

இணையத்தில் தற்போது ‘நிஹிலிஸ்ட் பென்குயின்’ என்ற ஒரு பென்குயினின் வீடியோ வைரலாகி வருகிறது. டிக்டாக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்து வரும் இந்த வீடியோ பலராலும் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது.
புகழ்பெற்ற ஜெர்மன் இயக்குநர் வெர்னர் ஹெர்சாக், 2007ஆம் ஆண்டு அண்டார்டிகாவைப் பற்றி எடுத்த ‘என்கவுன்டர்ஸ் அட் தி எண்ட் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற ஆவணப்படத்தில் இந்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக பென்குயின்கள் சமூக விலங்குகள். அவை எப்போதும் கூட்டமாகவே இருக்கும். இனப்பெருக்கம் அல்லது உணவு தேடுதல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே அவை இடம்பெயரும். ஆனால், இந்த வைரல் வீடியோவில் ஒரு பென்குயின் மட்டும் தன் கூட்டத்திலிருந்து பிரிந்து, உணவோ, துணையோ இல்லாத அண்டார்டிகாவின் கரடுமுரடான பனிமலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்கிறது.
இந்த பென்குயின் ஏன் இப்படிச் செய்கிறது? இதற்கு யாரிடமும் விடை இல்லை. இயக்குனர் ஹெர்சாக் அந்த படத்தில், "இதனைத் தடுத்தாலும் அது மீண்டும் மலைகளை நோக்கியே செல்லும். இது ஒருவிதமான தற்கொலைப் பயணம் அல்லது அர்த்தமற்ற தேடல்" என்று குறிப்பிடுகிறார்.
இந்த வீடியோவுடன் தற்போது ‘நிஹிலிசம்’ என்ற வார்த்தையும் வைரலாகி வருகிறது. நிஹிலிசம் என்பது ‘வாழ்க்கைக்கு என்று எந்தவொரு அர்த்தமும் இல்லை, எந்தவொரு மதிப்பும் இல்லை’ என்று நம்பும் ஒரு தத்துவ நிலைப்பாடு.
சமூக வலைதளங்களில் பலரும் இந்தப் பென்குயினின் செயலைத் தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இந்த வீடியோவின் பின்னணியில் சேர்க்கப்படும் சோகமான இசை, அந்தத் தனிமையின் வலியை மேலும் ஆழமாக உணர வைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆவணப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, 2026-ல் வாழும் மனிதர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.