

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் நிலை குறித்து அறிய பயணம் மேற்கொண்டவர் சர்வதேசப் பத்திரிகையாளர் நெவின்சன். இரு உலகப் போர்களில் கள நிருபராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் இவர். ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்கிற இங்கிலாந்துப் பத்திரிகைக்காக அவர் இந்த இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று பிரிட்டிஷ் இந்தியாவின் உண்மை நிலையை இவர் பதிவுசெய்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களைச் சந்தித்தும் அவர்களது மேடைப் பிரசங்கங்களைக் கேட்டும் அவர் அது பற்றி விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.
பிரிட்டிஷ் வைஸ்ராய்களுக்கு இருந்த செல்வாக்கு, செல்வாக்கு இன்மை என எல்லாவற்றையும் பதிவுசெய்துள்ளார். ஏற்கெனவே சொல்லப்பட்ட வரலாற்றின் இடைவெளியை நெவின்சன் இந்த நூல் மூலம் நிரப்பியுள்ளார். அவரது இந்த நூலில் இருவிதமான அம்சத்தைப் பார்க்க முடிகிறது. ஒன்று, பண்பாடு சார்ந்து இந்தியாவின் பல வண்ணங்களைக் கண்டு வியக்கும் ஒரு மேற்கத்தியப் பார்வை. இரண்டு, இங்குள்ள அரசியல் சூழல். இவற்றைத் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார். உதாரணமாகச் சென்னை மாகாணத்தைப் பற்றிய இரு பதிவுகள் உள்ளன.