

தன்னைத் தானே கவிதை இங்கு எழுதிக்கொண்டிருக்கிறது. முழுக் கவிதையிலும் மூன்றாவது ஆள் ஒருவனின் குரல் கேட்டபடி வாசகர் உள்ளே நுழைகிறார். அந்த மூன்றாவது ஆள் கூடவே போகிறானா அல்லது காட்சிப் படலத்திலிருந்து அவன் தள்ளி இருக்கிறானா? அப்படியெனில் அவன் நின்றிருக்கும் தளம் எது?
அவனுக்கு மலையைப் பற்றி நன்கு தெரிந்திருக்கிறது என்பது மட்டுமல்ல; அவன் முழுக் காட்சியையும் ஒருசேரப் பார்க்கும் வல்லமையும் உடைய வனாக இருக்கிறான். அவன்தான் கவிதைசொல்லி. கவிதைக்குள் இருந்து கொண்டே வெளியிலும் சஞ்சரிப் பவன். அவன் குரலையும் அவன் பார்வையையும் உள்வாங்கி வாசிக்கும் போது நாமும் ஒரு பயணத்தில் நுழைந்து போகிறோம்; மலை ஏறுகிறோம்; குளிர்ந்த உச்சியைக் காண்கிறோம். தலைமேல் வைத்த கல் பார்த்து, அப்போ சிகரம் எது வெனத் திகைத்து நிற்கிறோம். அந்தத் திகைப்பிலேயே விரிந்து பரந்திருக்கும் பள்ளத்தாக்கின் உணர்வில் கலந்து போகிறோம்.
இந்த இடத்தில் நின்றபடியே கவிதையை முழுமையாகக் கண்டுவிட மனம் அலைபாயத் தொடங்குகிறது. இந்த அலைபாய்தல்தான் வாசிப்பை உன்னிப்பாக்குகிறது.
மலையை முன்னிறுத்தி மற்றவன் அறியாத, தீண்டாத சிகரத்தின் இருப்பை உணர்த்தும் வழியாக மனங்களிலுள்ள சமூக நெருக்கடியை நுண்மையாகக் குறிப்பதைக் காண லாம். மலையேற்றத்தில் இருப்பதோ இருவர். குளிர்ந்த உச்சி ஏறிய பின்பு அந்த இருவரில் ஒருவன் மட்டும் உருவாக்குகிற சிகரம் அடுத்தவன் தலைக்கு மேலேதான் உள்ளது என அவன் சொல்வதில் சில கேள்விகள் எழுகின்றன.
தன் தலைமேல் இன்னும் உயரத்தில் இருக்கும் சிகரத்தைத் தான் எப்படி அடைவது? அருகில் இருப்பவன் இத்தலை ஏறிச் சிகரம் தொடுவதற்கு இவன் வெறுமனே வாழ்நாள் முழுதும் ஒரு ஏணியாக மட்டுமே இருந்து விடுவதா? பாரபட்சங்கள் கொண்ட வாழ்வின் புறச் சமூக நிலைப் பாடுகளின் படிநிலைகளைப் பற்றிய ஒரு அர்த்தம் சூட்சுமமாக இருப்பது போலவும் தெரிய வருகிறது.
ஆனால், அர்த்தங்கள் ஒருபோதும் கவிதையை முழுமையாக்குவதில்லை. அதனால் கவிதைக்கு உள்ளே போகவே விழைகிறேன். உள்ளதிர்வை நேரடியாகத் தொட்டுவிடும் ஆவல் கவிதை வாசிப்பை மீண்டும் ஒருமுறை மனதுக்குள் நிகழ்த்திக் கொள்கிறது.
தலைமேல் வைத்த கல் கவிதையின் திசைகளை அறுக்கும் சீரிய படிமம். ஆச்சரியங்களும் திகைப் புகளும் கூடும் நேரமிது. வாசிப்பில் அலைபாய்தல் இன்னும் அதிகரிக் கிறது. மனம் உள்ளோட்டமாய் விரியும் பொழுதில் கவிதை வெளியின் விஸ்தாரம் பெருகிக்கொண்டே போகி றது. கவிதை முற்றிலுமாக வேறொரு பார்வையைத் தருகிறது இப்போது.
இருவர் மலை ஏறினர் எனச் சொல்லப்பட்டிருந்தாலும் உண்மை யில் தனி நபர் ஒருவரின் இருவேறு மனநிலைகள் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. ஒரு எத்தனிப்பில் மலையேற்றம் குளிர் உச்சியை அடைவதில் நிறைவு பெற்றுவிடுகிறது. அது இயல்பும்கூட. ஆனால், உள்ளார்ந்த தாகம் இத்தோடு நின்று போகவில்லை. இந்த இடத்திலிருந்து தொடங்குகிறது ஒரு புதுத் தேடல்.
தலைமேல் கல் வைத்தவன் இவன் உள்ளிருந்தே இயங்கும் குருவின் அம்சமா? பவுதீக உடலிருப்பையும் தாண்டி தான் அடைய வேண்டிய அல்லது விரும்புகிற அந்தச் சிகரம் எது என்பதான தேடலின் புள்ளி தொடங்குவதாகவும் வெட்டவெளியில் மலையுச்சியில் தீண்டாத, புலப்படாத, அறிந்தவற்றுக்கும் அப்பாலானதை அறியவுமாகவும் மனம் நீண்டு செல்கிறது.
கவிதையில் காட்டப்படும் ‘இன்னும் உயரம்’என்பதற்குப் பதில் எதுவும் இல்லை. கவிதைக்கு வலுச்சேர்க்கும் இடமும் இதுவே. இல்லாததன் இருப் பைத் தரிசிப்பதும் அதில் கலந்து கரைவதுமாகப் பள்ளத்தாக்கு விரிந்து பரந்திருக்கிறது. அலைபாய்தல் ஒரு முகப்படும் கணமும் இதுவே. ஆரம் பம் முதல் கடைசிவரை மவுனமாக ஒரு உரையாடலை மேற்கொள்கிறது இந்தக் கவிதை.
ஷாஅ கவிஞர், தொடர்புக்கு: azeemasha@yahoo.co.in