

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால், 2015 முதல் வளர்த்த தனது 8 அடி 10 அங்குல (271.50 செ.மீ) நீள கூந்தலுக்காக உலகின் மிக நீளமான முடி கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ அளவீட்டின் அடிப்படையில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவருக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியது. இந்த முடி நீளமானது, உலகின் மிக உயரமான மனிதராகப் பதிவு செய்யப்பட்ட ராபர்ட் வோட்லோவின் உயரத்துக்கு (272 செ.மீ) நிகரானது ஆகும்.
இந்தியப் பாரம்பரியத்தில் நீளமான கூந்தல் அழகுக்கான அடையாளமாகக் கருதப்படுவதால், ரேணு கடந்த 10 ஆண்டுளாகத்தன் முடியை வெட்டாமல் வளர்த்துள்ளார்.
தற்போது தரையில் தவழும் அளவுக்கு நீண்டுள்ள இக்கூந்தலை, வெளியே செல்லும்போது பின்னலிட்டுப் பராமரிக்கிறார். இதன் மூலம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அலியா நசிரோவா என்பவரின் 257.33 செ.மீ நீள (8 அடி 5.3 அங்குலம்) கூந்தல் சாதனையை முறியடித்துள்ளார். செயற்கை ரசாயனங்களைத் தவிர்த்து, வீட்டிலேயே தயாரித்த இயற்கை எண்ணெய், ஷாம்பூ மற்றும் பொறுமையான சிக்கெடுக்கும் பராமரிப்பே இச்சாதனைக்குக் காரணமாகும்.
சமூக வலைதளங்களில் கூந்தல் பராமரிப்பு ஆலோசனைகளை வழங்கி வரும் ரேணு, இச்சாதனை இந்தியாவுக்கும், தன் பகுதிக்கும் பெருமை சேர்ப்பதுடன், மக்கள் இயற்கையான அழகு மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்ற ஊக்கமளிக்கும் எனக் கூறியுள்ளார்.