டிஜிட்டல் காலத்துக்கு முந்தைய திரையரங்க அனுபவத்தை மீட்டெடுக்கும் கேரள பேஸ்புக் குழுவின் முயற்சி

டிஜிட்டல் காலத்துக்கு முந்தைய திரையரங்க அனுபவத்தை மீட்டெடுக்கும் கேரள பேஸ்புக் குழுவின் முயற்சி
Updated on
2 min read

கொச்சி: இப்போதெல்லாம் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க விரும்பினால் வீட்டில் இருந்தபடி இணையவழியில் திரையரங்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற முடியும். அதோடு டிஜிட்டல் சினிமா பதிப்புகளின் வரவு திரையரங்க அனுபவத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இவற்றுடன் ஓடிடி வரவும் இப்போது அதிகரித்துள்ளது.

இத்தகைய நிலையில் டிஜிட்டல் காலத்துக்கு முந்தைய ‘அனலாக்’ திரையரங்க அனுபவத்தை மீட்டெடுக்கும் முயற்சியை கேரள மாநிலத்தில் உள்ள ‘தியேட்டர் டைரிஸ்’ என்ற பேஸ்புக் குழுவினர் முன்னெடுத்துள்ளனர். இவர்கள் இந்தக் குழுவில் இணைந்து பயணிக்க அந்தக் கால திரையரங்க அனுபவம் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

படப்பெட்டி, திரைச்சுருள், கவுன்டரில் டிக்கெட் விநியோகம் என டிஜிட்டல் திரையரங்க அனுபவத்துக்கு முந்தைய திரையரங்க அனுபவத்தை அப்படியே மீள் உருவாக்கம் செய்யும் பணியை அண்மையில் இந்த ‘தியேட்டர் டைரிஸ்’ குழுவினர் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினர்.

கடந்த 5-ம் தேதி கேரள மாநிலம் பெரும்பாவூருக்கு அருகே உள்ள குருமாசேரியில் அமைந்துள்ள கிருபா திரையரங்கில் ‘அனலாக்’ முறையில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ல் வெளிவந்த ‘பாட்ஷா’ திரைப்படத்தைத் திரையிட்டனர்.

கடந்த 90-களின் திரையரங்க அனுபவத்தை உயிர்பெறச் செய்யும் வகையில் சைக்கிள் ஒன்றில் ‘பாட்ஷா’ திரைப்படத்தின் படப்பெட்டி கொண்டுவரப்பட்டது. இந்தப் படத்தை பார்வையாளருக்கு கட்டணமின்றி திரையிட்டது இந்தக் குழு. இருப்பினும் கவுன்ட்டரில் டிக்கெட் கொடுக்கப்பட்டது. பார்வையாளர்கள் வரிசையில் நின்று அதைப் பெற்று படம் பார்த்தனர்.

இதற்காக கிருபா திரையரங்க ஊழியர்கள் தங்கள் உரிமையாளரின் துணையுடன் அனலாக் ப்ரொஜெக்டரை சீர் செய்து, அதில் பாட்ஷா படத்தைத் திரையிட்டுள்ளனர். இந்தப் படம் மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு திரையிடப்படுகிறது.

11 பேர் அட்மின்கள்

‘தியேட்டர் டைரிஸ்’ ஃபேஸ்புக் குழுவில் மொத்தம் 11 பேர் அட்மின்களாக உள்ளனர். அவர்களில் ஒருவராக கிருபா திரையரங்க உரிமையாளர் ஆண்டோ உள்ளார்.

“எங்களிடம் இருந்த இரண்டு அனலாக் ப்ரொஜெக்டரில் ஒன்றை இந்த முயற்சிக்காக சீர் செய்தோம். இப்போது உள்ள ப்ரொஜெக்டரில் படத்தை திரையிடுவது எளிய பணி. ஆனால், அனலாக் ப்ரொஜெக்டரில் அந்த பணியை அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும்” என ஆண்டோ தெரிவித்தார்.

முதலில் மலையாள சினிமாவை திரையிடவே இந்தக் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், முறையான பிரிண்ட் கிடைக்காத காரணத்தால் பாட்ஷா படத்தை திரையிட்டுள்ளது. இதன் மூலம் பழைய மலையாள படங்களில் திரைச்சுருள் கிடைப்பதில் உள்ள சிக்கலை இந்தக் குழு சுட்டிக்காட்டி உள்ளது.

அனலாக் முறையில் படத்தைத் திரையிடுவது தங்கள் குழுவின் முயற்சிகளில் உள்ள ஒரு திட்டம் என்று அந்த குழுவின் அட்மின்கள் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் சினிமாவின் வரவு காரணமாக திரையரங்க இயக்கத்தில் வழக்கத்தில் இருந்த பல்வேறு பணிகள் மறைந்துவிட்டன. காலப்போக்கில் மூடப்பட்ட திரையரங்குகள், அதன் செயல்பாடுகளை ஆவணப்படுத்தவும் இந்தக் குழு திட்டமிட்டுள்ளது.

மேலும், திரையரங்குகளின் வரலாறு குறித்த நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்ய இந்த குழு திட்டமிட்டுள்ளது. தங்களின் இந்த முயற்சி திரையரங்கம் குறித்து தரவுகளை அதிகளவில் திரட்டவும், அது சார்ந்து ஆய்வுகளுக்கு உதவும் என்றும் அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்த குழு திரையிட்ட பாட்ஷா படத்துக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் காலத்துக்கு முந்தைய திரையரங்க அனுபவத்தை மீட்டெடுக்கும் கேரள பேஸ்புக் குழுவின் முயற்சி
“தடுப்புக் காவலில் உள்ள போர் விமானிகளை விடுவியுங்கள்” - ஈரான் கோரிக்கையும்; கத்தார் மறுப்பும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in