

படம் : மெட்டா ஏஐ
“நீங்க அந்தக் குழுவைச் சேர்ந்தவரா?”
“நீங்க வீட்டில் இதைத்தான் சாப்பிடுவீங்களா?”
“உங்க ஊர்ல எல்லாரும் இப்படித்தான் பேசுவாங்களா?”
“நீங்க யூனிஃபார்மை அயர்ன் பண்ணிட்டுத்தான் பள்ளிக்கு வருவீங்களா? உங்க வீட்டில் அப்படிச் சொல்ல மாட்டாங்களா?”
“உங்க வீட்டில் இப்படித்தான் டிரஸ் வாங்கித் தருவாங்களா?”
- இப்படிப்பட்ட கேள்விகளை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்டிருக்கலாம். சில கேள்விகள் உண்மையான ஆர்வத்தில் இருந்து வரலாம். ஆனால், அதே கேள்விகள் கேலி செய்யும் தொனியில் கேட்கப்படும்போதோ, ஒருவரைக் குறைவாக உணரச் செய்யும்போதோ, அவற்றின் அர்த்தம் மாறிவிடுகிறது.
ஒரு குழந்தை அணிந்திருக்கும் உடை, சாப்பிடும் உணவு, பேசும் மொழி, குடும்பத்தின் பொருளாதார நிலை எனப் பல விஷயங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடப்படுகின்றன. சில நேரங்களில், இந்த ஒப்பீடுகள் குழந்தைகளுக்குள் வெட்கத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கலாம். இதைச் சொல்பவர்கள் தாங்கள் தவறாகப் பேசுகிறோம் என்று நினைக்காமல்கூட இருக்கலாம். ஆனால், கேட்பவருக்கு அது ஏற்படுத்தும் தாக்கம் வேறாக இருக்கலாம்.
வேறுபாடுகள் எப்போது பாகுபாடாக மாறுகின்றன?
நம்மைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்த உணவுப் பழக்கம், மொழி, உடை, வாழ்க்கை முறை, பொருளாதாரச் சூழல் ஆகியவை இருக்கின்றன. இந்த வேறுபாடுகள் இயல்பானவை. அவற்றைப் பற்றி அறிந்துகொள்வதும் பேசுவதும் தவறல்ல. ஆனால், ஒருவரின் வேறுபாட்டை வைத்து அவரைத் தாழ்வாகப் பார்ப்பதும், அவருடைய திறமையை மதிப்பிடுவதும், அவரை ஒரு குறிப்பிட்ட குழுவுக்குள் அடைத்துவிடுவதும்தான் பிரச்சினையாகிறது.
உதாரணமாக, ஒரு மாணவி வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவைப் பார்த்து வகுப்பில் சிலர் கேலி செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலில் அவள் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் உணவைக் கொண்டு வரும்போது அதே அனுபவம் தொடர்ந்தால், ஒருநாள் அவள் உணவைக் கொண்டு வருவதையே தவிர்க்கலாம்.
அதேபோல, ஒரு மாணவனின் ஆங்கில உச்சரிப்பைக் கேலி செய்வது, அவனுடைய கருத்துகளை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது போன்ற அனுபவங்களும் அவன் வகுப்பில் பேசுவதற்குத் தயங்கும் நிலையை உருவாக்கலாம்.
உளவியலில், ஒருவரின் சமூக அடையாளம் அல்லது பின்னணியை அடிப்படையாகக் கொண்டு அவரைக் குறைத்து மதிப்பிடும் நுட்பமான வார்த்தைகள், செயல்கள் மற்றும் அணுகுமுறைகள் Microaggressions என்று அழைக்கப்படுகின்றன. இவை வெளிப்படையான அவமானப்படுத்துதலாக இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில், சாதாரணமான கேள்வியாகவோ நகைச்சுவையாகவோ வெளிப்படலாம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் முன்முடிவுகளும், அது தொடர்ந்து ஏற்படுத்தும் தாக்கங்களும் கவனிக்கப்பட வேண்டியவை.
குழந்தைகள் தங்களைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறார்கள்?
குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் நிகழ்வுகளை மட்டும் கவனிப்பதில்லை; அவற்றிலிருந்து தங்களைப் பற்றிய புரிதலையும் உருவாக்குகிறார்கள்.
“என்னுடைய உடை மற்றவர்களைப் போல இல்லை.”
“நான் பேசினால் மற்றவர்கள் சிரிப்பார்கள்.”
“என்னுடைய குடும்பத்தைப் பற்றி சொன்னால் என்னைக் குறைவாக நினைப்பார்கள்.”
இதுபோன்ற எண்ணங்கள் சில குழந்தைகளுக்குள் உருவாகலாம். இதனால் அவர்கள் தங்கள் பின்னணியை மறைக்க முயற்சி செய்யலாம்; நண்பர்களுடன் பழகுவதில் தயக்கம் காட்டலாம்; தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக்கூட மற்றவர்களிடம் பகிராமல் இருக்கலாம்.
ஆனால், ஒரு நிகழ்வு குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம், அந்த நிகழ்வோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. அந்த அனுபவத்துக்கு அந்தக் குழந்தை என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பதும் முக்கியம்.
