கம்பம் பள்ளத்தாக்கில் 27 ஆண்டுகளாக நடக்கும் ‘பென்னிகுவிக் பொங்கல்’

பிள்ளைகளுக்கு குல தெய்வத்தின் பெயருக்குப் பதிலாக பென்னிகுவிக் பெயரை வைக்கும் மக்கள்
கம்பம் பள்ளத்தாக்கில் 27 ஆண்டுகளாக நடக்கும் ‘பென்னிகுவிக் பொங்கல்’
Updated on
2 min read

முல்லை பெரியாறு அணையைக் கட்டி முடிப்பதையே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு அதனை நிறைவேற்றியும் காட்டி கம்பம் பள்ளத்தாக்கைக் குறிப்பாகத் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி செழிக்கச் செய்தவர் ஆங்கி லேயரான கர்னல் பென்னிகுவிக். இவரது வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாது, தமிழ்ப் பண்பாட்டோடு இரண்டறக் கலந்துவிட்டது.

கிராமப்புற மக்களின் வாழ்க்கை செழிக்க, வாழ் வாதாரம் உயர உழைத்த பென்னிகுவிக் பிறந்தநாள் ஜனவரி 15-ம் தேதி என்பதால், அந்நாளில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள், 27-வது ஆண்டாக தொடர்ந்து தமிழ்த் திருநாளான தைப்பொங்கலை பென்னி குவிக்குக்கு சமர்ப்பணம் செய்து மகிழ்கிறார்கள்.

இதுகுறித்து காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ் பேரா சிரியர் ஒ.முத்தையா கூறுகை யில், "முல்லை ஆற்றங்கரையில் வசிக்கும் விவசாயப் பெரு மக்கள், இந்த விழாவில் பங்கேற்று பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு காளைகளை பிடித்துக் கொண்டு முன்னால் சிலம்பாட்டம், தேவராட்டம் ஆடிவர பின்னால் பெண்கள் பொங்கல் பானைகளை சுமந்து கொண்டு குலவையிட்டு மகிழ்கின்றனர். பெண்கள் தங்கள் வயலில் விளைந்த புதுநெல்லைக் குத்திப் புடைத்து பொங்கல் பானையுடன் குலவை யிட்டு கொண்டு ஆரவாரத் தோடு ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர்.

பென்னிகுயிக் திரு உருவப் படத்தின் முன்னால் பெண்கள் பொங்கல் வைத்து படையலிடுகின்றனர். பின்னர் அவரது புகழை கும்மியடித்து பாடி ஆடுகின்றனர். சிறுவர்களும் இளைஞர்களும் 'தாகம் தீர்த்த தலைமகன் வாழ்க, விவசாயிகளின் கண்கண்ட தெய்வம் பென்னிகுவிக் வாழ்க, என்று முழக்கமிடுகின்றனர். தங்களின் பிள்ளைகளுக்கு குலதெய்வத்தின் பெயருக்குப் பதிலாக பென்னிகுவிக்கின் பெயரை வைத்து அழைத்து மகிழ்கின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி யில் குறிப்பாக பாலார்பட்டி, சுருளிப்பட்டி உப்புக்கோட்டை, அம்மாபட்டி, வீரபாண்டி ஆகிய ஊர்களில் தவறாமல் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.” என்றார்.

பாலார்பட்டியைச் சேர்ந்த ஆண்டி கூறுகையில், ”பென்னிகுவிக் பிறந்த நாளை முதன்முதலாகப்ப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடியது உப்புக்கோட்டை பஞ்சாயத்தில் உள்ள எங்கள் கிராமமான பாலார்பட்டிதான். 2000-வது ஆண்டிலிருந்து தொடர்ந்து பென்னிகுவிக் பொங்கல் விழாவை தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி வருகிறோம். எங்கள் ஊர் பெண்கள் தைப்பொங்கலன்று வீட்டில் பொங்கல் வைக்கிறார்களோ இல்லையோ தவறாமல் பென்னிகுவிக்குக்கு பொங்கல் வைத்துவிடுவர்.

பென்னிகுவிக் பேரன்ஸ்டுவர்ட் சாம்சன் முல்லை பெரியாறு அணையை பார்வையிட வந்தபோது எங்கள் ஊரில் கொண்டாடப்படும் பென்னி குவிக் பொங்கல் விழாவை அறிந்து வருகை தந்தார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து வரவேற்றோம். அவரது பேத்தியும் இங்கு வந்துசென்றார்" என்று கூறினார்.

எங்கோ பிறந்து தமிழக தென் பகுதியில் செயற்கரிய செயலை செய்து முடித்த பென்னிகுவிக்குக்கு தமிழர் பண்பாட்டு மரபில் நீங்காத இட முண்டு என்பதில் ஐயமில்லை.

கம்பம் பள்ளத்தாக்கில் 27 ஆண்டுகளாக நடக்கும் ‘பென்னிகுவிக் பொங்கல்’
Eko Climax Explained: என்ன ஆனார் குரியச்சன்? | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in