
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் எம்.பி. தொகுதியான வாராணசி இந்தியாவின் முன்னோடியாக வளர்ச்சி பெற்றுவிட்டதாக அதன் மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் கூறியுள்ளார்.
தமிழகத்தின் தென்காசியைச் சேர்ந்த தமிழரான எஸ்.ராஜலிங்கம், உத்தர பிரதேச மாநிலம் வாராணசி மாவட்ட ஆட்சியராகவும், பணி உயர்வுக்கு பின் மண்டல ஆணையராகவும் அதே நகரில் சுமார் 4 ஆண்டுகளாகப் பணியாற்றினார். தற்போது அவர் கான்பூர் மண்டல ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய பொறுப்பை ஏற்கும் முன்பாக பிரதமர் நரேந்திர மோடியின் வாராணசி தொகுதி குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறை எம்.பி.யாக இருப்பதால் வாராணசியில் ஏற்பட்டுள்ள முக்கிய வளர்ச்சி என்ன?
வாராணசியின் சாலை, ரயில் மற்றும் கங்கை நதி ஆகியவற்றின் போக்குவரத்து முழு வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால் டெல்லியின் என்சிஆர் போல் மேம்படுத்த விசாகப்பட்டினம், சூரத், மும்பையின் ஒரு பகுதி மற்றும் வாராணசி ஆகிய 4 நகரங்கள் தேர்வாகி உள்ளன. வாராணசி என்சிஆர் பகுதிக்கு ‘காசி விந்தியப் பிராந்தியம்’ என்ற சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இதில், வாராணசி மற்றும் அதன் அருகிலுள்ள மிர்சாபூர் மண்டலங்களின் 7 மாவட்டங்கள் அடங்கி உள்ளன. வாராணசி வளர்ச்சியை அடிப்படையாக வைத்து இப்பிராந்தியத்தை பொருளாதார ரீதியாக தரம் உயர்த்த திட்டமிடப்படுகிறது.
பிரதமராக இருப்பதால், வாராணசி தொகுதிவாசிகள் தங்கள் எம்.பி.யை நினைத்தபோது தொடர்புகொள்ள முடிகிறதா?
தொகுதிவாசிகளுக்காக குருதாம் பகுதியில் பிரதமர் அலுவலகக் கிளை செயல்படுகிறது. இங்கு மக்களின் குறைகளைத் தீர்க்க அன்றாடம் ஒரு அமைச்சர் அல்லது எம்எல்ஏ வந்து அமர்ந்து கேட்கிறார்கள். இதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் ஆலோசிக்கப்படுகிறது. இதனால், சுமார் 90% மனுக்களுக்கு இங்கேயே தீர்வு கிடைத்து விடுகிறது. இதர மனுக்கள் பிரதமரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவற்றில் தங்கள் எம்.பி.யை நேரில் சந்திக்க விரும்பி கோருபவர்களும் உண்டு. அதற்கான முக்கியத்துவம் ஆராய்ந்து பிரதமர் வாராணசி வரும் நாட்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
வாராணசியின் கங்கை நதியில் பிணங்களும் வீசப்படும் என்ற பொதுவான கருத்து மாறி உள்ளதா? இதற்கு பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
கங்கையில் இப்போது பிணங்களை யாரும் வீசுவதில்லை. இதன் மீது தடை விதித்து அது தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதால் அந்த கருத்து முற்றிலும் மாறி விட்டது. காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ‘நேஷனல் மிஷன் பார் கங்கா’ திட்டம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட கங்கை கமிட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
கங்கை மீதான எந்த ஒரு பிரச்சினையும் இந்த கமிட்டி முன்வைக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. பிணங்கள் மட்டும் அன்றி தொழிற்சாலைகளின் கழிவு உள்ளிட்ட எந்தவிதமான மாசுகளும் கங்கையில் கலக்காமல் கவனமாகக் கண்காணிக்கப்படுகிறது. கங்கைக் கரையிலுள்ள மணிகன்கா காட், ஹரிச்சந்திரா காட் ஆகிய மயானங்கள் சுமார் ரூ.50 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன.
வாராணசியில் அமலாக்கப்பட்டு வரும் கூடுதல் திட்டங்கள் பற்றி கூற முடியுமா?
இங்குள்ள சர்வதேச விமான நிலையம் ரூ.2,308 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் நாட்டில் எங்கும் இல்லாத வகையில், விமான ஓடுதளப் பாதைக்கு கீழே வாகனங்கள் சென்றுவர சுரங்கம் அமைக்கப்படுகிறது. நகரைச் சுற்றியுள்ள ரிங் ரோடு பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நகரின் மின்சாரவயர்கள் அனைத்தும் ரூ.1,657 கோடியில் பூமிக்கு அடியில் அமைக்கப்படுகின்றன.
