

பிறந்து நடக்கத் தொடங்கிய நாளிலிருந்தே பள்ளிக்கூடம் சென்று கொண்டிருக்கிறேனாம். எனக்கு நினைவில் இல்லாத நாட்கள் அவை. அந்த வயதில் எனக்குச் ‘சாமியார்குட்டி’ என்கிற பட்டப்பெயர் உண்டு. அக்காள்களும் அண்ணனும் பள்ளிக்கூடம் போயிருப்பார்கள். வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் நான் கையில் கிடைக்கும் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் (சோறு வாங்க) செல்வேனாம்.
பெரும்பாலும் காவி கலர் காடா துணியில் தைத்த கவுன் போட்டிருப்பேனாம். எத்தனை முறை பின்னி கட்டிவிட்டாலும் அவிழ்த்துவிட்டு முடியைப் பரட்டையாய் விரித்துப்போட்டுக் கொண்டுதான் செல்வேனாம். அதனால்தான் இந்தப் பெயர்.
உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புவரைதான் இருந்தது.