

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்களம் பகுதியில் பாரம்பரிய முறையில் போகி மேளம் தயாரித்து விற்பனை செய்யும் அருந்ததியர் மக்கள், தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பிளாஸ்டிக் மேளத்தை தடை செய்யவும், மானியத்துடன் கடனுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அருந்ததியர்புரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அமைந்துள்ளன. இவர்கள், அனைவரும் போகி மேளம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தற்போது பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மேளம் விற்பனை செய்யப்படுவதால், பாரம்பரியாக தயாரிக்கப்படும் போகி மேளம் விற்பனை குறைந்துள்ளதாக அதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், தொழிலாளர்களுக்கு சீசன் தொடங்கும்போது, மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியது: “போகி மேளம் தயாரிக்க சென்னையில் உள்ள ஆட்டுத்தொட்டிக்கு சென்று மொத்தமாக தோல் மற்றும் மாட்டு கொழுப்பு, குயவர்களிடமிருந்து பானை செய்ய பயன்படுத்தப்படும் கல ஒட்டி, சுண்ணாம்பு பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து, அவற்றை முறையில் அடிப்படையில் ஒன்று சேர்த்து பாரம்பரியமாக மேளம் தயாரித்து தலா ஒருமேளம் ரூ.50 என விற்பனை செய்கிறோம்.
இதிலும், கிராமங்கம் மற்றும் நகரப்பகுதிக்கு ஏற்றவாறு விலை மாறுபாடு உள்ளது. ஆனால், காலத்தின் மாற்றம் இந்த மேளத்தை தவிர்த்து பிளாஸ்டிக் மேளத்தையே பொதுமக்கள் நாடி செல்லும் நிலை உள்ளது.
தற்போது, அருந்ததியர் சமூகம் மட்டும் தான் போகி மேளம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு, பொங்கல் சீசனில் அரசு முன் தொகையாகவோ அல்லது மானியத்துடன் கூடிய கடனாகவோ நிதி உதவி செய்து கொடுத்தால் மேளம் தயாரிப்பு தொழில் சிறப்பாக இருக்கும்.
ஆனால், கடனுதவி இல்லாததால், வட்டிக்கு வாங்கி செலவு செய்து தொழிலை மேற்கொள்கிறோம். எனினும், எங்களுக்கு நஷ்டம் மட்டுமே வந்து சேர்கிறது. இதில், லாபம் இல்லாத போதும், குலதொழிலாக சிலர் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை வரும் பண்டிகையை அனைவரும் கொண்டாட வேண்டும்.
அதேபோல், போகி நேரத்தில் அருந்ததியர் மக்களால் செய்யப்படும் மேளத்துக்கு உரிய விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். எங்களிடமிருந்து அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், முக்கியமாக பிளாஸ்டிக் மேளத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.