

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஒருவர் எப்படித் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம், என்பதையெல்லாம் இந்த நூலின் தொகுப்பாசிரியர் பரிவோடு சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கையேட்டில் பொதுத்தமிழ், பொது அறிவு என இரு பெரும் பிரிவுகளில் பயிற்சிக்கான திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. முதல் பிரிவில், திருக்குறள் தொடர்பான பயிற்சிகள், தமிழ் இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும், தமிழ் இலக்கணம் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இரண்டாவது பிரிவில், பொது அறிவியல், புவியியல், இந்தியாவின் வரலாறு - பண்பாடு, இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு, சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும், நடப்பு நிகழ்வுகள், மாதிரி வினா - விடைகள் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி
தேர்வு Group IV
கையேடு
முனைவர். ஆதலையூர் சூரியகுமார்
விலை: ரூ.500
தொடர்புக்கு : 7401296562
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
பிரெஞ்சுச் சமூக வரலாற்று ஆவணம்: அன்னி எர்னோ, 2022 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்பரிசு பெற்றவர். அந்தப் பரிசை வென்ற முதல் பிரெஞ்சுப் பெண் இவர். இவருடன் மானுடவியலாளர் ரோஸ்-மரி லக்ராவ் கலந்துரையாடிய நிகழ்வு, ‘ஓர் உரையாடல் - அன்னி எர்னோவுடன் ரோஸ்-மரி லக்ராவ்’ என்ற பெயரில் தமிழில் நூல் வடிவம் பெற்றுள்ளது. ஜெயராஜ் தானியேல் பிரெஞ்சில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்.
ஆண்களின் உலகை ஆதர்சமாகக் கொண்டவராகத் தன் வாழ்வைத் தொடங்கி சொந்த அனுபவங்களினால் பெண்ணிய இயக்கங்களில் இணைந்தவர் ரோஸ்-மரி லக்ராவ். ஆய்வாளரும்கூட. அவருடைய பெண்ணியக் கருத்தாக்க வளர்ச்சியில் அன்னியின் நூல்களுக்கும் இடமுண்டு.
அன்னி அளவுக்குத் துணிச்சலாகப் பாலியல் குறித்தோ தம் சொந்த வாழ்வு குறித்தோ ரோஸ்-மரி எழுதவில்லை. ஆனால், அப்படி எழுதிய அன்னி பற்றி நன்மதிப்புக் கொண்டிருக்கிறார். இப்படி இருவரும் வெவ்வேறு சமூகப் பின்னணியில் தம் வாழ்வைத் தொடங்கி, வாழ்வு செலுத்திய திசைகளில் பயணித்து ஒரு கட்டத்தில் பெண்ணியப் பாதையில் இணைந்து பயணிக்கின்றனர்.
சொந்த வாழ்க்கைப் பயணம் பற்றிய பேச்சு, கலந்துரையாடல் முழுக்க இவர்கள் இருவரும் மேற்கோளாகக் குறிப்பிடும் நூல்கள், எழுத்தாளர்கள், இயக்கங்கள் மூலம் வேறொரு வடிவம் பெற்று இந்தக் கலந்துரையாடல் பிரெஞ்சுச் சமூக வரலாற்று ஆவணமாக மாறிவிடுகிறது.
இலக்கிய உலகையும் எழுத்தையும் சேர்த்தே இவர்கள் விவாதிக்கின்றனர். அன்னி தன் தந்தை இறந்தே பிறகே, அவரைப் பற்றி எழுதியதாகச் சொல்கிறார். குடும்பத்தில் இருந்து விலகி இருந்ததால் குடும்ப உறவுகள், பாலியல், திருமணம் பற்றி வெளிப்படையாகத் தன்னால் எழுத முடிந்தது என்கிறார்.
