

இன்றைய குழந்தைகளிடம் ஏதாவது ஒரு விஷயத்தைக் கேட்டால், “கூகுளில் தேடிப் பாருங்கள்”, “யூடியூபில் வீடியோ இருக்கிறது”, “சாட் ஜிபிடியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று பதில் கிடைக்கிறது. உண்மையில், தொழில்நுட்ப வளர்ச்சி நமக்குத் தகவல்களை எளிதாக அணுகும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. ஒரு சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ளவோ, ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளவோ இனி யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறைந்திருக்கிறது.
ஆனால், இந்த வசதிக்குப் பின்னால் கவனிக்க வேண்டிய ஓர் உளவியல் பிரச்சினை இருக்கிறது. அதுதான் எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டும் என்ற சமூக அழுத்தம்.
தெரிந்துகொள்ளும் தேடலுக்கு முடிவே இல்லையா?
பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை எடுத்துக்கொள்வோம். அவனுக்குப் புதிதாக ஒரு திறமையைக் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. நண்பர்களில் ஒருவர் கிட்டார் கற்றுக்கொள்கிறார்; இன்னொருவர் நடனம் கற்றுக்கொள்கிறார்; மற்றொருவர் புதிய தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொள்கிறார். தனக்கும் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து ஏஐ-யிடம் ஆலோசனை கேட்கிறான்.
அதற்கு ஏஐ பல்வேறு திறன்களையும், அவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வழிகளையும் பரிந்துரைக்கிறது. அவற்றைப் பார்த்ததும் இன்னும் பல வாய்ப்புகள் இருப்பது அவனுக்குத் தெரியவருகிறது. ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்குகிறான். ஒரு கட்டத்தில், தனக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுப்பதைவிட, கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது.
இங்கே கவனிக்க வேண்டியது, அவனுடைய ஆர்வம் மட்டுமல்ல. எப்போது தகவல்களைத் தேடுவதை நிறுத்த வேண்டும், எப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற புரிதலும் முக்கியமானது.
தொழில்நுட்பம் மாறியிருக்கிறது; சமூக எதிர்பார்ப்புகள் தொடர்கின்றன!
முன்பெல்லாம் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது நண்பர்களிடம் கேட்போம். அவர்கள் தங்களுடைய அனுபவம், அறிவு, பார்த்த விஷயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பார்கள். அவர்களுடைய அனுபவத்துக்கும், அறிவுக்கும் இயல்பாகவே சில எல்லைகள் இருக்கும்.
இன்றைய ஏஐ கருவிகள் ஒரே கேள்விக்கு பல்வேறு சாத்தியமான பதில்களையும் மாற்றுத் தேர்வுகளையும் முன்வைக்கின்றன. நாம் இதுவரை யோசித்துப் பார்க்காத வாய்ப்புகளைக்கூட அவை அறிமுகப்படுத்துகின்றன. இதனால் ஒரு புதிய மனநிலை உருவாகலாம்.
“நான் தேர்ந்தெடுத்திருப்பது சரிதானா? இதைவிடச் சிறந்த வாய்ப்பு இருக்கிறதா? எனக்குத் தெரியாமல் இன்னும் ஏதாவது இருக்கிறதா?” என்ற கேள்விகள் தொடர்ந்து எழலாம்.
பல தேர்வுகள் கிடைப்பது நல்லதுதான். ஆனால், ஒவ்வொரு தேர்வையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தால், நமக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதிலேயே சிரமம் ஏற்படலாம். தகவல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தெளிவை அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
FOMO: நான் மட்டும் எதையோ தவறவிடுகிறேனா?
FOMO (Fear of Missing Out) என்ற சொல்லை இன்று பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், அதன் பின்னால் இருக்கும் உளவியல் அனுபவத்தைப் புரிந்துகொள்வது அவசியம். மற்றவர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயத்தைத் தானும் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம் மட்டுமல்ல இது. மற்றவர்களால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ, ஒரு குழுவில் தனக்கான இடத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சமும் இதில் அடங்கியிருக்கிறது.
உதாரணமாக, நண்பர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூக வலைதளப் போக்கைப் பின்பற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் போக்கில் ஒருவருக்கு உண்மையான ஆர்வம் இல்லாவிட்டாலும், அதில் பங்கேற்கவில்லை என்றால் நண்பர்களின் உரையாடலில் தன்னால் கலந்துகொள்ள முடியாதோ, மற்றவர்கள் தன்னைப் புறக்கணித்துவிடுவார்களோ என்று நினைக்கலாம். இதனால் தனக்குப் பிடிக்காத ஒன்றைக்கூட முயற்சி செய்யத் தொடங்கலாம்.
