

சென்னை: “கோயில் என்பது பக்தர்களுக்கு நிம்மதியும் ஆன்மிக மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த இடமாக மாறிவிடக் கூடாது” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, அதனை வைப்பதற்கே ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே இறைவனை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது குடும்பத்தோடு வரும் பக்தர்கள், தங்களது செல்போனை வைப்பதற்காகவும் தனியாக வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கது. கோயிலுக்கு செல்வதே ஒரு சவாலான அனுபவமாக மாறிவிடக் கூடாது. பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிம்மதியுடனும் இறைவனை தரிசிக்க வழிவகை செய்வதே அரசின் கடமையாகும்.
இன்று இந்த தவெக அரசு கோயில்களிலும் பக்தர்களிடமும் விதித்து வரும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள், இந்து மதத்தையும் பக்தர்களின் உணர்வுகளையும் பாதிக்கும் நடவடிக்கைகளாக நடவடிக்கைகள் ஆகவும் அவர்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக மன தாக்குதல்களாகுமே பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று, இறைவனை மனநிறைவுடன் தரிசித்து, நமது பாரம்பரியக் கலைச்சிற்பங்களை ரசித்து, கோயில் பிரசாதத்தைப் பெற்று, இறைவனின் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும். கோயில் என்பது பக்தர்களுக்கு நிம்மதியும் ஆன்மிக மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த இடமாக மாறிவிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.