உலக கலைச் சந்தையில் கவனம் ஈர்க்கும் குஜராத்தின் ‘பித்தோரா’ ஓவியங்களின் பின்புலமும் சிறப்பும்

உலக கலைச் சந்தையில் கவனம் ஈர்க்கும் குஜராத்தின் ‘பித்தோரா’ ஓவியங்களின் பின்புலமும் சிறப்பும்
Updated on
4 min read

குஜராத்தின் பழங்குடியின மக்களின் புனிதக் கலை மரபான ‘பித்தோரா’ இன்று உலக கலை அரங்கிலும், சர்வதேச சந்தைகளிலும் புதிய கவனத்தைப் பெற்று வருகிறது. ஒருகாலத்தில் மண் சுவர்களில் மட்டுமே வரையப்பட்ட இந்த ஓவியங்கள், தற்போது சர்வதேச கலைச் சந்தைகளிலும், வெளிநாட்டு கண்காட்சிகளிலும், டிஜிட்டல் தளங்கள் வரையிலும் பயணித்துள்ளன.

2026-ஆம் ஆண்டின் வைப்ரன்ட் குஜராத் பிராந்திய மாநாட்டில் (VGRC), மாநிலத்தின் முக்கிய புவிசார் குறியீட்டு (GI) அடையாளங்களில் ஒன்றாக பித்தோரா கலை காட்சிப்படுத்தப்பட உள்ளது. பழங்குடியின மக்களின் நம்பிக்கைச் சடங்காக இருந்த ‘பித்தோரா’ இன்று கலை, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் சந்திக்கும் ஒரு முக்கிய இடமாகவும் மாறியுள்ளது.

இந்த மாநாட்டில் பித்தோரா மட்டுமல்லாமல் மத்திய குஜராத்தின் முக்கிய புவிசார் குறியீட்டு அடையாளங்களான சங்கேடா மரச் சாமான்கள், காம்பே அகேட் கற்கள் உள்ளிட்ட பாரம்பரிய தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் பழங்குடியின கலைகளை சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைகளுடன் இணைக்கும் முயற்சியை குஜராத் அரசு முன்னெடுத்து வருகிறது.

ஆனால், இது ஒரு கலை வடிவத்தின் வெற்றியாக மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தின் நம்பிக்கை, அடையாளம் மற்றும் கலாச்சார நினைவுகளை புதிய காலக்கட்டத்துடன் எவ்வாறு இணைக்கிறது என்பதற்கான சான்றாகவும் திகழ்கிறது.

‘பித்தோரா’ பின்புலம்

குஜராத்தின் சோட்டா உதய்பூர், பஞ்ச்மஹால், வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ரத்வா, பில், பிலாலா, நாயக் சமூகங்களின் வாழ்வியலோடு பித்தோரா கலை பின்னிப் பிணைந்துள்ளது.

ஒரு குழந்தை நோயிலிருந்து குணமடைந்தாலோ, நல்ல மழை பெய்தாலோ, விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தாலோ அல்லது குடும்பத்தின் வேண்டுதல் நிறைவேறினாலோ, பாபா பித்தோரா என்ற தெய்வத்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த ஓவியம் வரையப்படுகிறது. அதனால்தான் பித்தோரா ஓர் அலங்காரக் கலையாக இல்லாமல் காட்சிப் பிரார்த்தனையாக விளங்குகிறது.

ஒரு பாரம்பரிய பித்தோரா ஓவியத்தில் குதிரைகள், சூரியன், சந்திரன், முன்னோர்கள், விலங்குகள், மரங்கள், பறவைகள் மற்றும் கிராம வாழ்க்கையின் பல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு உருவங்களுக்கும், பொருட்களுக்கும், நிறங்களுக்கும் பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. பல ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல, பித்தோரா என்பது ஓர் ஓவியம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் வரலாற்றை வண்ணங்களில் எழுதும் மொழியும் ஆகும்.

பித்தோரா கலையின் வேர்கள் மிகவும் ஆழமானவை. கிழக்கு குஜராத்தின் கொராஜ் மலைப் பகுதிகளில் கண்டறியப்பட்ட பண்டைய பாறை ஓவியங்களுக்கும் இன்றைய பித்தோரா கலையின் குதிரை உருவங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பாறைகளில் வரையப்பட்ட குதிரைகள் இன்று பழங்குடியின வீடுகளின் சுவர்களில் புதிய வடிவத்தில் உயிர் பெற்றிருப்பது போலத் தோன்றும். அதனால்தான் பித்தோரா ஒரு கலை வடிவம் மட்டுமல்லாமல் காலத்தைத் தாண்டி உயிர் வாழும் கலாச்சார நினைவகமாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழகத்துக்கு ஏன் இது நெருக்கமானது?

