

சின்ன பிள்ளைகளின் சுட்டித்தனமான சேட்டையைக் குரங்குச் சேட்டை என்போம். குரங்குச் சேட்டையை ரசிக்க முடியாவிட்டாலும் சிறுபிள்ளைகளின் சேட்டையை ரசிக்கலாம். அப்படி ரசிக்கத் தகுந்த குரங்குச் சேட்டையைச் செய்கிறது, புத்தக வாசிப்பு தொடர்பான உரையாடலை முன்வைக்கும் யூடியூப் சேனல் ‘இலக்கிய குரங்குகள்’. நூல் அறிமுகம், அனுபவப்பகிர்வு, புத்தகப் பரிந்துரை, உரையாடல், நேர்காணல் என வெவ்வேறு வடிவங்களில் கலாய்ப்புத் தன்மையிலான காணொளிகளாக வெளியிடுகிறார்கள்.
இவற்றில், சௌமியாவும் விஜய் வரதராஜும் இணைந்து, ‘புத்தக விவாதம்’ என்கிற தலைப்பில் வெளியிடும் காணொளிகள் மிகச் சிறப்பு. தமிழ்ச் சூழலில் கவனம்பெறாத குறிப்பிடத்தக்க நூல்களைத் தேர்ந்தெடுத்து விரிவாக விவாதிக்கிறார்கள். கொரியாவில் நிலவிவரும் சர்வாதிகாரப் போக்கை ஆவணப்படுத்திய மைக்கேல் பாலினின் ‘நார்த் கொரியா ஜர்னல்’, குகைக்குள் மாட்டிக்கொண்ட 13 சிறுவர்கள் மீண்டு வந்த சாகசக் கதையைச் சொல்லும் ‘ஆல் தர்ட்டீன்’, மிட்சுபிஷி நிறுவனத்தின் விநோதமான அணுகுமுறையைப் பேசும் ‘தி ப்ளூ-அய்டு சேலரிமேன்’, மக்கள் தொகையைக் கட்டுப் படுத்துவதற்காக சீனா மேற்கொண்ட கொடூரமான பரிசோதனையை எடுத்து ரைக்கும் ‘ஒன் சைல்ட்’, கிரேக்கப் புராணங்கள், ஆப்பிரிக்கர்கள் தங்கள் முடியால் எதிர்கொண்ட இன்னல்களையும் போராட்டங்களையும் பேசும் ‘ஹேர் ஸ்டோரி’ என இவர்கள் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு புத்தகமும் தனித்துவமானது.
தீவிரமான, உணர்வுபூர்வமான, ஆத்மார்த்தமான வாசிப்பை வேடிக்கையான தொனியில்சொல்கிறார்கள். ரசனையும் கருத்துச் செறிவுமான பதிவுகளுக்கு இலக்கிய குரங்குகளை நாடலாம்.