

அரசு வேலைக்கான வழிகாட்டி: இந்து தமிழ் திசை பதிப்பகம், ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி ஆகிய தேர்வுகளில் வெற்றிபெற உதவும் வகையில் உருவாக்கியுள்ள கையேடு ‘வெற்றி நிச்சயம்’. போட்டித் தேர்வுக்கான தமிழ்க் களஞ்சியம், இந்த ஆண்டின் பொது அறிவு நிகழ்வுகள், பாரிஸ் ஒலிம்பிக் சாதனையாளர்கள், அறிவியல் சாதனைகள், செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா போன்ற பகுதிகளுடன் பொது அறிவுக் கேள்வி-பதில்களும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அரசுப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்நூல் நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
வெற்றி நிச்சயம்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.95
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74013 29402
அன்பின் தீராத வாசம்: ஏழு கவிதை நூல்களை எழுதியுள்ள கவிஞரின் முதல் சிறுகதை நூலில் 19 கதைகள் உள்ளன. நெருக்கடி மிகுந்த மனித வாழ்வின் ஓட்டத்தினூடாக, சக மனிதர்கள் மீது வெறுப்புக் கொள்ளுதல், தீராத பகை வளர்த்தல், போட்டி பொறாமை என்பதாகவே பொதுவெளியில் பரப்பப்படும் சராசரி மனிதர்களின் வாழ்விலும் நிகழும் அன்பு கசியும் ஈரப்பொழுதுகளை மிக அழகான கதைகளாக்கியுள்ளார் எழுத்தாளர் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியூர் சென்றுவிட, உள்ளே மாட்டிக்கொண்ட பூனைக்குட்டிகளின் தொடர் சத்தம், பக்கத்து வீட்டினரின் மனதை இளக வைப்பது குறித்த ‘மியாவ்’ கதை, சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்த மணிமாறன் - மாலதி தம்பதியினர் கட்டிய புது வீட்டிற்கான அழைப்பிதழை, பழைய வீட்டு உரிமையாளர்களுக்கும் ஏன் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிற காரணத்தோடு முடியும் ‘வசவுக்கு நன்றி’ கதையும், ‘அப்பாவின் வாசம்’, ‘தலைமுறை துயரம்’, ‘பொட்டப்புள்ள’, ‘சாவுக்கூத்து’ என ஒவ்வொரு கதையிலும் நம் மனதைத் தைக்கும்படியான சின்னச் சின்னச் சம்பவங்கள் வாசிக்க வாசிக்கத் தீராத அன்பின் வாசத்தைப் பரப்புகின்றன. - மு.முருகேஷ்
அப்பாவின் வாசம்
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
வேரல் புக்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 95787 64322
தேசியத்தின் விளைச்சல்: திராவிட மாடல், தேசிய மாடல் என்கிற விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், இந்த நூல் தேசிய மாடலின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகிறது. தமிழ் இலக்கியத்தைப் போற்றியதில், தமிழர் பண்பாட்டை உலகறியச் செய்ததில், ஒருமைப்பாட்டைக் காத்ததில் தேசியத்தின் பங்கு எனப் பல நிலைகளில் இந்த நூல், தான் கொண்ட பொருளை எடுத்துரைக்கிறது. இந்து முன்னணி என்கிற அமைப்பின் நிலை நிற்பின் அவசியம் என்ன என்பதையும் நூலின் பின்பகுதி பேசுகிறது. - விஜித்ரன்
தேசிய மாடலும் திராவிட மாடலும்
இந்து முன்னணி வெளியீடு
விலை: ரூ.10
தொடர்புக்கு: 9843407744
திண்ணை | இந்து தமிழ் திசைப் புத்தகக் காட்சியில் தமிழிசை: பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள குமுதம் புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்ற இந்து தமிழ் திசை பதிப்பகப் புத்தகக் காட்சிக்கு, தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார். புத்தகக் காட்சியில் பல புத்தகங்களை வாங்கினார். பாஜக கட்சி நிர்வாகிகளுக்குத் தான் வாங்கிய இந்து தமிழ் திசை பதிப்பகப் புத்தகங்களை அவர் பரிசாக வழங்கினார்.
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவை இன்று (19.10.24) பிற்பகல் 3 மணி அளவில் சென்னை, தி நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கில் ஒருங்கிணைத்துள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்ஒளியின் ‘வீராயி’ குறுங்காவியத்தை பிரயளன் நாடகமாக நிகழ்த்தவுள்ளார். தமிழ்ஒளி பற்றிய ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது. ரேவதி பழனிச்சாமி, சிகரம் செந்தில்நாதன், க.ஜெயபாலன், ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பலர் தமிழ்ஒளியின் பங்களிப்புகள் குறித்துப் பேசவுள்ளனர். தொடர்புக்கு: 94440 85385
ஓவியர் நடேஷ் அஞ்சலிக் கூட்டம்: ஓவியர் நடேஷ் அஞ்சலிக் கூட்டம், கூத்துப்பட்டறை சார்பில் இன்று (19.10.24) சென்னை, கே.கே.நகர், டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 5 மணிக்கு ஒருங்கிணைக்கப்படுகிறது. பேராசிரியர்கள் வீ.அரசு, சி.ரவீந்திரன், வி.ஆறுமுகம், எம்.டி.முத்துக்குமாரசாமி, நாடக ஆளுமைகள் வெளி ரங்கராஜன், பிரசன்னா ராமஸ்வாமி, கே.எஸ்.கருணா பிரசாத், ஓவியர் அபராஜிதன், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசவுள்ளனர். தொடர்புக்கு: 90032 90306