மதுரையில் இருந்து 2 மணி நேரத்தில் தஞ்சை சென்ற இதயம் - மூளைச்சாவு அடைந்த இளைஞரால் 4 பேருக்கு மறுவாழ்வு

உள்படம்: நித்திஷ்குமார்

உள்படம்: நித்திஷ்குமார்

Updated on
1 min read

மதுரை/ தஞ்சாவூர்: மதுரையில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அவரது இதயம் 2 மணி நேரத்தில் துரிதப் போக்குவரத்து வசதி மூலம் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.

மதுரை நாராயணபுரம் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்த ராஜா மகன் நித்திஷ்குமார்(22). இவர் கடந்த 18-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றபோது வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த நித்திஷ் குமார், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசர விபத்து சிகிச்சைப் பிரிவில் கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர், கடந்த 21-ம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தாய் ஜெயலெட்சுமி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கரு விழிகள், தோல் ஆகிய உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட இளைஞரின் இதயம் அதற்குரிய பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் நேற்று காலை 9 மணிக்கு ஏற்றப்பட்டது.

மதுரையிலிருந்து காவல் துறை உதவியுடன் புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் திருச்சி வழியாக தஞ்சாவூர் மாவட்ட எல்லையான புதுக்குடியிலிருந்து தஞ்சாவூர் போக்குவரத்து ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவலர்கள் வழி ஏற்படுத்தி மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு முற்பகல் 11 மணியளவில் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இதய நோயால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு நோயாளிக்கு உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் அந்த இதயம் பொருத்தப்பட்டது.

மேலும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், மற்றொன்று தனியார் மருத்துவமனைக்கும், கருவிழிகள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தோல் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, நித்திஷ்குமாரின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

<div class="paragraphs"><p>உள்படம்: நித்திஷ்குமார்</p></div>
“அதிமுக இன்னும் கொஞ்சநாள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கவலை” - கனிமொழி எம்.பி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in