

ஓர் ஒளிப்பதிவாளர் தனது கையில் வைத்திருக்கும் ஒளிப்படக் கருவியைக் கொண்டு எப்படி ஓர் உன்னதக் கலைஞன் நிலைக்கு உயர முடியும் என்பதற்கான வழிமுறைகளை நூலாசிரியர் அமிழ்தினி தனசேகரன் இந்நூலில் வழங்கியிருக்கிறார். மொத்தம் 26 கட்டுரைகள் உள்ளன.
அதில் 7 கட்டுரைகளுக்குக் கேள்வியையே தலைப்பாக வைத்து, அதற்கான பதிலைக் கட்டுரைகளாக வடிவமைத்துள்ளார். கேமரா, ஒளி, கலை, ஒளிப்படங்கள், பிராண்ட் ஆகியவற்றை ஓர் ஒளிப்படக் கலைஞர் எவ்வாறு அணுக வேண்டும் என்பதைத் தெளிவாக நூலாசிரியர் எழுதியிருக்கிறார். - நிஷா
மனதில் நிரம்பும் ஒளி
அமிழ்தினி தனசேகரன்
ஷட்டர் கய்ஸ் வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9943522338
பரந்துபட்ட அறிவுக் களஞ்சியம்: பல்வேறு தலைப்புகளின் கீழான 31 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கட்டுரைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விஷயங்களைப் பேசக்கூடியவை. ரஷ்யாவில் எழுந்த புரட்சி பற்றி முதல் கட்டுரை பேசுகிறது. மகாகவி பாரதியார், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் போன்றோர் குறித்த கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
நல்லகண்ணு, க.இராசாராம் போன்ற அரசியலாளர்கள் பற்றிய கட்டுரைகளையும் நூலாசிரியர் எழுதியுள்ளார். கார்ட்டூன் பற்றிய கட்டுரையில் ராஜாஜி காலத்தில் ஏற்பட்ட சம்பவத்தைப் பற்றி சுவைபடக் கூறியிருக்கிறார். பல வகையான கட்டுரைகள் நூலாசிரியரின் பரந்துபட்ட அறிவைப் பறைசாற்றுகின்றன. - விபின்
நெஞ்சைச் சுட்ட நெருப்பாறுகள்
தி.இராசகோபாலன்
வானதி பதிப்பகம்
விலை: ரூ.220
நம் வெளியீடு: விலங்குகளுக்கும் காய்ச்சல் வருமா? - பூநாரை ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது? விலங்குகளுக்கும் காய்ச்சல் வருமா? அடிபட்ட பாம்பு பழிவாங்குமா? பேய் இருக்கிறதா? இப்படி சுவாரசியமான கேள்விகளை மாணவர்களால்தான் கேட்க முடியும். இம்மாதிரியான கேள்விகளுக்கு சிறுவர்களுக்குப் புரியும்படி நூலாசிரியர் பதில் அளித்துள்ளார்.
மாணவர்கள் மட்டுமல்லாது, பெரியவர்களும் அறிந்துகொள்ளும் பல விஷயங்கள் இந்த நூலில் சுவாரசியமான மொழியில் சொல்லப்பட்டுள்ளன. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘மாயாபஜார்’ இணைப்பிதழ் பகுதியில் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ என்கிற தலைப்பில் வெளிவந்த இந்தத் தொடர் அதே தலைப்பில் நூலாகியுள்ளது.
டிங்குவிடம் கேளுங்கள்
எஸ். சுஜாதா
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 7401296562 / 7401329402
ஆன்லைனில் பெற: store.hindutamil.in/publications