

தேயிலைத் தோட்டங்களின் லயம், காம்ப்ரா, பீலி எனும் நிலவியல் சித்திரங்களுடன் அறிமுகமாகின்றன மாத்தளை சோமு கதைகள். தேயிலை, காபி, ரப்பர்தோட்டங்களில் வேலைசெய்ய தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாழ்வில்தான் சோமு கதைகள் நிலைபெறுகின்றன. புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி', இதே பின்னணியில் மனதை உறைய வைக்கும் கதை.
சுதந்திரத்திற்குப் பிறகு தோட்டங்கள் தேசியமயமாயின. தோட்டத்தில் முதலாளிக்குப் பாதி, அரசுக்குப் பாதி என கைமாறுகிறது. தோட்ட முதலாளிகளும் துரைமார்களும் தொழிலாளர்களிடம் சுரண்டுபவர்களாக இருக்கிறார்கள். ‘நமக்கென்றொரு பூமி’ கதையில், கோவில், மயானம் எல்லாம் முதலாளி கைக்குப் போய்விட்ட பிறகு, லயங்களில் பிரசவம் பார்த்த மருத்துவச்சியின் இறப்பு, எங்கே புதைப்பது என்ற கேள்வியை எழுப்புகிறது.