Last Updated : 15 Apr, 2017 10:51 AM

 

Published : 15 Apr 2017 10:51 AM
Last Updated : 15 Apr 2017 10:51 AM

வாசிப்பைக் கொண்டாடும் ஆயிரம் புத்தகக் காட்சிகள்!

உலகப் புத்தக தினம் ஏப்ரல் - 23

தமிழகத்தின் புத்தகக் காதலர்களுக்குப் புத்தகக் காட்சியைவிடப் பெருமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் வேறு ஏதும் இருக்க முடியாது. சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் அலைமோதும் கூட்டமே இதற்குச் சான்று. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புத்தகக் காட்சிகளுக்கே இப்படியென்றால் ஒரே சமயத்தில் ஆயிரம் புத்தகக் காட்சி நடைபெற்றால் எப்படி இருக்கும்! ஆம், ஏப்ரல் 23-ம் தேதியன்று கொண்டாடப்படவிருக்கும் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு இந்தப் புத்தகக் காட்சிகள் நடத்தப்படவிருக்கின்றன.

பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச ஆகிய அமைப்புகள் முன்னின்று இந்தப் புத்தகக் காட்சி களை நடத்துகின்றன. சி.ஐ.டி.யு, இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய இன்ஷுரன்ஸ் ஊழியர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளும் ஆங் காங்கே கைகோத்திருக்கின்றன. இன்று (15.04.2017) தொடங்கும் இந்தப் புத்தகக் காட்சிகள் மே 5-ம் தேதிவரை நடைபெறுகின்றன.

பாரதி புத்தகாலயத்தின் நாகராஜனுடன் பேசினோம். “2002-ல் ஆரம்பித்து ஆண்டுதோறும் சிறிய அளவில் இதுபோன்று புத்தகக் காட்சிகள் நடத்தியிருக்கிறோம். கடந்த ஆண்டு உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு 500 இடங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தியது இந்த ஆண்டுக்கான முன்னனுபவத்தைக் கொடுத்திருக்கிறது” அவர். “தற்போதைய பெருநிகழ்வுக்காக மூன்று மாதங்களுக்கும் மேலாக முன்தயாரிப்புகளை மேற்கொண்டோம்.

இந்தப் புத்தகக் காட்சியைப் பிரதானமாக நடத்தும் மூன்று அமைப்புகளும் தங்கள் இயக்க நண்பர்களைக் கொண்டு பயிற்சி முகாம்களை நடத்தினார்கள். முன்னோட்டமாகச் சில பள்ளிகளில் புத்தகக் காட்சிகளை நடத்தினோம். அதன் தொடர்ச்சியாகத் தற்போது இந்தப் புத்தகக் காட்சிகள் நடக்கவிருக்கின்றன. இந்தப் புத்தகக் காட்சிகளின் சிறப்பே குழந்தைகளை மையப்படுத்தி நடைபெறுவதுதான்” என்றார் நாகராஜன்.

“மேலும், உலக அளவில் 50 புத்தகங்கள், இந்திய அளவில் 25 புத்தகங்கள், தமிழ்நாட்டளவில் 25 புத்தகங்கள் என்று 100 முக்கியமான புத்தகங்களுக்குச் சுவரொட்டிகள் தயாரித்திருக்கிறோம். சில இடங்களில் எங்களோடு நூலகத் துறையும் கைகோக்கிறது. அகில இந்திய இன்ஷுரன்ஸ் அலுவலகங்களில் அனுமதி பெற்று அங்கும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 50 இடங்களாவது என்ற கணக்கில் புத்தகக் காட்சிகள் நடத்துகிறோம். சென்னையைப் பொறுத்தவரை, பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் வெளியீடுகளுக்கு 50 சதவீதத் தள்ளுபடி என்பது இந்தப் புத்தகக் காட்சியின் சிறப்பு. கடந்த ஆண்டு உலகப் புத்தக தினத்தையொட்டி நடத்தப்பட்ட புத்தகக் காட்சி களில் ஒட்டுமொத்தமாக ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனையானது. தற்போது மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார் நாகராஜன்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளரான எஸ்.டி. பாலகிருஷ்ணனிடமும் பேசினோம். “சிறு சிறு கிராமங்கள்தான் இந்தப் புத்தகக் காட்சிகளின் பிரதான இலக்கு. 5 ரூபாய், 10 ரூபாய்க்குக் கூட புத்தகங்கள் விற்பதால் பலராலும் புத்தகங்களை வாங்க முடியும். கடந்த ஆண்டு புத்தகக் காட்சியின்போது ஒரு கிராமத்தில் பார்வையற்ற பாட்டி ஒருவர் சில புத்தகங்களை வாங்கினார். அவரிடம் ‘ஏன் பாட்டி புத்தகம் வாங்குகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘ஏன்டாப்பா, என் பேராண்டி, பேத்தியெல்லாம் படிக்க மாட்டார்களா? அவர்கள் படித்து எனக்குச் சொல்ல மாட்டார்களா?’ என்று வெடுக்கென்று பதிலளித்தார்.

அந்தப் பாட்டியின் பதில்தான் எங்கள் புத்தகக் காட்சிகளின் வெற்றியைப் பறைசாற்று கிறது” என்றார் பாலகிருஷ்ணன். “இந்த இயக்கத்தில் உள்ளூர் எழுத்தாளர்களை அந்தந்த ஊர்களில் கவுரவிக்கிறோம். அறிவொளிக் காலத்திலிருந்தே குழந்தைகளிடம் வாசிப்பைக் கொண்டு செல்லும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டிருக் கிறோம். இந்தப் புத்தகக் காட்சிகளில் பல ஊர்களிலும் கிராமங்களிலும் குழந்தைகளை வைத்துப் புத்தகப் பேரணி ஏற்பாடு செய்திருக்கிறோம். தேர் என்றால் கோயில் தேர்தானா? புத்தகங்களை வைத்துத் தேர்கள் வடிவமைத்துப் பல தெருக்களுக்கும் சென்று, பலரையும் புத்தகம் வாங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். உலக இலக்கியம், இந்திய - தமிழ் இலக்கியம், அறிவியல் புத்தகங்கள், சிறுவர் நூல்கள் என்று இந்தப் புத்தகக் காட்சிகளில் இடம் பெறும் புத்தகங்களின் வகைகளும் தலைப்புகளும் மிகவும் விரிவானவை. முற்றிலும் புத்துணர்வு மிக்க ஒரு தலை முறையை உருவாக்கக் கூடியவை” என்றார் பாலகிருஷ்ணன்.

இன்னும் பல சிறப்பம்சங்கள் இந்தப் புத்தகக் காட்சிகளில் இடம்பெற்றிருக்கின்றன. சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரையும் கதை சொல்ல வைத்தல், கருத்தரங்குகள் என்று நிறைய இருக்கின்றன. படித்த புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்து விட்டு மற்றவர்களின் புத்தகங்களை எடுத்துச் செல்லும் புத்தகப் பரிமாற்றமும் மிக முக்கியமான முன்னெடுப்பு. புத்தகங்களைத் தேடி நூலகங்கள், புத்தகக் காட்சிகள் என்று தேடிப் போவோம். தற்போது நம்மைத் தேடியே புத்தகங்கள் வருகின்றன. வீடு தேடி வரும் புத்தகங்களுக்கு நம் குழந்தைகளுடன் சேர்ந்து முகமன் கூறுவோம். இந்தப் புத்தகக் காட்சியைப் பெருவெற்றி பெறச் செய்து வளமான ஒரு புத்தகக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x