

ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி ராஜன் கண் வங்கி, ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் (தி.நகர்) சார்பில் எலியட்ஸ் கடற்கரையில் கண்தான விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
சென்னை: கருவிழி தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், கண்தானம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டார்.
தேசிய கண்தான இருவார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி ராஜன் கண் வங்கி, ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் (தி.நகர்) சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கண்தான விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேரணியை தொடங்கி வைத்தார். ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் மோகன் ராஜன், ரோட்டரி ராஜன் கண் வங்கி இயக்குநர் சுஜாதா மோகன், ரோட்டரி மாவட்ட கவர்னர் ராம் துவ்வூரி, நடிகர் சாந்தனு, கீர்த்தி சாந்தனு உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
அப்போது, அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த பேரணியின் முக்கிய நோக்கம், பொதுமக்களிடையே கண்தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க உதவும் வகையில் கண்தானம் செய்வதற்கு உறுதிமொழி அளிக்க மக்களை ஊக்குவிப்பதும் ஆகும்.
கண்தானம் என்பது ஒரு சிறந்த விஷயம். எத்தனையோ நபர்கள் கண்பார்வை இல்லாமல் இருக்கிறார்கள். ஒருவர் கண்தானம் வழங்குவதன் மூலம் இரண்டு பேருக்கு நம்மால் பார்வையை வழங்க முடியும். மறைந்த இயக்குநரும், திரைப்பட நடிகருமான பாக்யராஜ் கண்தானம் செய்தார்.
அதுபற்றி தகவல் தெரிந்த பிறகு, 600 பேர் கண்தானம் செய்ய முன்வந்துள்ளனர். கருவிழி தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கண்தானம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் பொதுமக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விளையாட்டு போட்டி:
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகில் நேற்று நடந்த மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். போட்டிகளில் பங்கேற்ற சிறப்பு குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும் பாராட்டினார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். இது சிறப்பு குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பாக அமையும். விளையாட்டு ஒன்றுதான் அவர்களுக்குள் இருக்கும் ஆற்றலை சரியாக பயன்படுத்த உதவும். அவர்களுடைய மனம் இதன் மூலம் மகிழ்ச்சி அடைந்து, புத்துணர்வு பெறும்” என்றார்.