தமிழக வாசகர்களுக்கு பித்தோரா புதிய கலை வடிவமாகத் தோன்றலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள நம்பிக்கைகளும் சடங்குகளும் தமிழ்நாட்டின் கிராமிய மரபுகளோடு பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது. தமிழகத்தின் பல கிராமங்களில் அய்யனார் கோயில்களைச் சுற்றி நிற்கும் மண் குதிரைகளை நினைவுகூருங்கள். வேண்டுதல் நிறைவேறியபின் தெய்வத்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக அர்ப்பணிக்கப்படும் அந்தக் குதிரைகள் போலவே, பித்தோரா ஓவியங்களில் குதிரைகள் முக்கியமான குறியீடுகளாக குறிப்பிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில் களிமண்ணாலும், குஜராத்தில் வண்ணங்களாலும் குதிரைகள் உருவாகின்றன. ஆனால் அவற்றின் பின்னால் இருக்கும் நம்பிக்கை ஒன்றுதான். மொழிகள் மாறலாம், ஏன் நிலங்கள் கூட மாறலாம். ஆனால், மக்களின் நன்றியுணர்வும் தெய்வ நம்பிக்கையும் மாறுவதில்லை என்பதை இந்த ஒற்றுமைகள் மீண்டும் நினைவூட்டுகின்றன.

உலகச் சந்தைக்கு...

ஒரு காலத்தில் பழங்குடியின வீடுகளின் மண் சுவர்களில் மட்டுமே உயிர் வாழ்ந்த ‘பித்தோரா’ இன்று உலக கலைச் சந்தைகளில் இடம்பிடித்துள்ளது. இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழவில்லை. மரபு, சந்தை, அரசு ஆதரவு மற்றும் கலைஞர்களின் முயற்சி ஆகியவை இணைந்தபோதுதான் இந்தப் பயணம் சாத்தியமானது.

பித்தோரா கலையின் மிகப் பெரிய சவால் நவீனமயமாக்கல்தான். மண் வீடுகள் கான்கிரீட் கட்டிடங்களாக மாறியபோது, இந்தக் கலையின் இயற்கையான கேன்வாஸே மறையத் தொடங்கியது போல் ஆனது. சுவர் மறைந்தபோது, ஓவியமும் மறையும் அபாயம் உருவானது. அந்த நேரத்தில்தான் கலைஞர்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்தனர். மண் சுவர்களிலிருந்து காகிதங்கள், துணிகள், கேன்வாஸ்களை நோக்கி பித்தோராவை கொண்டு சென்றனர்.

இன்று சிறிய பித்தோரா ஓவியங்கள் ரூ.1,250 முதல் பெரிய ஓவியங்கள் ரூ.15,000-க்கும் மேல் விலையை அடைகின்றன. லண்டன், துபாய் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலைக் கண்காட்சிகளிலும் பித்தோரா ஓவியங்கள் முக்கிய இடம்பிடித்தன.

பித்தோரா கலையின் இந்த மாற்றம் எளிதாக நிகழவில்லை. பழங்குடியின சமூகத்தின் பல மூத்தவர்கள், புனிதச் சடங்குகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஓவியங்கள் வெளிச்சந்தைக்கு வருவது குறித்து ஆரம்பத்தில் அச்சம் கொண்டிருந்தனர்.

ஆனால், இளம் தலைமுறை கலைஞர்கள் இதனை வேறு கோணத்தில் பார்த்தனர். அவர்களின் பார்வையில், கேன்வாஸில் பித்தோராவை உருவாக்குவது நவீனத்தை நோக்கி கலையை கொண்டு செல்லும் வடிவமாக தெரிந்தது. சுவர்கள் மறைந்துவிட்டால் கலையும் மறைந்துவிடும். எனவே, புதிய ஊடகங்களை ஏற்றுக்கொள்வதே மரபின் தொடர்ச்சிக்கான வழி என்று அவர்கள் கருதினார்கள்.

பித்தோரா கலையின் உலகப் பயணத்தைப் புரிந்துகொள்ள பத்மஸ்ரீ விருது பெற்ற பரேஷ் ரத்வாவின் வாழ்க்கைப் பயணம் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 25 வயதில் பித்தோரா கலையை தீவிரமாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய அவர், பின்னர் முழுநேர கலைஞராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். கிராமத்து சுவரில் தொடங்கிய அவரது பயணம், 2023-ஆம் ஆண்டின் பத்மஸ்ரீ விருதில் புதிய உயரத்தை எட்டியது.

ஜி20 உச்சி மாநாட்டில் வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்தியா வழங்கிய பரிசுப் பொருட்களில் அவரது பித்தோரா ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. ஒரு காலத்தில் கிராமங்களுக்குள் மட்டுமே இருந்த கலை, உலகத் தலைவர்களின் கைகளில் சென்றடைந்தது, பித்தோராவின் உலகப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.

2021-ஆம் ஆண்டு கிடைத்த புவிசார் குறியீட்டு (GI) அங்கீகாரம், பித்தோரா கலையின் வரலாற்றில் முக்கிய திருப்பமாக அமைந்தது. இதன்மூலம், பித்தோரா என்ற பெயரில் வெளிப்புற நிறுவனங்கள் போலியான தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தடுக்க சட்டரீதியிலான பாதுகாப்பு கிடைத்துள்ளது. கலைஞர்களின் உழைப்பும் அடையாளமும் பாதுகாக்கப்படுவதற்கான முக்கியமான கருவியாக புவிசார் குறியீடு மாறியுள்ளது.

