார்கள்.

புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் ஒருவர் முதலில் ஒரு பட்டியலைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அது, உங்களுக்குப் பிடித்த பல்வேறு பரிந்துரைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலாக இருக்க வேண்டும். இப்படித் தேர்வு செய்யும்போது காலவரிசைப்படியும், கோட்பாடு, ரசனை சார்ந்தும் தேர்வு செய்ய முடியும். வாசிப்பு ஒரு தொடர் பயணம் போன்றது. பயணத்தில் நமக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதுபோல பட்டியல் ஒரு பயணக் கையேடு போன்றது. கையேடு இல்லா பயணம், நம் பயண நேரத்தை, அதன் புரிதல்களைச் சிதைத்துவிடுவது போல முழுமையான வாசிப்பை விரும்புகிறவர் இதைத் தவிர்ப்பது அவரது வாசிப்பின் அளவைக் குறைக்கவே செய்கிறது. ஆகவே, வாசிப்புப் பயணத்துக்கு முன்னால் ஒரு கையேட்டைத் தயார் செய்வது அவசியம்.

- கே.ஜே. அசோக்குமார்,
எழுத்தாளர்,
தொடர்புக்கு: kuppa.ashok@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x