

மரபான மருத்துவ முறைகளில் பழமையானதும் சிறந்ததுமானது நமது சித்த மருத்துவமாகும். அதை நன்கு கற்றறிந்த மருத்துவர் டி.பாஸ்கரன். எளிய முறையில் கொடிய நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகளை இந்த நூலில் பகிர்ந்துள்ளார். 20 கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தன்னளவில் நோய் தீர்க்கும் நிவாரணியாகவே வெளிப்பட்டுள்ளது.
நமது தொன்ம நம்பிக்கைகளில் பொதிந்துள்ள மருத்துவம் குறித்த தகவல்களைப் பதிவுசெய்வதை இந்த நூல் ஒரு கைத்தடியாக ஏந்தியுள்ளது. இது இந்த நூலின் சிறப்பான அம்சமாகும். உதாரணமாக, ‘புருசனைச் சுற்றுவதுபோல் அரசனையும் சுற்று’ என்கிற பழமொழியில் உள்ள அறிவியல் உண்மைகளை முதல் கட்டுரையில் மருத்துவர் ஆராய்ந்துள்ளார்.
‘அரச வேர் மேல் விரணம் ஆற்றுமுவ் வித்து வெருவ வரும் சுக்கில நோய் வீட்டும்’ என்கிற அகத்தியர் குணபாடத்தையும் துணைக்கு அழைத்து, அரச மரத்தில் உயிர்ச்சத்துகள் நிறைந்துள்ளதைச் சுட்டுகிறார் நூலாசிரியர். ‘ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி/மூங்கில் போல் சுற்றம் பெருகி’ என வாழ்த்தும் வழக்கம் நம் மரபில் உண்டு. இந்தக் கூற்றை எடுத்துக்கொண்டு மருத்துவர் அருகம்புல்லின் குணநலன்களை விதந்தோம்புகிறார்.
பிற்காலத்தில் தோன்றிய பொதுக் கற்பிதங்களில் உள்ள பிழைகளையும் இந்த நூல் சுட்டிக்காட்டத் தவறவில்லை. வயிறு முட்டச் சாப்பிடுவது பற்றிச் சில கற்பிதங்கள் நமது வழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், அரை வயிறு உணவுதான் உண்ண வேண்டும் எனச் சித்த மருத்துவம் கூறுகிறது என்கிறார் மருத்துவர்.
அதற்கான காரண காரியங்களையும் சொல்கிறார். மீதமுள்ள அரை வயிற்றில் காற்றையும் நீரையும் எடுத்துக்கொள்ள இடம் தர வேண்டும் எனச் சொல்கிறார். அதுபோல் உணவைக் கவளம் கவளமாக உண்ண வேண்டும் என்கிறார். மனிதர்கள் 32 கவளம் உண்ண வேண்டும். இது ஒரு கணக்கு. முனிவர் 16 கவளம் உண்ண வேண்டுமாம்.
இந்த 32 கவளத்தை உண்ணும்போது சவைத்து உமிழ்நீரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்படி உண்ணுவதால் ஜீரணப் பிரச்சினை இல்லாமல் இருக்கும். மேலும், உண்ணும் உணவிலுள்ள சத்துகள் பெரிய அளவில் ஆற்றலாக மாறும் வாய்ப்புள்ளது.
குளிர்பதனப்பெட்டியில், ப்ரீஸரில் உணவுப் பொருள்களைச் சேமிக்கக் கூடாது என்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் இந்த நூலில் ஒரு கட்டுரை சொல்கிறது. நோய்களை உண்டாக்கும் நச்சுக் கிருமிகள் அந்த உணவில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கட்டுரை சொல்கிறது.
சீரகத் தண்ணீரின் குணங்களைச் சொல்லும் கட்டுரையில் இந்தத் தகவலையும் சொல்லிச் செல்கிறார் மருத்துவர். ஒரு கட்டுரையில் ‘மோரைப் பெருக்கு, நெய்யை உருக்கு’ என்கிற பெருவழக்கின் உண்மைகளை விரித்துச் சொல்கிறார். நாம் இப்போது கடைகளில் தயிரை வாங்கி, அதில் நீர் சேர்த்து மோராகப் பருகி வருகிறோம்.
ஆனால், உண்மையில் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த பிறகு இருக்கும் பானம்தான் மோர். அதனுடன் மிளகு, சீரகம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போன்றவற்றைச் சேர்த்துப் பருகுவது அருமருந்து என்றும் நெய்யுடன் முருங்கைக் கீரையைச் சேர்த்துக் காய்ச்சிச் சாப்பிடுவதால் அதன் கொழுப்பு நீங்கி ஆரோக்கியம் தரும் என்றும் பகிர்கிறார். நெய்யை உருக்கியே பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
நமது பாரம்பரிய மரமான பனையின் சிறப்புகளையும் இந்த நூலில் சொல்லியிருப்பது எடுத்துக்கூற வேண்டிய விஷயம். பனம்பழம், பனங்கிழங்கு, கருப்பட்டி, நுங்கு எனப் பனையின் வழி கிடைக்கும் ஒவ்வொரு உணவும், சுவையும் மருத்துவக் குணமும் நிறைந்தது என்பதை அந்தக் கட்டுரை சுட்டுகிறது.
இன்றைக்கு முக்கியப் பிரச்சினையாக இருக்கும் முடி உதிர்வுப் பிரச்சினைக்கும் இந்த நூலின் ஒரு கட்டுரை மருந்தைப் பரிந்துரைக்கிறது. இன்றைக்கு வயதானவர்கள் எதிர்கொள்ளும் ஒரு உடல் உபாதை, மூட்டு வலி. அதற்கு மூலிகைப் பற்று சரியான தீர்வு எனச் சொல்கிறார். சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை இந்த நூல் சொல்வதன் வழி நமது மரபையும் நோய் தீர்க்கும் நம்பிக்கைகளையும் நமக்கு அளிக்கிறது.
சித்தாவரம்
சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 90809 09600
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in