பித்தோரா கலையின் வெற்றிப் பயணம் ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது. தெய்வங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு புனிதக் கலை உலகச் சந்தையில் வெற்றி பெறும்போது, அது பாதுகாக்கப்படுகிறதா அல்லது அதன் அடிப்படை அர்த்தம் மாறுகிறதா என்பதே இன்று பித்தோராவைச் சுற்றி எழும் முக்கியமான விவாதமாக உள்ளது.

இன்று ஆயிரக்கணக்கான பழங்குடியின குடும்பங்கள் இந்தக் கலையின் மூலம் புதிய வருமான வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். அரசு அமைப்புகள், கைவினைப் பொருள் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் இதற்கான புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

ஆனால் மறுபுறம், முழுமையான பாரம்பரிய சடங்கு முறையில் பித்தோரா ஓவியங்களை உருவாக்கும் ‘லக்காரா கலைஞர்கள்’ மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலகம் இந்தக் கலையை அதிகமாகக் கவனிக்கும் நேரத்திலேயே, அதன் பாரம்பரிய வடிவத்தை முழுமையாக அறிந்தவர்கள் குறைந்து வருவது வருத்தமளிக்கும் தகவலாகும்.

மாற்றம் அவசியமா?

பித்தோரா ஓவியங்களை கவனமாகப் பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயம் தெரியும். பாபா பித்தோராவின் குதிரைகளுடன் சில ஓவியங்களில் ரயில்கள், டிராக்டர்கள், மின்கம்பங்கள், நவீன வாகனங்கள் போன்றவையும் இடம்பெறுகின்றன. இதனை சிலர் மரபின் சிதைவு எனக் கருதலாம். ஆனால் ஆய்வாளர்கள் வேறுவிதமாகப் பார்க்கின்றனர்.

அவர்களின் கருத்துப்படி, பித்தோரா எப்போதுமே ஓர் உயிருள்ள காட்சிப் பதிவேடாகும். சமூகத்தின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்கிறதோ, அது ஓவியத்திலும் பிரதிபலிக்கிறது. மாற்றங்களை ஏற்காத நாளில்தான் பித்தோரா உயிரற்ற அருங்காட்சியகப் பொருளாக மாறக்கூடும் என்கின்றனர்.

பித்தோரா கலையின் பயணம் தமிழகத்துக்கும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. அய்யனார் குதிரைகள், கிராமிய சுவர் ஓவியங்கள், நாட்டுப்புறக் கைவினைகள் உள்ளிட்ட நமது பாரம்பரிய மரபுகள் நாளைய உலகில் எவ்வாறு உயிர்வாழப் போகின்றன? அவற்றை அப்படியே உறைய வைத்துப் பாதுகாக்க வேண்டுமா? இல்லை, புதிய தலைமுறையுடன் உரையாடும் வகையில் மாற்றி அமைக்க வேண்டுமா? பித்தோரா அதற்கான ஒரு சாத்தியமான பதிலை முன்வைக்கிறது.

2026 வைப்ரன்ட் குஜராத் பிராந்திய மாநாடு (VGRC) போன்ற அரசின் முயற்சிகள் பித்தோரா கலைக்கு புதிய சந்தைகளையும் உலகளாவிய வாய்ப்புகளையும் உருவாக்கலாம். ஆனால், ஒரு கலை வடிவத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பது சந்தைகள் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வாழ வைக்கும் சமூகமும், அதன் கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கலைஞர்களும்தான்.

ஒரு சமூகத்தின் கலை அழிவது என்பது ஓர் ஓவியம் மறைவது மட்டுமல்ல. அது ஒரு சமூகத்தின் வரலாறு, நினைவுகள் மற்றும் வாழ்வியல் அறிவு மறைவதற்குச் சமமானதாகும். மண் சுவர்களில் பிறந்த அந்த வண்ணக் குதிரைகள் இன்று உலகச் சந்தையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

உலகம் அவற்றை கலைப் படைப்புகளாகக் காணலாம். ஆனால், அந்தப் பழங்குடியின மக்களுக்கு அவை ஓர் ஓவியம் மட்டுமல்ல. அவை அவர்களின் வரலாறு, நம்பிக்கை, அடையாளம் மற்றும் தலைமுறைகளின் நினைவுகளும் ஆகும்.

மண் சுவர்களில் தொடங்கிய அந்த வண்ணக் குதிரைகளின் பயணம் இன்று உலக அரங்கத்தை எட்டியிருக்கலாம். ஆனால், அவற்றின் உண்மையான இலக்கு, அந்தக் கலையின் ஆன்மாவை அடுத்த தலைமுறைக்கும் உயிருடன் கொண்டு செல்வதில்தான் அடங்கியுள்ளது என்கின்றனர் கலை ஆர்வலர்கள்.

உலக கலைச் சந்தையில் கவனம் ஈர்க்கும் குஜராத்தின் ‘பித்தோரா’ ஓவியங்களின் பின்புலமும் சிறப்பும்
ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்ப அலை - வெந்து தணியாத துயரமும் பின்புலமும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in