

மதுரை: புகைப்பழக்கம் ரத்தநாளச் சுருக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அடைப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்பதால், அதைக் கைவிட வேண்டும் என ரத்த நாள அறுவைசிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், வீக்கம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் ரத்த ஓட்டம் தடைபடும்போது ரத்தநாள நோய்கள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ரத்த நாள அறுவைச்சிகிச்சை நிபுணர் பாலாஜி கூறியதாவது: நம் உடலில் ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் மற்றும் நரம்புகள் உள்ளிட்ட ரத்த ஓட்ட அமைப்பில் ஏற்படும் நோய்கள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
‘தினமும் ஒரு மைல் தூரம் நடந்தால் மகிழ்வுடன் வாழலாம்’ என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரத்தநாள நோய் காரணமாக உறுப்பு நீக்கம் இல்லாத உலகைப் படைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
இந்நோய் வருவதற்கான முதல் காரணம் புகைப் பழக்கம்தான். இதனால், ரத்தநாளச் சுருக்கத்தை ஏற்படுத்தி அடைப்புகள் ஏற்பட வழிவகுக்கும். எனவே, இந்நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், முதலில் புகைப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்து, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கொஞ்ச தூரம் நடந்தவுடன் கால் வலி வந்தால், அதை சாதாரண கால் வலி என நினைத்து மருந்துக் கடைகளிலோ அல்லது மருத்துவர்களிடமோ சென்று வலிக்கான ஊசி போட்டுக்கொண்டு இதைத் தள்ளிப் போடுவதால் அடைப்பு அதிகமாகி முழுவதும் நடக்க முடியாத நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் கால் கருப்பாக மாறி புண் ஏற்படும். அப்படி கெட்டுப்போன கால் பகுதியை காப்பாற்றுவது மிகவும் சிரமம்.
எனவே, எந்தக் கால் வலியாக இருந்தாலும் ரத்தக்குழாயில் பிரச்சினை உள்ளதா எனப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் இது போன்று அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக ரத்த நாள மருத்துவரை அணுக வேண்டும். தொடக்கத்திலேயே கண்டறிந்தால் நோயின் தன்மையைப் பொறுத்து எளிதில் குணப்படுத்தலாம்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாதத்துக்கு 200-லிருந்து 250 பேருக்கு ரத்தநாள அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. முந்தைய காலத்தில் ரத்த நாள அடைப்பு ஏற்பட்டால் திறந்தநிலை அறுவைசிகிச்சை (ஓபன் சர்ஜரி), தமனி மாற்று அறுவைசிகிச்சை (பைபாஸ் சர்ஜரி) என இருந்தது.
தற்போது இருதள இதயக் குழாய் வரைவக மையம் (பைப்லேனர் கேத்லேப்) மூலம், ரத்தக் குழாயினுள்ளானது (எண்டோ வாஸ்குலர்) என சொல்லப்படுகிற மெல்லிய குழாய்களைப் பயன்படுத்தி சேதமடைந்த ரத்த நாளங்களை உள்ளிருந்து சரிசெய்யப் பயன்படும் நவீன சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இச்சிகிச்சை முடிந்து 2 வாரத்தில் வீட்டுக்குச் சென்றுவிடலாம். தென் தமிழகத்தில் மதுரையில் மட்டும்தான் இந்த வசதி உள்ளது. இச்சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டால் குறைந்தது ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்படுகிறது என்றார்.