

தெஹ்ரான்: கத்தார் நாட்டின் தடுப்புக் காவலில் உள்ள தங்கள் நாட்டின் மூன்று போர் விமானிகளை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரியுள்ளது.
மேற்காசியாவில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கின. அதற்கு பதிலடி தரும் விதமாக வளைகுடா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்தது. இதில் அமெரிக்க ராணுவ தளங்கள் தான் ஈரானின் இலக்கு.
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் கத்தாரில் ஈரான் வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. அப்போது அந்த போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன. அதனை இயக்கிய ஈரான் விமானிகளில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் மாயமானதாகவும் ஈரான் அப்போது தெரிவித்தது.
இந்நிலையில், ஈரானின் ஆயுதப்படை பிரிவு தலைவர் முகம்மது பகிர்சதே தற்போது கூறியுள்ளதாவது: “போரின் போது சு-24 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதும் அதில் இருந்த மூன்று ஈரான் விமானிகளை கத்தார் படையினர் தங்கள் காவலில் எடுத்தனர்.
ஜாவேத், தாஷ்தியான், உம்ரான் ஆகிய மூன்று விமானிகள் தற்போது கத்தாரின் தடுப்புக் காவலில் சுமார் ஆறு மாத காலம் உள்ளனர்” என்று செஞ்சிலுவை சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கத்தார் மறுப்பு
இந்நிலையில், ஈரான் விமானிகள் தங்கள் காவலில் இல்லை என்பதை கத்தார் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை தீவிரம் கண்டுள்ள நிலையில் இத்தகைய குற்றச்சாட்டு வந்துள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ள இந்த காலகட்டத்தையும் கத்தார் சுட்டிக்காட்டி உள்ளது. தங்கள் வான்பரப்பில் எல்லை மீறி நுழைந்ததாக ஈரான் விமானிகளிடம் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.