

மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க நேற்று ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். களத்தில் காளைகளின் பாய்ச்சலையும், காளையரின் வீரத்தையும் பார்த்து அவர்கள் மெய்சிலிர்த்து போயினர்.
பொதுவாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் தாமதமின்றி அவிழ்க்கப்படும். நேற்று வாடிவாசலில் அவிழ்க் கப்பட்ட பல காளைகள் வாடிவாசலை விட்டு வெளியே வந்து அங்கேயே நின்றன. இதனால் அடுத்தடுத்து காளைகளை அவிழ்ப்பதில் தாமதம் ஏற்பட்டது. அது தெரி யாமல் அடுத்த காளையை அவிழ்த்து விட்டதால் இரு காளைகளும் மோதும் சூழல் ஏற்பட்டது. போலீஸார் வந்து அந்த காளைகளை விரட்டினர்.
பரிசு வழங்குவதில் குழப்பம்: இது தவிர வாடிவாசல் தாண்டி வெளியேறிய காளைகள் பல மீண்டும் வாடிவாசல் நோக்கி திரும்ப வந்ததால் அதே நேரத்தில் வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளையையும் அடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காளைகளை சோதனை செய்து அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், விழா குழுவினர் காளைகளை விரைந்து அவிழ்க்குமாறு மைக்கில் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
நேற்று ஒரு காளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் வாடிவாசல் வழியே வெளியே வந்ததால் வெற்றி பெற்ற காளைக்கு பரிசு வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. காளையுடன் வரும் உரிமையாளர் வாடிவாசல் எல்லையை தாண்டித் தான் நிற்க வேண்டும். நேற்று பல உரிமையாளர்கள் வாடிவாசல் அருகேயே நின்று கொண்டிருந்தனர்.
காலை 7 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடந்த நான்கு சுற்று போட்டிகளில் பிடிபடாத காளைகள் தான் அதிகளவில் பரிசுகளை பெற்றன . இதனால் 'காளைகளை அடக்கி அலங்காநல்லூரின் மானத்தை காப்பாற்றுமாறு' விழாக் குழுவினர் மைக்கில் கூறியபடி இருந்தனர்.
5-வது சுற்றில் இருந்து காளைகளை பிடித்து மாடுபிடி வீரர்கள் பரிசு பெறுவது அதிகரித்தது. கொம்புகளை யவர்களுக்கும், கூட்டு சேர்ந்து திமிலை பிடித்து பிடித்து காளைகளை அடக்கி அடக்கியவர்களுக்கும் பரிசு வழங்காமல் வெறும் 'பொங்கல் வாழ்த்து' மட்டும் கூறப்பட்டது.
விஐபிக்கள் காளைகள்: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் கே.ராஜு, இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகர், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகி அண்ணாநகர் பிரேம், நடிகர் சூரி, பெண் காவல் ஆய்வாளர் அனுராதா மற்றும் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன் மனைவி அனுராதா பெயர்களில் காளைகள் அவிழ்க்கப்பட்டன.
இந்த காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்றன. அமைச்சர் பி. மூர்த்தியின் சகோதரர் வெளிச்சநத்தம் சுரேந்திரனின் காளை 10 நிமிடத்துக்கு மேல் நின்று விளையாடியது. அலங்காநல்லூரைச் சேர்ந்த பாலா என்பவரின் காளையும் வாடிவாசலில் நின்று விளையாடியது.
மக்கள் வரவேற்பு: அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சி முன்னாள் தலைவர் சேது சீனிவாசன் கூறுகையில், முதல்வர் அலங்கா நல்லூரில் நேற்று அறிவித்த 2 திட்டங்களும் ஜல்லிக்கட்டை காத்து வீரர்களை ஊக்குவிக் கும் அறிவிப்பாகும்.
ஜல்லிக்கட்டு காளை களை வளர்க்கவும், பராமரிக்கவும் அதிக செலவாகும். அதிலும் சிகிச்சை அளிக்கவும் செலவு அதிகம். அத்தகைய உயர்தர சிகிச்சைக்காக ரூ.2 கோடியில் சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைப்பது இப்பகுதி மக்களுக்கு வரப் பிரசாதமாகும். இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
'ஆண்டுதோறும் வருவோம்': அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வளரி கூறுகையில், முதன்முறையாக 10-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டை பார்க்க வந்தோம். இப்போட்டி பார்க்க த்ரில்லாக இருந்தது. வீரர்கள் காளைகளை அடக்கும் காட்சி பார்க்க அழகாக உள்ளது. எங்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது என்றார்.
அமெரிக்காவை சேர்ந்த டெலியாகு கூறுகையில், ஆசிய நாடுகளை சுற்றிப் பார்க்க வந்துள்ளேன். பொங்கல் பண்டிகையையொட்டி நடக்கும் பாரம்பரிய ஜல்லிக்கட்டை முதல் முறையாக பார்க்கிறேன். இதைப் பார்த்து மெய்சிலிர்த்து போனேன். வாடிவாசலில் இருந்து வேகமாக வரும் காளைகளை உயிரை பணயம் வைத்து வீரர்கள் பிடிக்கின்றனர். இவ்வளவு கூட்டமாக அமர்ந்து பார்ப்பதும், ரசிப்பதும் வியப்பாக இருந்தது. வீரர்களின் தைரியம் போற்றத்தக்கது. இனிமேல் ஆண்டுதோறும் பார்க்கும் எண்ணத்தை தூண்டியுள்ளது என்றார்.