

புதுடெல்லி: உலகம் முழுவதும் நேற்று பிரியாணி தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 16-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பிரியாணி அறிமுகமானது.
தற்போது அமெரிக்கா, கனடா, பிரிட்டன், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரியாணி பிரபலமாக உள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக பிரியாணி தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நேற்று பிரியாணி தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஓட்டல்களில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி, நண்டு பிரியாணி மற்றும் சைவ வகை பிரியாணிகளுக்கு நேற்று சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. அசைவ, சைவ ஓட்டல்களில் மக்களின் கூட்டம் அலை மோதியது.
கர்நாடகாவின் பட்கலி பிரியாணி, தெலங்கானாவின் ஹைதராபாத் மட்டன் பிரியாணி, தெலங்கானாவின்மோதி பிரியாணி, தமிழகத்தின் செட்டிநாடு சிக்கன் பிரியாணி, காஷ்மீர் பிரியாணி, கேரளாவின் மலபார் பிரியாணி ஆகியவற்றை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.
உலக பிரியாணி தினம் குறித்து உணவு பிரியர்கள் கூறியதாவது: முகலாயர் ஆட்சியின்போது மத்திய ஆசியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் பிரியாணி நுழைந்தது. தற்போது இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு வகையான உணவு பழக்கங்கள் உள்ளன. எனினும் நாடு முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் உணவாக பிரியாணி உருவெடுத்திருக்கிறது. ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்படும் உணவாக தொடர்ந்து முதலிடத்தில் பிரியாணி நீடிக்கிறது.
குறிப்பிட்ட பாசுமதி அரிசி நிறுவனத்தின் முயற்சியால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக உலக பிரியாணி தினம் கொண்டாடப்பட்டது. தற்போது 5-வது ஆண்டாக இந்தியா முழுவதும் பிரியாணி தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு உள்ளது. இவ்வாறு உணவு பிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.