

சிலருக்கு எழுத வரும்; சிலருக்குப் பேச வரும். எழுதவும் பேசவும் சிலருக்கு மட்டுமே வரும். அப்படியான திறன்மிக்க ஆளுமைகளுள் ஒருவராக இருப்பவர் இறையன்பு. எதைப் பற்றிப் பேசினாலும், எழுதினாலும் அதில் நம் சிந்தனைகளைக் கிளறிவிடும் கருத்துகளையும் அனுபவம் தோய்ந்த சிறு நிகழ்வுகளையும் கவிதை வரிகளையும் பொன்மொழிகளையும் சில நேரங்களில் கதைகளையும் சொல்லும் எழுதும் ஆற்றல் படைத்தவர் இறையன்பு. தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றதும் 2 ஆண்டுகள் பொதுவெளியில் பேசுவதையும் எழுதுவதையும் தவிர்த்தே வந்த அவர், தற்போது பணி ஓய்வுக்குப் பின், ‘என்ன பே
சுவது! எப்படிப் பேசுவது!!’ எனும் 800-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட பெருந்தொகுப்போடு நம் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நூலை வெறும் பேச்சுக்கலை குறித்தது எனும் ஒற்றைப் புரிதலோடு அணுகுவது சரியான பார்வையல்ல; பேச்சுக்கலை. எழுத்துக்கலை ஆகிய இரு கலைகளுக்குமான ஒரு பயிற்சிக் கையேடு என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லத்தக்க வகையிலான தேர்ந்த செய்திகளும் நுட்பமான குறிப்புகளும் அடங்கிய நூலாக வெளிவந்திருக்கிறது. ‘தகவல் பரிமாற்ற வரலாறு’, ‘தகவல் தொடர்பில் சிறக்க’, ‘மேடையில் முழங்கு’ ஆகிய மூன்று பாகங்களாகப் பிரித்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல், ‘தகவல்கள் பலவிதம்’ எனும் முதல் கட்டுரை தொடங்கி, அமைப்பாளர்களுடைய கடமைகள்’ எனும் கடைசி கட்டுரை வரை 133 துணைத் தலைப்புகளின்கீழ் குறளை நினைவூட்டுவதுபோல் எழுதப்பட்டுள்ளது. இதன் மொழி நடை கவர்ந்திழுக்கக்கூடியது.
மாணவர்களுக்குப் பாடத்தைப் போதிப்பது போலான தட்டையான மொழியில் இல்லாமல், சக நண்பர்களோடு உரையாடும் தோழமை கலந்த மொழியில் எழுதியிருக்கிறார் இறையன்பு. அதனாலேயே வாசிக்கக் கையிலெடுத்தால், ஒரே மூச்சில் பல நூறு பக்கங்களை வேகமாகக் கடக்க முடிகிறது. ‘ஒரே ஒரு வாக்கியத்தின் மூலம் ஒருவரை எழ வைக்கவும் முடியும்; விழ வைக்கவும் முடியும்’ என்று ‘நுழைவாயிலில்’ சொல்லியிருக்கிறார் இறையன்பு. அதுபோல் இதன் ஒவ்வொரு வாக்கியமும் நம்மை எழ வைக்கின்றன. பயனுடைய பேச்சினைப் பேச்சாளர்கள் பேசிட வழிவகுக்கும் பல்வேறு புதிய - அரிய செய்திகளைச் சரமாகக்கோத்து தந்துள்ளார் இறையன்பு.
பேசுவதற்குக் குரல் வளம் ஒன்றும் தடையாகவும் இருந்ததில்லை. கரகரப்பான குரலில், மெலிதான கீச்சுக்குரலில் என குரல் எப்படியாக இருந்தபோதிலும், ஈர்ப்பான மொழியாலும், கேட்போருக்கு நெருக்கமாகவும் பேசி, மக்கள் பெருந்திரளைக் கட்டியாண்ட தமிழகத் தலைவர்கள் பலருண்டு. பேச்சின் பெருமைகளையும், பேச வேண்டியதன் அவசியத்தையும் மிக நேர்த்தியாகச் சொல்லிச்செல்லும் இந்நூலில், மொழியின் பரிணாம வளர்ச்சி, அச்சின் கதை, எழுதும் தகவல் பரிமாற்றம், இலக்கியங்களில் தகவல் தொடர்பு, தலைமைக்கு இலக்கணம், நேர்முகத் தேர்வு, சமாதானப் பேச்சுவார்த்தைகளும் விவாதங்களும் என ஒவ்வொரு மனிதரும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டிய சிறப்பான பல பண்புநலன்களையும் இடையிடையே விவரிக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் தொடங்கும் முன்பாக அந்தத் தலைப்பின் மையப்பொருள் குறித்த அறிஞர் ஒருவரின் கருத்தோடு தொடங்குவதும், அதேபோல் முடிக்கையில் அந்தத் தலைப்புக்குத் தொடர்புடைய ஒரு நிகழ்வைச் சொல்லி முடிப்பதும் மனதில் நல்ல தாக்கத்தை உண்டாக்குகின்றன.
‘உங்கள் பேச்சில் எதை உணர்த்த விரும்புகிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாவிட்டால் பார்வையாளர்களுக்கு அது ஒருபோதும் தெரியப்போவதில்லை’ என்று ஹார்வி டயமண்ட் சொன்ன வரிகளோடு ‘அவையறிந்து பேசுதல்’ எனும் கட்டுரை தொடங்குவது அவ்வளவு பொருத்தம். ‘சர்ச்சிலுக்கு அளிக்கப்பட்ட வினாக்களில் ஒருவர் துண்டுச் சீட்டில் ‘முட்டாள்’ என்று எழுதியிருந்தார். அதற்கு சர்ச்சில், ‘யாரோஒருவர் கேள்வியை எழுதாமல் தன் பெயரை மட்டும் எழுதியிருக்கிறார்என்று சொன்னார்’ என்கிற செய்தியோடு ‘உடல் மொழி இலக்கணம் - 4’கட்டுரை முடிவதும் பாந்தமாக இருக்கிறது. ‘எதையும் பேச்சால் வெல்ல முடியும்’ என்பார்கள். பேச்சுக்கலையில் சிறந்து விளங்கிடவிரும்புவோருக்கு மட்டுமல்ல, தேர்ந்து தெளிந்து பேச வேண்டுமென்றுநினைப்பவர்கள் இந்நூலைப் படிக்கலாம், பயன்பெறலாம்.
என்ன பேசுவது!
எப்படிப் பேசுவது!!
இறையன்பு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
விலை: ரூ.1000
தொடர்புக்கு: 044-26251968
- தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in