

ஜெயமோகன், தமிழின் முன்னணி எழுத்தாளர். ‘காடு’, ‘ஏழாம் உலகம்’, ‘விஷ்ணுபுரம்’ உள்ளிட்ட பல படைப்புகள் அவர் பெயர் சொல்பவை. திரைத் துறையிலும் எழுத்தாளராகப் பணியாற்றிவருகிறார். மலையாளத்தில் நேரடியாக எழுதிவருகிறார். தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் வாசகர்களைப் பெற்றவர். மகாபாரதத்தின் மறு விவரிப்பான 26 பாகங்களைக் கொண்ட ஜெயமோகனின் ‘வெண்முரசு’ முழுத் தொகுப்பு 10 சதவீதத் தள்ளுபடியில் முன்வெளியீட்டுத் திட்டத்தில் விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடவுள்ளது. அதை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது.
மகாபாரதத்தை ‘வெண்முரசு’ எந்த வகையில் மறு ஆக்கம் செய்துள்ளது?
மகாபாரதம் நமது தொன்மங்களின் கலைக்களஞ்சியம். பிற்காலத்தில் வந்த எல்லாப் புராணங்களிலும் மகாபாரதம்தான் திரும்பச் சொல்லப்பட்டது. எல்லாக் காவியங்களும் மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்டவைதான். பாரதம் இந்தியாவின் பல மொழிகளில் திரும்ப எழுதப்பட்டுள்ளது. புராணங்களாக, காவியங்களாக, நவீன இலக்கியங்களாகப் பாரதம் மறு விவரிப்பு செய்யப்படுவது தொடர்ந்து நடக்கிறது. இனியும் இது நடக்கும். இந்தியாவின் பெரும்பாலான நாட்டார், செவ்வியல் கலைகள் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டவைதான். பாரதம் இல்லையென்றால் கதகளியும் இல்லை; தெருக்கூத்தும் இல்லை. மகாபாரதத்தின் தொல் படிமங்கள் நம் ஒவ்வொரு மனத்துக்குள்ளும் உண்டு. நமக்குள்ளே சகுனியோ பீமனோ கர்ணனோ இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பாரதத்தில் பலவீனமானவர்களின் கதையை விரிவாகச் சொல்லக்கூடிய தேவை இன்று இருக்கிறது. இதற்கு மேலதிக அம்சங்கள் ‘வெண்முர’சில் உள்ளன. மரபான வேத அறத்துக்கும் உருவாகி வந்த வேதாந்த அறத்துக்குமான போர்தான் ‘வெண்முரசு’.
வேத அறம், வேதாந்த அறம் என்றால் என்ன?
துரியோதனன் தரப்பில்தான் எல்லாச் சத்திரியர்களும் இருக்கிறார்கள். இந்தச் சத்திரியர்களை உருவாக்கி, அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தது பழைய வேத மரபு. பாரத காலத்துக்கு முன்பு கலிங்கம், துவாரகை போன்ற கடலோர நாடுகள் எல்லாம் ஆற்றல் பெற்று வளர்ந்துவந்தன. இந்தப் புதிய நாடுகளைச் சத்திரியர்கள் அங்கீகரிக்க மறுத்தார்கள். புதிய நாடுகளுக்குப் புதிய அறங்கள் தேவைப்பட்டன. வேதாந்தம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருந்தது. இதற்கு நேர் எதிராக வேத அறம் இருந்தது. வேத, வேதாந்த விவாதமாகப் பாரதத்தைப் பார்க்கக்கூடிய பார்வை ‘வெண்முர’சில் இருக்கிறது.
தொலைத்தொடர்பு புரட்சிக்குப் பிறகு சமூக வலைதளமும், காட்சி ஊடகங்களும் இலக்கியத்தைப் பாதித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வேறு கலைகள் இலக்கியத்தைப் பாதிப்பது புதிய விஷயம் இல்லை. திரெளபதியைத் துகிலுரிக்கும் காட்சி, நிகழ்த்து வடிவப் பாதிப்பிலிருந்துதான் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்படித் தொடர்ந்து கூத்து, நாடகம் போன்ற கலைகள் இலக்கியத்தின் அமைப்பையும் கூற்று முறையையும் மாற்றுவது தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. சினிமா என்பது இசையும் நிகழ்த்துக் கலையும் இணைந்த ஒரு பெரிய வடிவம். அதனால், அதன் செல்வாக்கு இலக்கியத்தில் இருப்பது இயல்பானது. ஒரு புலி, ஒரு மானை எப்படி அடித்துச் சாப்பிடும் என வாழ்நாளில் பார்த்தவர்கள் மிகக் குறைவு. ஆனால், இன்றைக்கு இவை எல்லாவற்றையும் பார்க்க முடியும். இதை இலக்கியத்தில் இன்னும் நுட்பமாக மாற்ற முடியும். தமிழ் இலக்கியத்தில் உள்ள படிமத்தன்மை சினிமாவில் இருந்து வந்ததுதான்.
சினிமாவை மாதிரியாகக் கொண்டு கதைகள் எழுதப்படும் போக்கு குறித்து...
