பேசத் தயங்கிய விஷயம்... இன்று பெருமைக்குரிய அடையாளம்..!

நவ.13: இன்று - உலக கழிப்பறை தினம்
பேசத் தயங்கிய விஷயம்... இன்று பெருமைக்குரிய அடையாளம்..!
Updated on: 
2 min read

புதுக்கோட்டை: ஆரோக்கியம் மட்டுமல்ல, பெண்களின் கண்ணியம், கல்வி, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது கழிப்பறை. ஆனால், உலகில் சுமார் 350 கோடிபேருக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி இருந்தாலும், சுமார் 42 கோடி மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளதாக ஐ.நா. கூறுகிறது.

இந்த நிலையை மாற்றவும், சுகாதாரம் என்பது ஆடம்பரம் அல்ல, அது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் நவ. 19-ம் தேதி உலக கழிப்பறை தினமாகக் கொண்டாடப்படுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் குடிநீர் மாசுபடுவதுடன், வயிற்றுப்

போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. மத்திய அரசு 2014-ம்ஆண்டு தூய்மை பாரத இயக்கத்தைத் தொடங்கி, ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை என்ற இலக்குடன் நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட தனிநபர்கழிப்பறைகளைக் கட்டியது.

தமிழக அரசும் இதில் முக்கியப் பங்கு வகித்தது. அதாவது, பள்ளிகள், அங்கன்வாடிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் என அனைத்துப் பொது இடங்களிலும் சமுதாயக் கழிப்பறைகள் கட்டப்பட்டன. கழிப்பறை கட்டுவதற்கு மானியம், கழிப்பறை பராமரிப்புக்குத் தனி நிதி, சுத்தம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் தாக்கம், கழிப்பறை பற்றிப் பேசவே கூச்சப்பட்ட மக்கள், இன்று கழிப்பறையை அவசியமாகக் கருதுவதுடன், அதைப் பயன்படுத்துவதுதான் நாகரிகம் என கருதுகின்றனர். ஆனாலும், கட்டப்பட்ட கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பது, தண்ணீர் இல்லாமல் பூட்டி வைப்பது, பராமரிக்காமல் விடுவது போன்ற சவால்கள் இன்னும் நீடிக்கத்தான் செய்கின்றன.

இதுதொடர்பாக, தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டதனிநபர் இல்லக் கழிப்பறைகளையும், 500-க்கும் மேற்பட்ட பள்ளிக் கழிப்பறைகளையும் கட்டமைத்ததற்காக, மத்திய அரசிடம் இருந்து 2022-ல் பத்மஸ்ரீவிருது பெற்ற கிராமாலயா நிறுவனத்தின் தலைவர் எஸ்.தாமோதரன் கூறியதாவது: இது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல. இது ஒரு நினைவூட்டல்.

கழிப்பறை பற்றிப் பேசுவது கூச்சம் அல்ல, அது பெருமை என்பதை இந்த நாள் உலகுக்கு உணர்த்துகிறது. எதிர்கால இந்தியாவில் ஒரு வீடு கூட கழிப்பறை இல்லாமல் இருக்கக்கூடாது. ஒவ்வொரு கழிப்பறையும் சுத்தமாக, தண்ணீர் வசதியுடன், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

கழிப்பறையைப் பயன்படுத்துவதும், சுத்தமாகப் பராமரிப்பதும் பழக்கமாக மாற வேண்டும். சுத்தம் என்பது அரசின் வேலை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் கடமையும் கூட. கழிப்பறை இருந்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், தொற்றுநோய் பரவலைத் தடுக்க முடியும். எனவே, ஒவ்வொரு வீட்டிலும் முறையான கழிப்பறை வசதி இருப்பது மிகவும் அவசியம். கழிப்பறை கட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல், அவற்றை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தவும் முறையாகப் பராமரிக்கவும் வேண்டும். எதிர்காலத்தில் கழிப்பறை வசதிகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

<div class="paragraphs"><p>எஸ். தாமோதரன்</p></div>

எஸ். தாமோதரன்

அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் சுத்தமான கழிப்பறைகளும், அனைத்துப் பொதுக் கழிப்பறைகளிலும் தண்ணீர் மற்றும் மின்சார வசதிகளும் இருக்க வேண்டும். கழிவுநீரைச் சுத்திகரித்து மறுபயன்பாடு செய்யும் தொழில்நுட்பங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

அரசு மட்டும் முயற்சி செய்தால் போதாது. பொதுமக்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து கழிப்பறைகளைப் பயன்படுத்தி, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். எனவே, கழிப்பறை கட்டி, பராமரிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. தூய்மையான வீடு, தூய்மையான கிராமம், தூய்மையான நகரம், ஆரோக்கியமான தமிழகம் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்றார்.

பேசத் தயங்கிய விஷயம்... இன்று பெருமைக்குரிய அடையாளம்..!
இந்தியாவின் முன்னோடியாக உருவெடுத்த வாராணசி தொகுதி: வாராணசி மண்டல ஆணையர் ராஜலிங்கம் சிறப்பு பேட்டி

X