

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தின் சுஜன்பூர் மாவட்டம் கர்தோலி கிராமத்தைச் சேர்ந்தவர் பல்தேவ் குமார். முன்னாள் ராணுவ வீரரான இவர் 15 ஆண்டுகளுக்கு முன் வேலைதேடி வீட்டை விட்டு வெளியேறினார்.
பிறகு இவரை காணவில்லை. அவரை கண்டுபிடிக்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது குடும்பத்தினர், பல்தேவ் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.
இந்நிலையில் ராஜஸ்தானின் பிகானீர் நகரில் உள்ள ஒரு குடும்பத்தினர் அண்மையில் ஒரு நபரின் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, அவரை அடையாளம் காண உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்த வீடியோ சுஜன்பூரில் சப்னா குமாரி என்பவருக்கு எட்டியது. அதை அவர் உள்ளூர் குழுக்களில் பகிர்ந்து கொண்டார். அதை பல்தேவ் குமாரின் குடும்பத்தினரும் பார்த்து முதலில் திகைத்துப் போயினர். இறந்திருக்கலாம் என கருதப்பட்ட தங்கள் மகன் உயிருடன் இருப்பதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். பிறகு பல்தேவின் அடையாளத்தை உறுதி செய்து கொண்ட குடும்பத்தினர் பிகானீர் புறப்பட்டு சென்றனர். அங்கு பல்தேவை நேரில் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
ராஜஸ்தான் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அவரைப் பராமரித்து வருவதாக தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு பல்தேவை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.