சினிமாவைப் பார்த்து அதன் கதைக் கட்டமைப்பு, காட்சிகளை வெட்டுவது, உணர்வுகளை வெறும் காட்சிகளை மட்டும் சொல்வது ஆகிய பண்புகளைக் கடைப்பிடிக்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தொடக்க நிலையில் இதைச் செய்கிறார்கள். மனிதப் பண்பே ஒரு ஓட்டமொழி நடைதான். இது அவர்களின் கதைகளில் இருக்காது. இது இந்தப் போக்கின் தீய விளைவு. ஆனால், வாசகர்களைப் பொறுத்தவரை சினிமா போல் நாவல் எழுதிவைத்தால் அதைப் படிக்க மாட்டார்கள். சினிமாவுக்கு மாற்றாக நாவல் படிக்க விரும்பும் வாசகர்கள், சினிமா போன்ற நாவலை எப்படிப் படிப்பார்கள்? இலக்கிய உத்திகள் சினிமாவுக்கும், சினிமா உத்திகள் இலக்கியத்துக்கும் எந்த வகையிலும் பயன்படாது.
தீவிர இலக்கியத்தைச் சேர்ந்த உங்களை நோக்கி சினிமா வருவதன் முரண் என்ன?
வெகுஜன இலக்கியம், பெரும்பாலும் தனது கதைக்கருக்களை மேலை நாட்டு வெகுஜன இலக்கியங்களில் இருந்துதான் எடுத்துக்கொண்டுள்ளது. படங்களாக இன்றைக்குள்ள சினிமாக்காரர்கள் பார்த்துச் சலித்த விஷயம்தான் அது. அதில் இல்லாத ஒரு வரிதான் அவர்களுக்கு வேண்டியிருக்கிறது. அந்த அசலுக்காகத்தான் அவர்கள் தீவிர இலக்கியத்தைத் தேடிவருகிறார்கள். அதனால்தான் என்னைத் தேடிவருகிறார்கள். பெருமாள்முருகனையும் நாடிச் செல்கிறார்கள்.
மலையாள, தமிழ் இலக்கியச் சூழல் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கிறது?
முன்பு தமிழில் தீவிர இலக்கியம் இருந்தது. ஆனால், தீவிர வாசகர்கள் குறைவாக இருந்தார்கள். மலையாளத்தில் தீவிர இலக்கியம் இருந்தது. தீவிர வாசகர்களும் இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு மலையாளத்தில் இளைஞர்கள் தீவிர இலக்கியம் வாசிப்பது குறைந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டிலும் ஆங்கிலக் கல்வி முறை இருந்தாலும் தீவிர இலக்கியம் வாசிக்கிறார்கள். அதற்குக் காரணம், இணைய ஊடகம். அதை வெற்றிகரமாகப் பயன்படுத்திய என்னைப் போன்றவர்கள் அதன் வழிப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தோம். ஒரு புதிய வாசக அலையை உருவாக்க முடிந்துள்ளது. இந்த நிலை மலையாளத்தில் இல்லை. ஜோ.டி.குரூஸின் ‘ஆழிசூழ் உலகு’ மாதிரியான லட்சிய நாவல்கள் அங்குஇல்லை. தமிழ் மொழியில்தான் கனவுத் தீவிரம் இருக்கிறது.
இப்போதைய புனைவுமொழி எப்படி இருக்கிறது?
படைப்பூக்கம் இல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடிய மொழிநடை பெரும்பாலும், சமூக வலைதளங்களின் செல்வாக்குக் கொண்டதாக இருக்கிறது. ஆங்கிலம் கலந்து, வட்டார வழக்கைச் சேர்த்து ‘ஜாலியா பேசுறோம்’ என்கிற பாவனையில் செய்யக்கூடிய பயிற்சியே இல்லாத தட்டையான அந்த நடையால், ஒரு நிகழ்ச்சிக்குக் காட்சித்தன்மையையும் கொடுக்க முடியாது; நுட்பமான செய்திகளையும் கொடுக்க முடியாது. இந்த இரண்டுமே இலக்கியத்தைப் பாதிக்கக்கூடியது. காட்சியும் நுட்பமும் உணர்ச்சியும் அற்ற இந்த நடையை நிராகரித்துவிட்டு வெளிவந்தால்தான் ஒருவர் நல்ல எழுத்தாளர் ஆக முடியும்.
வட்டார வழக்கு நடையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு மனிதனை, அவன் பேசக்கூடிய மொழியிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஒரு நிலத்தை அந்த மொழியிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஒரு நிலத்தை, ஒரு மனிதனை நம்பகமாகச் சித்தரிப்பதற்கு வட்டார வழக்கைப் பயன்படுத்துகிறோம். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி அச்சுத் தமிழில் பேசினால், அது நம்பகமாக இருக்காது. அதற்குத்தான் வட்டார வழக்குத் தேவை. எவ்வளவு நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டுமோ அவ்வளவுதான் வட்டார வழக்கின் தேவையும் இருக்க வேண்டும். விவரிப்பு மொழியிலும் வட்டார வழக்கைப் பயன்படுத்துவது மதிப்பற்றது. வட்டார வழக்கை அப்படியே பதிவுசெய்வதிலும் சுவாரசியம் இல்லை. அதில் உள்ள விசேஷமான அழகை மறு ஆக்கம் செய்வதுதான் இலக்கிய மதிப்பு மிக்கது.
நம்பிக்கையூட்டும் இளம் எழுத்தாளர்கள் குறித்து...
தொடர்ந்து நன்றாக எழுதுபவர்களை அறிமுகப்படுத்திவருகிறேன். அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்கிறேன்.பா.திருச்செந்தாழை, அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி, கார்த்திக் பாலசுப்பிரமணியன், சுரேஷ் பிரதீப், விஷால் ராஜா இவர்களெல்லாம் முதல் தலைமுறையில் நன்றாக எழுதக்கூடியவர்கள். அதற்கு அடுத்து சுஷில்குமார், லெ.ரா.வைரவன் போன்ற பலரும் நன்றாக எழுதிவருகிறார்கள்.