கிரிக்கெட் மைதான அரங்கு, காஞ்சி பட்டைப் போல் புகழ்பெற்ற பனாரஸ் பட்டு வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. நாட்டில் எங்கும் இல்லாத வகையில் ஒரு பிரம்மாண்டமான ‘யுனிட்டி மால்’ வணிக வளாகம் ரூ.154 கோடியில் அமைகிறது. இதில், அனைத்து மாநிலங்களுக்கும் தலா ஒரு கடை, உ.பி.யின் 75 மாவட்டங்களுக்கும் தலா ஒரு கடை ஒதுக்கப்பட உள்ளது. ரூ.315 கோடியில் ஒரு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டப்படுகிறது. ரூ.400 கோடியில் விளையாட்டு அரங்கு மற்றும் மாவட்டத்துக்காக ரூ.20 கோடியில் ஒரு நூலகமும் அமைகிறது.
கிராமங்களை எம்.பி.க்கள் தத்தெடுக்கும் முறையால் பிரதமரின் முயற்சிக்கு கிடைத்த பலன் என்ன?
கோவிட் தவிர மற்ற ஆண்டுகளில் வருடம் தலா 5 கிராமங்களை பிரதமர் தத்தெடுத்தார். அங்கு குடிநீர், சாலை போக்குவரத்து, சோலார் மின்சாரம், சுகாதாரம், கல்விக்கூடங்கள், கைத்தொழில் பயிற்சி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன. இதற்காக, எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியும், பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோல் பல விஷயங்களில் வாராணசி ஒரு எம்.பி.யின் தொகுதியாக நாட்டுக்கு முன்னோடியாக உள்ளது.
வாராணசியின் சாலைகள் விரிவாக்கத்தில் வழியிலிருந்த கோயில்கள், மசூதிகளின் நிலை என்ன? மிகவும் உணர்திறனான இப்பிரச்சினை உங்கள் நிர்வாகத்தினால் சமாளிக்கப்பட்டது எப்படி?
சுமார் 150 கோயில்கள் தடையாக இருந்தன. இதன் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன் பலனாக, இவற்றில் பலவற்றை இடமாற்றம் செய்துள்ளோம். ஒருசில கோயில்களை ஒரே வளாகத்தில் அமைத்துக் கொடுத்துள்ளோம். தடையாக இருந்த சுமார் 7 மசூதிகள் இடம்பெயரத் தங்கள் மறையின்படி முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
எனினும், அதன் நிர்வாகிகள் தாங்களாகவே சில மசூதிகளின் ஒருபகுதியை இடித்து ஒதுக்கி தந்தனர். இந்த இழப்புக்கு ஈடாக வேறு திசையில் அவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. இதன்மூலம், மசூதிகளின் நிலஅளவு குறையாமலும், இடம்பெயராமலும் சமாளிக்கப்பட்டு விட்டன. மேலும் ஒரிரு மசூதிகளின் இடத்துக்கு ஈடாக அவர்களுக்கு அரசு இழப்பீடு அளித்து விட்டது.
பிரதமர் யோசனையால் நடத்தப்படும் காசி தமிழ் சங்கங்களால் இதுவரை கிடைத்த பலன் என்ன?
வாராணசியில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலவாசிகள் இடம்பெயர்ந்து வசிக்கின்றனர். இந்த சங்கமங்களால் அவர்களிடையே தமிழர்கள் மற்றும் தமிழ் மொழி மீதான வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றைப் பற்றிய ஒரு புரிதலும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. சங்கங்மகளுக்கு முன்பாக நிலவி வந்த வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு குறைந்துள்ளது. மொத்தத்தில் தமிழர்களுக்கு ஒரு தேசிய அடையாளம் இந்த சங்கமங்களால் கிடைத்து வருகிறது.
தமிழின் பெருமையை அறிய வேண்டி, திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு நூல்கள் படிப்பது அதிகரித்துள்ளது. கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்தும் இந்த சங்கமங்களுக்கு தரப்படும் யோசனைகளை பிரதமர் ஏற்கத் தயாராக உள்ளார். இதுபோல் வந்த ஒரு யோசனையால்தான், கடந்த சங்கமத்தின்போது உ.பி.வாசிகளை ராமேஸ்வரம் அழைத்துச் சென்று நிறைவுவிழா நடத்தப்பட்டது.