

சென்னை: சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை சார்பில் தமிழில் சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த நூலுக்கு இந்த ஆண்டு முதல் இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை இந்த ஆண்டு முதல் 2 இலக்கிய விருதுகளை வழங்க உள்ளது. அந்த வகையில், தமிழ் எழுத்துலகுக்கு சிறந்த படைப்புகளை வழங்கிய எழுத்தாளர் ஒருவருக்கு ‘சூர்ய விருது’ வழங்கப்படும்.
இது ரூ.3 லட்சம் பரிசுத் தொகை கொண்டது. கடந்த 5 ஆண்டுகளில் வெளியான சிறந்த நூலின் ஆசிரியருக்கு ‘அக் ஷர விருது’ வழங்கப்படும். இது ரூ.2 லட்சம் பரிசு தொகை கொண்டது. விருதாளர்களுக்கு இலச்சினை, பாராட்டிதழ் வழங்கப்படும்.
இந்த ஆண்டில், எழுத்தாளர் அம்பைக்கு படைப்பாளுமைக்கான சூர்ய விருதும், நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘சைக்கோன் - புதுச்சேரி’ என்ற நூலுக்கு அக் ஷர விருதும் வழங்கப்பட உள்ளன.
ஆளுநர் பங்கேற்பு: சென்னையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சாகித்யஅகாடமி செயலர் டாக்டர் சீனிவாச ராவ், டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் கலந்துகொண்டு, விருதாளர்களுக்கு விருது, பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.