

உணவுத் திருவிழாவில் மாணவ, மாணவிகள்
ராமேசுவரம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் சிறுதானிய உணவுகளை கொண்டு வந்து மாணவ, மாணவிகள் அசத்தினர்.
ராமேசுவரம் வர்த்தகன் தெருவில அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ராமநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் முருங்கை, வெற்றிலை, துளசி அல்வா சிறப்பு இடம் பெற்றிருந்தது. மேலும் கம்பு, கேப்பை, கேழ்வரகு, சோளம், கடலை, பருப்பு உள்ளிட்ட சிறுதானியங்களில் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஆசிரியர்கள் சிறுதானிய உணவுகளின் ஆரோக்கியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற கண்காட்சியில் மாணவர்கள் தங்களின் அறிவியல் மாதிரி படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவது, சந்திராயன் 3 இயங்கும் விதம், மழைநீர் சேகரிப்பு, காற்று மாசுபடுதலை தவிர்த்தல் ஆகியவற்றை குறிக்கும் 50-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.