ஒரு குழந்தை தனது உடை, உணவு அல்லது குடும்பப் பின்னணிக்காக மற்றவர்களால் ஒதுக்கப்படுவதை அனுபவிக்கும்போது, “என்னிடம் ஏதோ குறை இருக்கிறதா?” அல்லது “நான் இவர்களைப் போல இல்லாததால்தான் இப்படிச் செய்கிறார்களா?” என்று யோசிக்கலாம். மற்றவர்கள் செய்த செயலுக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது, குழந்தை தன்னைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் சில முடிவுகளுக்கு வரலாம்.
அந்த முடிவுகள் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், குழந்தை அவற்றை உண்மையென நம்பத் தொடங்கினால், அவை தன்னம்பிக்கையையும் மற்றவர்களுடன் பழகும் விதத்தையும் பாதிக்கக்கூடும். ஒரு குழந்தை தன்னைத் தாழ்வாக நினைக்கலாம்; இன்னொரு குழந்தை ஒரு குறிப்பிட்ட குழுவினரைப் பற்றி பொதுவான முடிவுகளுக்கு வரலாம். எனவே, குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதை மட்டும் கேட்பதோடு நின்றுவிடாமல், அந்த அனுபவத்தை அவர்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்வது அவசியம்.
இது குழந்தைகளின் பிரச்சினை மட்டுமல்ல; சமூகத்தின் பிரதிபலிப்பும்கூட!
குழந்தைகள் தங்கள் குடும்பத்திலும் பள்ளியிலும் சமூகத்திலும் நடப்பவற்றைக் கவனித்துக் கற்றுக்கொள்கிறார்கள். பெரியவர்கள் யாரை மதிக்கிறார்கள், யாருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், யாரைப் பற்றி எப்படிப் பேசுகிறார்கள் என்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
ஒரு குழந்தை மற்றொருவரின் மொழியை வைத்து கேலி செய்யும்போது, அது அவர்களுடைய தனிப்பட்ட அணுகுமுறையாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் வீட்டிலோ சமூகத்திலோ கேட்ட வார்த்தைகளையும் கருத்துகளையும் அறியாமலேயே மீண்டும் வெளிப்படுத்தியிருக்கலாம்.
அதனால் குழந்தையை மட்டும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, அந்த அணுகுமுறை எங்கிருந்து வருகிறது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு குழந்தை குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்தவர்களால் சில விஷயங்களைச் செய்ய முடியாது என்றும் தொடர்ந்து கேட்கும்போது, அந்தக் கருத்துகள் அவளுடைய உலகப் புரிதலின் ஒரு பகுதியாக மாறலாம்.
பின்னாளில், அவளும் மற்றவர்களை அதே முன்முடிவுகளின் அடிப்படையில் அணுகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், தான் அனுபவித்த ஒதுக்குதலை மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று நினைத்து, வேறுபாடுகளை மதிக்கவும் கற்றுக்கொள்ளலாம். குழந்தைகளின் எதிர்கால அணுகுமுறையை அவர்களுடைய அனுபவங்கள் மட்டுமே தீர்மானிப்பதில்லை. குடும்பம், நண்பர்கள், ஆசிரியர்கள், சமூகச் சூழல் ஆகிய அனைத்தும் அவர்களுடைய சிந்தனை வளர்ச்சியில் பங்கு வகிக்கின்றன.
மாற்றத்தை எங்கிருந்து தொடங்கலாம்?
குழந்தைகளுக்கு வேறுபாடுகள் இருப்பதை மறைக்கக் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. மாறாக, அந்த வேறுபாடுகளை வைத்து ஒருவரை உயர்வாகவோ தாழ்வாகவோ நடத்தக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.
ஒரு குழந்தை மற்றொருவரின் உணவு, உடை அல்லது மொழியைக் கேலி செய்தால், “அப்படிச் சொல்லாதே” என்று மட்டும் கூறிவிட்டு நகர்ந்துவிடாமல், “அந்த வார்த்தையைக் கேட்டால் அவருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?” என்று கேட்கலாம். மற்றவர்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கலாம்.
ஆசிரியர்கள் வகுப்பறையில் எல்லாக் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய உரையாடல்களில் மற்றவர்களைப் பற்றிப் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கவனிக்கலாம்.
குழந்தைகள் தங்கள் அனுபவங்களைப் பகிரும்போது, அவற்றைச் சிறிய விஷயங்களாகக் கருதாமல் கவனித்துக் கேட்கலாம். “இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே” என்று சொல்வதற்குப் பதிலாக, “உனக்கு என்ன நடந்தது? அது உன்னை எப்படிப் பாதித்தது?” என்று கேட்பது, குழந்தையின் அனுபவத்தைப் புரிந்துகொள்ள உதவும்.
குழந்தைகளுக்கு வேறுபாடுகள் இருப்பது பிரச்சினையல்ல; அந்த வேறுபாடுகளை வைத்து அவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.
நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு கேள்வி, ஒரு நகைச்சுவை அல்லது ஒரு கருத்து, மற்றொரு குழந்தையின் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எப்போதும் நம்மால் அறிய முடியாது.
ஆனால், நம்முடைய வார்த்தைகளையும் செயல்களையும் கவனமாகத் தேர்ந்தெடுக்க முடியும். ஒவ்வொரு குழந்தையும் தனது பின்னணியை மறைக்காமல், தன்னைப் போலவே இருக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதில்தான் உண்மையான மாற்றம் தொடங்குகிறது.
இன்னும் பேசுவோம்...
தொடர்புக்கு: silviaise2021@gmail.com
Edited by ஷாலினி