மாறாக ரோஸ் மரி தன் எழுத்தைத் தானே தணிக்கை செய்து குறிப்பிட்ட வட்டத்திலேயே வைத்திருக்கிறார். அதற்குக் காரணம் குடும்பம் என்கிறார். கட்டுப்பாடுகளால் பெண்கள் எழுத்தில் உருவாகும் தயக்கத்தைப் பதிவுசெய்கிறார்கள். அன்னியின் வெளிப்படைத் தன்மையும் உண்மையும் மிளிரும் எழுத்தும் இலக்கியத் தரத்தைச் சாத்தியமாக்குகிறது. இதை இருவரும் நேர்மையாக ஆராய்கின்றனர்.
இலக்கிய மேடைகளைப் போல பெண்ணியச் சபைகளிலும் இருக்க வேண்டிய ஆளுமை அன்னி. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அன்னியின் எழுத்து பெண்ணின் உடல் மீது ஆதிக்கம் செலுத்தும் கருக்கலைப்புச் சட்டம் பற்றிப் பேசியது. இப்போது நடக்கும் அமெரிக்கத் தேர்தலிலும் கருக்கலைப்புச் சட்டம் பிரதான பேசுபொருளாக இருக்கிறது. அவர் எழுத்தை வாசிப்பதற்கான தேவை என்றும் இருக்கிறது. அன்னியின் எழுத்து பிரெஞ்சுச் சமூகப் பெண்ணியம் குறித்த புரிதலையும் வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. - கோகிலா
ஓர் உரையாடல் - அன்னி எர்னோவுடன் ரோஸ்-மரி லக்ராவ்
(தமிழில்: ஜெயராஜ் தானியேல்)
ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 7550098666
மாற்றத்துக்கான வழிகாட்டி: சமூக விஞ்ஞானிகளான பேராசிரியர்கள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 44 பேர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தற்போதைய நம் கல்வி, தொழில்நுட்பம் சார்ந்துள்ளதும், படைப்பாற்றல் சார்ந்துள்ளதும், சுற்றுச்சூழல் காக்கும் கருவியாக உள்ளது. சமத்துவம், சகோதரத்துவம் சார்ந்த கல்விச் செயல்பாடுகளை நாம் அவசியம் மேம்படுத்த வேண்டும். இதுவே சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
இதன் மூலமே சாதியத்தின் பெயரால் நடக்கும் பாகுபாடுகளை நாம் ஒழிக்க முடியும். சமூக மாற்றத்தை, சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க நினைக்கும் அத்தனை பேரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. - எம்.ஜெ.பிரபாகர்
சாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில்
பு.பா.பிரின்ஸ்
கஜேந்திர பாபு
சிந்தன் புக்ஸ்
விலை : ரூ,225
தொடர்புக்கு: 9445123164
வெற்றியின் தடம்: ஜமைக்காவில் உசேன் போல்ட் வீட்டுக்கு அருகிலிருக்கும் 15 வயதுச் சிறுவனுக்கு அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. போல்டின் சின்ன சின்ன குறும்புகளை அப்படியே செய்து காட்டுவான் சிறுவன். ஒருநாள் போல்ட், “என்னை மாதிரி எல்லாவற்றையும் செய்கிறாயே, என்னைப் போல் ஓடு” என்கிறார். அன்று முதல் ஓடத் தொடங்குகிறான் சிறுவன். ஆனால், பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் தோல்வியையே சந்திக்கிறான்.
ஒருநாள் போல்டிடம் ‘‘உங்கள் கால்களை இரவல் கொடுங்கள்’’ என்கிறான். தன் கால்களைக் கொடுத்துவிட்டு, அவன் கால்களை வாங்கிக்கொள்கிறார் போல்ட். ஆனாலும் அந்தச் சிறுவன் தோல்வி அடைகிறான். அவனுக்குச் சில ஆலோசனைகளையும் வழங்குகிறார் போல்ட். அதற்குப் பிறகு பல போட்டிகளில் போல்ட் கால்களாலும் தன்னுடைய கால்களாலும் ஓடி, வெற்றிகளைக் குவிக்கிறான் சிறுவன். இப்படி இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 12 வித்தியாசமான கதைகள் இருக்கின்றன. - எஸ்.சுஜாதா
உசேன் போல்டின் கால்கள்
த. அரவிந்தன்
வம்சி பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9445870995