அதேபோல், நண்பர்கள் வெளியே செல்லும் புகைப்படங்களையும், புதிய அனுபவங்களையும் சமூக வலைதளங்களில் பார்க்கும்போது, தன்னுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதாகச் சிலர் உணரலாம். மற்றவர்களின் வாழ்க்கையுடன் தன்னுடைய வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பது அதிகரிக்கலாம்.
இந்த அனுபவம் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் இதுபோன்ற பதிவுகளைப் பார்த்துவிட்டுக் கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால், சிலருக்கு அதுவே நீண்ட நேரச் சிந்தனையாகவும், பதற்றமாகவும், தங்களைப் பற்றிய அதிருப்தியாகவும் மாறலாம். குறிப்பாக, ஏற்கெனவே சமூக அங்கீகாரம் குறித்த கவலை கொண்டிருப்பவர்களுக்கு இந்த அனுபவம் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதனால், குழந்தைகள் தங்களுடைய விருப்பங்களின் அடிப்படையில் முடிவெடுப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தங்களுடைய தேர்வுகளை அமைத்துக்கொள்ளத் தொடங்கலாம்.
ஒவ்வொரு முடிவுக்கும் உறுதிப்படுத்துதல் தேவையா?
ஒரு மாணவன் தனக்குப் பொருத்தமான ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். அதற்காக ஏஐ-யிடம் ஆலோசனை கேட்கிறான். ஒரு பரிந்துரை கிடைத்ததும், “இது சரியாக இருக்குமா?”, “இதைவிட வேறு ஏதாவது இருக்கிறதா?”, “இதைச் செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்று மீண்டும் மீண்டும் கேட்கிறான்.
இத்தகைய தொடர்ச்சியான உறுதிப்படுத்தலை நாடும் பழக்கத்தை உளவியலில் Reassurance Seeking என்கிறோம். ஒரு முடிவை எடுத்த பிறகும் அது சரிதானா என்று மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்வது தற்காலிகமாக நிம்மதியை அளிக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் வெளிப்புற உறுதிப்படுத்தலை எதிர்பார்த்தால், சொந்த முடிவுகளின் மீது நம்பிக்கை வைப்பது கடினமாகலாம்.
இங்கே ஏஐ-யிடம் கேள்வி கேட்பது தவறு என்பதல்ல. அந்தப் பதில்களை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். ஒரு பரிந்துரையைப் பெற்றுக்கொள்வதற்கும், அந்தப் பரிந்துரையைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று நினைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
தெரியாததை ஏற்றுக்கொள்வதும் ஒரு திறன்தான்!
எல்லாவற்றையும் தெரிந்துகொள்வது சாத்தியமில்லை என்பதைப் பதின்பருவத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அதற்காகக் கூச்சப்படவோ, தாழ்வாக நினைக்கவோ தேவையில்லை. தெரியாததை ஒப்புக்கொள்வது பலவீனம் அல்ல. கற்றுக்கொள்வதற்கான முதல் படி அதுவே.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளிடம் எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, கிடைக்கும் தகவல்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பதற்கும், சந்தேகங்களை வெளிப்படுத்துவதற்கும், தெரியாத விஷயங்களை ஒப்புக்கொள்வதற்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தைத் தவிர்ப்பது தீர்வல்ல. கூகுள், யூடியூப், ஏஐ போன்றவற்றைப் பயன்படுத்துவது தவறுமல்ல. ஆனால், அவற்றின் உதவியுடன் நம்முடைய சிந்தனையை வளர்த்துக்கொள்கிறோமா அல்லது ஒவ்வொரு சிறிய விஷயத்துக்கும் அவற்றின் பதில்களையே எதிர்பார்க்கிறோமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
உலகில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். அவற்றை ஒரே நாளில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்குத் தெரிந்திருப்பதெல்லாம் நமக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
எல்லாவற்றையும் தெரிந்திருப்பதுதான் அறிவு என்று நினைக்க வேண்டாம். எதைத் தெரிந்துகொள்ள வேண்டும், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும், எப்போது தேடுவதை நிறுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதிலும் அறிவு இருக்கிறது.
இன்னும் பேசுவோம்...
தொடர்புக்கு: silviaise2021@gmail.com
Edited by ஷாலினி