

தமிழ்நாட்டின் அனைத்துத் தளங்களிலும் திராவிடம் என்கிற சொல்லாடல் நீக்கமற நிறைந்திருக்கிறது. இச்சொல்லின் வாயிலாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் அடையாளத்தின் பின்னணியில் உள்ள நுண் அரசியலை அலசுகிறது ‘தமிழர் அடையாளம் எது? திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்’ நூல்.
அதேவேளையில், தமிழ்த் தேசியத்தின் அடையாளம் குறித்து, இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பேசுகின்றன. இதற்கு வலுசேர்க்க க.அயோத்திதாசர், பி.ஆர்.அம்பேத்கர், ஞா.தேவநேயப் பாவாணர், ம.பொ.சிவஞானம், பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்டோரின் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. - மிது
தமிழர் அடையாளம் எது? திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்
தொகுப்பாசிரியர்: மகாராசன்
யாப்பு வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9080514506
மனதைக் கலங்கவைக்கும் கதைகள்: ச.துரை எழுதியுள்ள இந்தக் கதைகள் கடல்சார் அறிமுகத்தை அளிக்கின்றன. கடலோ நிலமோ, மனிதர்கள் தத்தமது அன்றாடங்களிலும் அடிப்படை உணர்வுகளிலும் புறச்சூழல் அழுத்தங்களாலும் மாற்றங்களாலும் சிக்கல் ஏற்படும்போது, அது பொறுக்காமல் தங்களுக்குள் அலைக்கழிந்து சுற்றத்திலும் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் மனங்களைத்தான் கொண்டிருக்கிறார்கள்.
தொகுப்பின் கதைகளில் மானசீகப் பாதிப்பிலிருக்கும் மனங்களின் சுகவீனங்களைப் புரிந்துகொள்ள முடிகிற அளவு நமக்கு நெருக்கமாவது புனைவின் வெற்றி. அதுபோல் சகமனிதர்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் வன்மத்தையும் யதார்த்தத்துடன் இக்கதைகள் விவரித்துள்ளன. தொகுப்பில் ‘தீடை’ என்கிற கதை மனதுக்குள் பெரிய கொந்தளிப்பையே ஏற்படுத்தியது.
இன்னும் எத்தனை நாள் மனதின் உள்ளே ஓலமிட்டுக்கொண்டே இருக்குமோ தெரியவில்லை. எல்லார் பக்கமும் நியாயம் இருக்கும் ஒரு வழக்கில், யாருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கொடுப்பதென்று தயங்கி நிற்கிற இடத்தில், மேலும் சில அதிர்ச்சித் திறப்புகளை வழங்கும் ஒரு கதை, நெடு நேரம் கலங்கடிக்கிறது. ச.துரையின் எழுத்து அலட்டல்களோ அவசரமோ இல்லாமல் துருத்திக்கொண்டும் நிற்காமல் நிறுத்தி நிதானமாகக் கதையைச் சொல்கிறது. வாசிக்கச் சுகமளிக்கும் நடை. - கார்த்திக் தமிழ்
தீடை
ச.துரை
சால்ட் பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 8939409893