Published : 10 Jan 2017 11:10 AM
Last Updated : 10 Jan 2017 11:10 AM

புத்தகங்களைவிடப் பெரிய ஆயுதம் ஏதுமில்லை!- சமுத்திரக்கனி

ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனிதனுக்குச் சமம். அணுகுண்டு கூட ஒரு முறைதான் வெடிக்கும். ஆனால், புத்தகங்கள் படிக்கும்போதெல்லாம் வெடிக்கும். நல்ல புத்தகங்கள் கையில் கிடைத்துவிட்டால், அவற்றைவிடப் பெரிய ஆயுதம் எதுவுமே இல்லை. நம்மைச் சரிசெய்துகொள்ளலாம், இந்த சமூகத்தைச் சரிசெய்துகொள்ளப் பயன்படுத்தலாம். ஆகவே, நிறையப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்க வேண்டும் என்ற பழக்கத்தை இன்றைய இளைஞர்களுக்குள் நாம் கொண்டுவர வேண்டும். வெவ்வேறு புத்தகங்களைப் படிக்கும்போது, வேறொரு உலகத்துக்குள் சென்றுவருவது போன்றிருக்கும்.

தமிழ் எழுத்தாளர்கள் நிறையப் பேரை எனக்குப் பிடிக்கும். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா செளந்தரராஜன் என்று பலர் இருக்கிறார்கள். ஒவ்வொருவருமே அவர்களுடைய களத்தில் அரசர்கள்தான். இவர்கள் பெரியவர்கள், இவர்கள் சிறியவர்கள் என்று வரிசைப்படுத்த நான் விரும்பவில்லை. எனக்கு இவரை மட்டும் பிடிக்கும் என்று சொல்வதில் உடன்பாடில்லை.

இந்திரா செளந்தரராஜன் எழுதிய ஒரு கதையைப் படமாக்குவதற்காக வாங்கி வைத்துள்ளேன். சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ புத்தகம் படித்துவிட்டு அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும், அந்தப் புத்தகம் ஏதாவது புதிய விஷயங்களை எனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இதுவரை சுமார் 6 முறை அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன். இப்போது பூமணி எழுதிய ‘கிழிசல்’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்துவருகிறேன். படப்பிடிப்புக்கு இடையே, காரில் போகும்போது என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் விடாமல் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x