அரை நூற்றாண்டு இலக்கிய இயக்கம்

அரை நூற்றாண்டு இலக்கிய இயக்கம்
Updated on
3 min read

திருப்பூரின் இலக்கிய முகம், சுப்ரபாரதிமணியன். அவரது கதைக்களங்கள் தமிழ்நாட்டைத் தாண்டி விரிந்தவை என்றபோதும் ஒரு செயல்பாட்டாளராகத் திருப்பூருடன் பின்னிப் பிணைந்தவை அவரது எழுத்தும் இயக்கமும். நெருக்கடிநிலைக் காலக்கட்டத்தைப் பற்றிய ‘சுதந்திர வீதிகள்’ என்கிற சிறுகதையிலிருந்து நவீன இலக்கியத்தில் அவரது பயணம் தொடங்கியது.

இதுவரை 80-க்கும் மேற்பட்ட நூல்கள், இடைவிடாத ‘கனவு’ சிற்றிதழ் வெளியீடு என்று தனிநபர் இயக்கமாக வெற்றிகரமாகப் புலிவாலைப் பிடித்துக் கொண்டிருப்பவர். தமிழ் இலக்கியச் சூழலில் சினிமா ரசனை குறித்துத் தொடர்ந்து உரையாடிவருபவர். கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவரின் நேர்காணல்களை பொன்.குமார் தொகுத்துள்ளார்.

ஒளிவட்டங்களைத் தவிர்க்கும் சுப்ரபாரதிமணியன், தனது கருத்துகளை வெகு இயல்பாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். சமூகப் பாதுகாப்பு இல்லாத தொழிலாளர் முறையே கொத்தடிமைத்தனம்தான் என்கிற நோக்கிலிருந்து திருப்பூரின் வளர்ச்சியை அவர் பார்க்கிறார். இட ஒதுக்கீடு, தாய்மொழிக் கல்வி, சூழலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துத்தை வலியுறுத்துகிறார். மனசாட்சியோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் இயங்குவதுதான் எழுத்தாளனின் வெற்றி. இலக்கியத் துறையில் பீடாதிபதிகள் தேவையில்லை என்பதை உணர்த்துகின்றன சுப்ரபாரதிமணியனின் நேர்காணல்கள். - செ. இளவேனில்

புலி வாலை பிடித்த கதைகள்
சுப்ரபாரதிமணியன் நேர்காணல்கள்
தொகுப்பு: பொன்.குமார்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 044 23726882

சினிமா ரசனைக் கட்டுரைகள்: கலகலப்பான எழுத்து நடைக்குச் சொந்தக்காரரான ஜி.ஆர்.சுரேந்திரநாத் ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட அச்சு, இணைய இதழ்களில் எழுதிய சினிமா கட்டுரைகளின் தொகுப்பு. த்ரிஷா, தமன்னா, அனுஷ்கா, அஞ்சலி போன்ற நடிகைகள் குறித்த கட்டுரைகள் பல படங்களில் பார்த்து ரசித்த அவர்களை ரசிப்பதற்குப் புதிய காரணங்களையும் பரிமாணங்களையும் வழங்குகின்றன.

சிறுவயதில் பெற்றோருடனும் தற்போது மனைவி மகனுடனும் திரையரங்கில் படம் பார்த்த அனுபவத்தை ஆசிரியர் விவரிக்கும் கட்டுரை, பல இடங்களில் சிரிக்க வைக்கின்றது. இளையராஜாவின் இசை குறித்த கட்டுரைகளில் ஆசிரியரின் இசை ரசனை வெளிப்படுகின்றது. ‘சகலகலா வல்லவன்’ திரைப்படத்தின் ‘இளமை இதோ’ என்பது போன்ற திரைப்படப் பாடல்கள் குறித்த கட்டுரைகளும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளன. வெகுஜன சினிமா ரசிகர்கள் விரும்பிப் படிக்கக்கூடிய புத்தகம். - கோபால்

நட்சத்திரங்கள்
ஜி.ஆர்.சுரேந்திரநாத்
வானவில் புத்தகாலயம்
சென்னை
விலை: ரூ.177
தொடர்புக்கு: 72000 50073

நம் வெளியீடு | நம்பிக்கையின் சிறப்பு: கடவுளைக் குறித்த நம்பிக்கை, அவநம்பிக்கை, பார்வைகள், விளக்கங்கள், விவாதங்கள் காலங்காலமாக நம்மிடையே இருப்பவை. இதில் எதையும் விட்டுவிடாமல், எல்லாவற்றையும் குறித்த பார்வையையும் நமக்கு அளித்து, நம்மிடமிருந்தே ஓர் உள்முக தரிசனத்தை அளிப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. ‘நம்புவதே வழி என்ற மறைதனை நாமின்று நம்பிவிட்டோம்’ என்பது மகாகவி பாரதியாரின் வரிகள்.

‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்று பாடியிருக்கிறார் கண்ணதாசன். இப்படிப் பலரின் கருத்துகளை மேற்கோள் காட்டி, ஆன்மிக விசாரமான 30 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ‘இந்து தமிழ் திசை’யின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் இசைக்கவி ரமணன் எழுதிய ‘கண்முன் தெரிவதே கடவுள்’ தொடராக வந்தபோதே வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதன் நூல் வடிவம் இது.

கண்முன் தெரிவதே கடவுள்
இசைக்கவி ரமணன்   
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 74012 96562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications

திண்ணை | ஆர்.பாலகிருஷ்ணனுக்கு இயல் விருது: சிந்துவெளி நாகரிக ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனுக்கு கனடா இலக்கியத் தோட்டம் அமைப்பின் இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்துக்கும் சங்க இலக்கியத்துக்குமான தொடர்பைத் தொடர்ந்து தன் ஆய்வுகளின்வழி நிறுவிவருபவர் ஆர்.பாலகிருஷ்ணன்.

இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரியாக ஒடிஷாவின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’, ‘அணி நடை எருமை’, ‘ஓர் ஏர் உழவன்’, ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ ஆகிய நூல்கள் இவரது சிறப்பான பங்களிப்புகள். ‘Journey of a Civilization: Indus to Vaigai’ என்கிற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார்.

பிரமிள் ஆவணப்பட முன்னோட்டம்: கவிஞர் பிரமிள் இலங்கையின் திருகோணமலையில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்து இறப்புவரை இங்கேயே வாழ்ந்தவர். தமிழ் நவீனக் கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்.

‘சிறகிலிருந்து பிரிந்த/இறகு ஒன்று காற்றின்/தீராத பக்கங்களில்/ஒரு பறவையின் வாழ்வை/எழுதிச் செல்கிறது’ என்கிற பிரமிளின் கவிதைக்கு ஏற்ப பிரமிளின் வாழ்க்கையை இயக்குநர் தங்கம் தயாரித்து இயக்கி வருகிறார். அதன் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியாகியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in